சாதிச்சான்றிதழை ஒழித்துவிட்டால் சாதி ஒழியுமா?

சாதி அடையாளத்திலிருந்து எப்போது வெளியே வருவோம் என்ற கேள்வியை விஐபிக்கள் தொடர்ச்சியாக கேட்கிறார்கள். டைரக்டர் வெற்றிமாறனைத் தொடர்ந்து, எழுத்தாளர் பெருமாள் முருகனும் அந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

மாதொரு பாகன் நாவலில் ஒரு சாதியை அடையாளப்படுத்தி, அந்த பகுதியில் நடக்கும் ஒரு நிகழ்வை கதைக்கருவாக வைத்து சர்ச்சையை உருவாக்கியவர் பெருமாள் முருகன்.

அந்த நாவலை தடை செய்யும் அளவுக்கு நிலைமை முற்றியது. அப்போதெல்லாம் சாதி வேறுபாடு இல்லாமல் பெருமாள் முருகனின் எழுத்துரிமையை கருத்துரிமையை பாதுகாக்க தமிழகம் முழுவதும் ஆதரவுக் குரல் எழுந்தது.

வெற்றிமாறனோ, பெருமாள் முருகனோ சாதி அடையாளத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள்?

அவர்களுக்கு அவர்களுடைய சாதிச் சான்றிதழில் இடம்பெற்றுள்ள சாதிப்பெயர் உறுத்தலாக இருக்கிறதா? அவருடைய பிள்ளைகளுக்கு உறுத்தலாக இருக்கிறதா? அந்த சாதிப் பெயர் அவர்களுக்கு அவமானமாக இருக்கிறதா? எதற்காக அவர்கள் அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

சாதிச்சான்றிதழை ஒழித்துவிட்டால் சாதியை ஒழித்துவிடலாம் என்று இவர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

கமல்ஹாஸன் தனது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது சாதியை குறிப்பிடாமல் இந்தியன், தமிழன் என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி குறிப்பிடும்போது, சாதி, மத அடையாளம் இருக்காது. ஆனால், இட ஒதுக்கீடு பலன்கள் கிடைக்காது. கமல்ஹாஸன் இட ஒதுக்கீடு பலன்களை எதிர்பார்க்கும் நிலையில் இல்லை. எனவே அவருக்கு சாதி மத அடையாளம் தேவையில்லை.

Kamal sad

ஆனால், வெற்றிமாறனோ, பெருமாள் முருகனோ அப்படியா? கமல்ஹாஸனின் தந்தை படிப்பு என்ன? அவருடைய சகோதரர்களின் படிப்பு என்ன? கமல்ஹாஸனின் வளர்ப்பு எப்படி? இதையெல்லாம் அவர்கள் ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்?

தனது பிள்ளைகளுக்கு சாதி மத அடையாளத்தை நீக்கிய கமல்ஹாஸன் அரசியல் கட்சி தொடங்கியபிறகு, தன்னை ஒரு அய்யங்கார் என்று அடையாளப்படுத்தியதை நாம் பார்த்தோம். அவருடைய மகள் ஸ்ருதிஹாஸனும் தனது அய்யங்கார் சாதியை பெருமையாக
குறிப்பிட்டார்.

வெற்றிமாறனின் தந்தையோ, அவருடைய தாத்தாவோ, பெருமாள் முருகனின் தாத்தாவோ, தந்தையோ என்ன படித்திருக்கிறார்கள்? வெற்றிமாறனும் பெருமாள் முருகனும் புகழ்பெற்றுவிட்டார்கள் என்றால் அவர்களுக்கு சாதி அடையாளம் உறுத்தலாக இருக்கிறது.

ஆனால், காலங்காலமாக நம்மை படிக்கிவிடாமல், வேலைக்கு போக விடாமல் தடுத்து, நமது வாய்ப்புகளை பறித்துக் கொண்டவர்கள் இப்போதும் தங்களை சாதியால் வேறுபடுத்தி நெஞ்சை நிமிர்த்தி திரிகிறார்கள். நாம் அனுபவிக்கும் இடஒதுக்கீடை கிண்டல் செய்தார்கள். இட ஒதுக்கீடு மூலம் படித்ததையும் வேலை பெற்றதையும் கேலி செய்தார்கள்.

ஆனால், பாஜக ஆட்சியின்மூலம் அவர்களும் 10 சதவீத இட ஒதுக்கீடை பெற்றுக்
கொண்டார்கள். இதற்காக அவர்கள் வெட்கப்படவில்லை.

நமக்கான இடஒதுக்கீடுக்கு பொருளாதார உச்சவரம்பு ஆண்டுக்கு 72 ஆயிரம் என்று நிர்ணயித்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் இருந்தால் ஏழை என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள். மதிப்பெண்களையும் அவர்களுக்காக மிகவும்
குறைவாக வரையறை செய்திருக்கிறார்கள்.

அவர்கள் தங்களை உயர்ந்த சாதியினர் என்று கூறிக்கொண்டு, தங்கள் முதுகின் குறுக்கே பூணூலை இழுத்துவிட்டு திரிகிறார்கள். இதற்காக அவர்கள் வெட்கப்படவில்லை. இதுவரை நம்மை இட ஒதுக்கீடு பயனாளிகள் என்று கிண்டல் செய்தவர்களை, நாம் விமர்சனமே செய்யவில்லை. மாறாக, நாம் நமது பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு பலன்களை உதற வேண்டும் என்று பேசும் நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.

சாதிச்சான்றிதழை ஒழித்துவிட்டால் சாதியை ஒழித்துவிடலாமா? பார்ப்பனர்கள் தங்களை அடையாளப்படுத்தும் பூணூலை அறுத்து எரிந்துவிடுவார்களா? நம்மை போல அவர்கள் பேச்சுவழக்கை மாற்றிக் கொள்வார்களா? சாதிச் சான்றிதழை ஒழித்துவிட்டால் சாதி அடையாளம் ஒழிந்துவிடுமா? பார்ப்பானும் நாமும் சமமாகிவிடுவோமா? கோவில் கருவறைக்குள்ளும், ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும், உச்சநீதிமன்றம், குடியரசுத்தலைவர் மாளிகை உள்ளிட்ட இடங்களிலும் பார்ப்பனர்களுக்கு சமமாக நாமும் பணியில் சேர்க்கப்படுவோமா?

இவர்களைப்போன்ற மூளை வீங்கிகளிடம் இன்றைய தலைமுறையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆதனூர் சோழன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *