வதந்திக்கு தூபம்போடும் தினமலர்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? – ஆதனூர் சோழன்

போலியான வீடியோக்களை பரப்பி, மிகப்பெரிய கலவரத்தை உருவாக்க நடைபெற்ற சதியை தமிழ்நாடு அரசு திறமையாக முறியடித்திருக்கிறது.

மாநிலங்களுக்கு இடையிலான உறவுகளை நாசம் செய்யும் வகையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவன் இதற்கு தொடக்கமாக இருந்திருக்கிறான். அதையும் அறிந்து அவனை கைது செய்ய தமிழ்நாடு போலீஸார் அங்கு விரைந்திருக்கின்றனர்.

இப்படிப்பட்ட வதந்தி பரப்பும் சதிகாரர்களை முச்சந்தியில் தூக்கிலிட்டால்கூட பரவாயில்லை என்று தோன்றுகிறது. அவனுடைய வதந்தியை உடனடியாக அம்பலப்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத்தவரின் நலன்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுத்த முதலமைச்சரை பாராட்டுகிறோம்.

ஆனால், இந்த விவகாரம் விரைவாக அடக்கப்பட்டிருப்பது இங்கே இருக்கிற பாஜக மற்றும் பாஜக ஆதரவு ஆட்களுக்கு விரக்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக தினமலருக்கு தாங்கவே முடியாத கடுப்பாக இருக்கிறது. நேற்றுமுதல் வதந்தியை பரப்புவோருக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. முதலமைச்சரே கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

எல்லா ஊடகங்களும் வட மாநிலத்தவர்களுக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை. அவர்கள் சொந்த மாநிலங்களில் ஹோலி பண்டிகையை கொண்டாடவே கூட்டமாக செல்கிறார்கள் என்பதை தெளிவு படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால், இன்றைய தினமலர் இந்த உண்மையை பட்டும் படாமலும் சொல்லிவிட்டு, பீதியால் அவர்கள் வெளியேறுவதைப் போல செய்தி வெளியிட்டு இருக்கிறது.

முதல்பக்க செய்தியில் ரயில் நிலையத்தில் குவிந்த வட மாநிலத்தவர் என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் வடமாநிலத்தவரிடம் போலீஸார் பேச்சு நடத்தினர் அப்போது…

“இங்கு எங்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறியவர்கள், பின் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு செல்வதாக கூறினர்” என்று விஷத்தை கோர்த்து விட்டிருக்கிறது.

அடுத்த தலைப்பில் பார்த்தால், வட மாநிலத்தவர் விவகாரத்தில் விரைவான தீர்வு கிடைக்குமா? என்று, பிரச்சனை இன்னும் தீவிரமாக இருப்பதைப் போல செய்தியை வில்லங்கமாக எழுதியிருக்கிறது தினமலர்.

முதலமைச்சரின் அறிக்கையையும், அண்ணாமலையின் அறிக்கையையும் தினமலர் வெளியிட்டிருக்கும் பாணியே அந்த பத்திரிகையின் உள் நோக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

அண்ணாமலை தனது அறிக்கையில் எதையெல்லாம் சொல்லாக்கூடாதோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, அரசும் போலீசும் மக்களும் ஆதரிக்கவில்லை என்கிறார்.

மொத்தத்தில் தினமலர் வதந்தியை மேலும் தூண்டிவிடுவதைப் போலவே செய்தி வெளியிட்டிருக்கிறது.

குறிப்பாக, இந்த வதந்திக்கு முக்கியமான காரணமான உத்தரப்பிரதேச பாஜக நிர்வாகியைக் குறித்து செய்தியே இல்லை.

எல்லா பத்திரிகைகளும் அரசாங்கத்தின் விரைவான நடவடிக்கையையும், பாதுகாப்பு நடவடிக்கையையும், முதலமைச்சரின் எச்சரிக்கையையும் பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருக்கின்றன. போஸ்டர்களிலும் அதையே செய்தியாக்கி இருக்கின்றன.

ஆனால், தினமலர் மட்டுமே வட மாநிலத்தவர் விவகாரம் விஸ்வரூபம் என்று பீதியை கிளப்பும் வகையில் செய்தி வெளியிட்டிருக்கிறது.

தினமலர் இப்படி என்றால் அர்ஜுன் சம்பத் போட்டிருக்கிற ட்வீட் பெரிய பதட்டத்தை உருவாக்கும் வகையில் இருக்கிறது. தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் ட்வீட் செய்துவரும் இதுபோன்ற ஆட்களை வெளியில் விட்டு வைத்திருப்பது ஆபத்து என்பதை அரசு உணர வேண்டும்.

இப்படிப்பட்ட ஆட்களுக்கு சமூக வலைத்தளங்களில் சரியான பதிலடி கொடுக்கிறார்கள். பாண்டே, எச்.ராஜா போன்ற பிகாரிகள் தமிழ்நாட்டில் வந்து தமிழர்களையே கேவலமாக பேசும் நிலை இருக்கிறது. தமிழர்களைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை வளமாக்கி கொண்ட இவர்களை விட வடமாநிலத்தவர்களின் பாதுகாப்புக்கு வேறு உதாரணம் தேவையில்லை என்று பதிவுகளில் பின்னி எடுக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *