செயல் புயல் ஸ்டாலின்! – ஆதனூர் சோழன்

Stalin

ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று கலைஞர் குறிப்பிடுவது வழக்கம்.

கருவறை வாசம் மறைவதற்குள் சிறையறை வாசத்தை நுகர்ந்தவர் ஸ்டாலின்.

பிறந்த குழந்தையாய் தந்தை அடைக்கப்பட்டிருந்த சிறைக்குள் நுழைந்தவர் ஸ்டாலின். மாபெரும் அரசியல் இயக்கத்தில் சிறைவாசம் தவிர்க்க முடியாதது என்பதை குழந்தை பருவத்திலேயே அறிந்தவர் ஸ்டாலின்.

அவர் பிறந்த ஆண்டில்தான் தலைவர் கலைஞரின் போராட்ட உத்தியின் வேகத்தால் திமுகவின் போர்க்குணத்தை தமிழ்நாட்டு மக்கள் அறிந்தார்கள்.

பேரறிஞர் அண்ணா கலைஞரிடம் ஒப்படைத்த வேலை என்ன தெரியுமா? கல்லக்குடியில் ரயில் மறியல் போராட்டத்துக்கு தலைமை ஏற்க வேண்டும் என்பதுதான்.

அந்த போராட்டத்தை பங்கேற்க வருகிற தோழர்களுடன் சாதாரணமாக நடத்தி, கைதாகி இருக்கலாம் கலைஞர். ஆனால் அந்த போராட்டத்துக்கான தயாரிப்பு வேலையில் பல நாட்கள் ஈடுபட்டிருந்தார் கலைஞர். கட்சிக்காரர்கள் மட்டுமின்றி, கட்சிக்கு அப்பாற்பட்ட மக்களிடமும் போராட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கி பிரச்சாரம் செய்திருந்தார். வெறும் ரயில் மரியலாக இல்லாமல், தமிழுக்காக தலையையும் கொடுக்க தயார் என்ற மனநிலையை உருவாக்கினார்.  ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து போராட்டத்தின் வேகத்தை அதிகரித்தார் கலைஞர்.

இதையடுத்தே தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கல்லக்குடியில் போலீஸ் அடக்குமுறை கொடூரமாக இருந்தது. கைது எண்ணிக்கையும் கூடுதலாகியது.

கலைஞருக்கு கடுங்காவல் சிறை, தனிமைச்சிறை என்று தண்டனை விதிக்கப்பட்டது.

அதுதான் கலைஞரின் அரசியலுக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது. தந்தையைப் போலவே, ஸ்டாலினின் அரசியல் அடித்தளமும் கொடூரமான சிறை அடக்குமுறைகளால் கட்டி எழுப்பப்பட்டது.

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த முக்கியமான தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கலைத்த இந்திரா, கலைஞரை கைதுசெய்ய உத்தரவிடவில்லை. மாறாக, அவருடைய மகன் ஸ்டாலினை கைது செய்ய உத்தரவிட்டார்.

திமுகவுக்கு இந்திரா செய்த மிக நல்ல காரியம் அதுதான். ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவனை அன்றைக்கே அவர் அடையாளம் காட்டினார். கலைஞரே நினைத்துப் பார்க்காத அளவுக்கு அரசியலில் தனது உழைப்பால் மட்டுமே தனக்கான இடத்தை பெற்றார் ஸ்டாலின்.

இளைஞர் அணிச் செயலாளராய், கழக அமைப்புகளுக்கு நிகராக இளைஞர் அணி கிளைகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு முழுவதும் அலைந்தார் ஸ்டாலின்.

கலைஞரின் முதுமைப் பருவத்தில் திமுகவின் பிரச்சார பீரங்கியாக, தமிழ்நாடு முழுவதும் நமக்குநாமே திட்டத்தை வகுத்து தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கட்சித் தொண்டர்களைச் சந்தித்து புதிய நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சியவர் ஸ்டாலின்.

அந்த பயணத்திலேயே தமிழ்நாட்டின் அனைத்து பகுதி மக்களையும் சந்தித்து அவர்களின் மனநிலையை அறிந்தார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் மொத்த தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகளும் திமுகவுக்கு எதிராக களத்தில் இருந்தன. ஆனாலும், வெறும் ஒன்றரை சதவீத வாக்குகள் வித்தியாசத்தில், மத்திய அரசின் சதியின் உதவியால் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வரும் வாய்ப்பை இழந்தது.

அன்றைக்கே செயல் புயலாய் தமிழ்நாட்டு மக்களை சந்தித்து தனது ஆற்றலை நிரூபித்தார் ஸ்டாலின். தமிழ்நாட்டு வரலாற்றில் மிக அதிகமான உறுப்பினர்களுடன் திமுகவை எதிர்க்கட்சியாய் அமர்த்தி சாதனை படைத்தவர் ஸ்டாலின்.

அவருடைய ஆற்றலை ஏற்க மறுத்து, அவரை கேலியும் கிண்டலும் செய்து அதையே தங்கள் அரசியலாக மாற்றிக்கொண்ட எதிர்க்கட்சிகளின் முயற்சியை முறியடித்தார். கலைஞர் இல்லாத நிலையில்  2019 மக்களவைத் தேர்தலில் ஸ்டாலின் என்ற செயல்புயல் தன்னை அதுவரை எதிர்த்து கேலி பேசிய எதிரிகளையும் தனக்குள் இழுத்துக் கொண்டது. மாபெரும் வெற்றியை பெற்று வட மாநிலங்களை திரும்பிப் பார்க்க வைத்தார் ஸ்டாலின்.

அதைத்தொடர்ந்து 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் அதே கூட்டணியை தொடர்ந்து கட்டிக்காப்பாற்றி, அது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல, சித்தாந்த கூட்டணி என்று நிரூபித்தார்.

பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக பொறுப்பேற்று 22 மாதங்கள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளன. ஆனால், இதுவரை எந்த முதலமைச்சரும் நிறைவேற்றாத வகையில் 220 சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார் ஸ்டாலின்.

அவரை செயல்புயல் என்று அழைப்பதில் தவறில்லையே..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *