HR உன்ன கூப்பிடுறார்…(18)

கையெழுத்து தரும் மதிப்பு
கடந்த வாரத்தொடர் பலரை சிந்திக்கவும் சிலரை என்னோடு சந்திக்கவும் வைத்தது என்பதைத்தாண்டி, என்னை நோக்கி சில கேள்விகளையும் எழுப்பியது. எனது நலவிரும்பிகள், அப்படி ஒன்னு நடந்தத ஏன் சொல்லல, எங்களால முடிந்தத செஞ்சிருப்போம்ல எனச் சொன்னபோது, கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி எழுதிய “உண்டாலம்ம இவ்வுலகம்” எனும் புறநானூற்றுப்பாடல்தான் நினைவில் வந்து போனது. நீ அங்கேயே இருந்து இன்னும் நெறையா செஞ்சிருக்கலாம், நீ எடுத்த முடிவு சரிதான், ஏதோ இளரத்த வேகத்துல ஒரு முடிவு எடுத்திட்டிங்க போல, குழந்தை குட்டினு இருந்திருந்தா இந்த முடிவை எடுக்கக் கொஞ்சம் யோசிச்சிருப்பிங்க, என, பல கலவையான பின்னூட்டங்கள் எனக்கு வந்தது. கூடவே “எதிர்க்கவேண்டிய இடத்தில் அமைதியாக இருப்பது பாவமாகும்” எனும் ஆபிரகாம் லிங்கன் கூறிய, கூரிய வார்த்தைகள் என் மனதை கொஞ்சம் அலைக்கழித்தது. இப்போதுள்ள தெளிவும், திடமனமும் அப்போது எனக்கு இல்லை, இருந்திருந்தால் வேறுமாதிரி நடந்திருக்கலாம்.
எந்த ஒரு வேலையிலும், தொடக்கத்தில் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் அல்லது அனுபவக்குறைவால் நாம் செய்யும் சில தவறுகள் அப்படியே நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிடும், நல்ல பாடத்தையும் தந்துவிடும். அப்படி ஒரு நிகழ்வு எல்லோர் வாழ்விலும் நடந்திருக்கும், மனிதவளத்துறையில் பணியாற்றும் எனது நண்பர் ஒருவருக்கு நடந்ததை உங்களோடு பகிர்கிறேன். சற்று புகழ்பெற்ற நிறுவனத்தில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார், அந்த நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு (Contract labor) எத்தனை நாட்கள் வந்தார்களோ அத்தனை நாட்களுக்கு மட்டும் சம்பளத்தைக் கணக்கிட்டு கணக்கு வழக்கு துறைக்கு அனுப்புவது வழக்கம், இவர்தான் ஒவ்வொரு மாதமும் அதைச்செய்வார், ஒருவருடத்திற்குப் பிறகு வேறொரு பெரிய நிறுவனத்தில் அரபு நாட்டில் வேலை கிடைத்ததால் பணி விலகல் கடிதம் தந்துவிட்டு, வேலையில் இருந்து விலகும் வேளையில், இந்த சம்பளக்கணக்கீடு வந்தது.

பெரும்பாலும் எந்த நிறுவனத்திலும் பணி விலகல் கடிதம் தந்த பிறகு, சில பொறுப்பு மிகுந்த வேலையை அவ்வளவாக யாரும் செய்வதில்லை, அதே போல இங்கும் அம்மாத ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சம்பளக் கணக்கீடு வேலையை, இவர் குழுவில் இருந்த இன்னொருவர் தயார் செய்தார். போறதுதான் போறீங்க, கடைசியா இதுல ஒங்க கையெழுத்த போடுங்க எனச்சொன்னதும், நான் எல்லாத்தையும் சரிபாத்துட்டேன் என தனது குழு உறுப்பினர் சொன்னதை வைத்து நம்பி கையெழுத்துப் போட்டுவிட்டார். எனது நண்பரும் அந்த நிறுவனத்தை விட்டு விலகி தான் அடுத்து சேர வேண்டிய வேலைக்கான ஆயத்த வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விட்டார், வேலையில் இருந்து விலகி பத்தாவது நாள், அவர் ஏற்கெனவே பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு.
நீங்க கையெழுத்து போட்ட சம்பள பட்டியல்ல வேலையை விட்டுட்டு போன ரெண்டு பேருக்கு சம்பளத்த போட்டிருப்பதை இப்பதான் பாத்தோம், மேலும் அந்த வேலைய விட்டுட்டு போனவங்களும் அலுவலகத்தில் வந்து கையெழுத்து போட்டு சம்பளத்த வாங்கிட்டு போயிட்டாங்க, அதுனால, அதுல கையெழுத்து போட்ட நீங்கதான் ஏதோ வேணும்னே செய்து இந்தத் தொகையை எடுத்ததா அலுவலகத்துல பேச்சு எனச்சொன்னதும் இவருக்கோ தூக்கிவாரிப்போட்டது, தவறே பண்ணாம நம்ம மேல ஏன் இப்படி வீண்பழி. உடனே அந்த சம்பளப்பட்டியலை தயார் செய்த குழு உறுப்பினரை அழைக்கிறார், அவரோ அதைப்பற்றி தனக்கு எதுவும் தெரியாது, மேலும் அதுல கையெழுத்து போட்டது நீங்கதானே எனும் சற்று குதர்க்கமான கேள்வியை வைத்ததும் இவருக்கு பெரிய மனவுளைச்சல் ஏற்பட்டுவிட்டது.

இன்னும் இரண்டு நாட்களில் வெளிநாட்டு பயணம் வேறு, தான் வேலைபார்த்த நிறுவனத்தில், இந்தத் தவறை என்னமோ நான் திட்டமிட்டுச் செய்து பணத்தை சுருட்டியது போல பேச்சு, போதாக்குறைக்கு, பணியை விட்டுச்சென்ற ஒப்பந்த தொழிலாளர்கள் கையெழுத்திட்டு வாங்கிச்சென்ற தொகையைத் தரவில்லையெனில் சட்ட நடவடிக்கை எடுப்போம் எனும் மிரட்டல் வேறு. ஒருவேளை தன்மீது வழக்கேதும் போட்டுவிட்டால் நம் வெளிநாட்டு நிறுவனப் பயணம் முற்றிலும் தடைபட்டுவிடுமே, தன் எதிர்காலம்? எனப் பல்வேறு குழப்பங்கள். யாரிடம் எதுவும் சொல்லாமல், கலந்தாலோசிக்காமல், அந்த இழப்புப் பணத்தை நிறுவனத்திற்குக் காசோலையாக அனுப்பிவிட்டார். இவரோ குற்றமற்றவர் ஆனால் அந்த நிறுவனத்திலோ, பணத்தை திருடிவிட்டு ஓடிவிட்டார் எனும் அவப்பெயர் தங்கிவிட்டது. இப்போது நல்ல நிலையில் வெளிநாட்டில் பணியாற்றினாலும், இந்த அவப்பெயர் இன்னும் அவர் மனதை உறுத்துவதாகச் சொல்கிறார். அந்த நேரத்துல என்னையைவிட பெரிய நிலையில் இருந்தவர்களிடம் அறிவுரை பெற்றிருக்கலாம், அல்லது நானே இப்படி கோழை மனதோடு போயிருக்கக்கூடாது என அடிக்கடி சொல்வார். இது நமக்கும் ஒரு நல்ல பாடம், நம்மை சுற்றி நல்ல நட்பு வட்டத்தை வைத்திருக்கவேண்டும், இன்னொன்று அவருக்கு அப்போது இருந்த அனுபவமும் குறைவு, எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் குறைவு. இந்த இரு காரணங்களால் அவர் இந்த கெட்டப்பெயரை இன்னும் சுமக்கவேண்டிய காலக்கொடுமை. கையெழுத்து வலிமைமிக்கது எத்தனையோ கையெழுத்து பலரது வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது. வாக்கும் (Vote) கையெழுத்தும் (Signature) மிகக்கவனமாகக் கையாளப்படவேண்டும்.
தொடர்ந்து பயணிப்போம்…
முனைவர். ம.இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.
*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*பசுவைப் போல சாந்தமாக இருந்துவிட்டு போகத்தான் ஆசை..*
*ஆனால் நரிகளுக்கு மத்தியில் தான் வாழ்கின்றோம்*
*என்பதை* *உணரும்போது*
*கர்ஜனை செய்யாமல் கடந்து செல்ல முடிவதில்லை!!*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️In anythingமிகக்கவனமாகக் கையாளப்படவேண்டும்.
Very true a signature is a part of you…
Moreover by paying the amount he had accepted the fact… Sometimes we do take hasty reactions …
ஒரு கையெழுத்து உங்கள் தலையெழுத்தை மாற்றலாம் என்பது சரி தான் போல.மன உளைச்சலில் ஏதாவது செய்து இருந்தால் விளைவு வேறாக இருந்திருக்கும். இன்னும் பெரிய தொகை என்றால் என்ன செய்வது? . உஷாரா இருக்கனும்
Excellent
Well said, before making the signature we have to check the contents twice. Even the second copy. Signing is not a prestigious job it is a responsibilty.
Good message.. Noted…
Sure sir thank you very much.