தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – மிஸ் ஆகாத மிஸ்ஸியம்மா

தமிழ் சினிமா ஐம்பதுகளில் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்திக்கொண்டிருந்த காலத்தில் தெலுங்கு சினிமாவும் மிகப்பெரிய மாறுதல்களைச் சந்தித்துக்கொண்டிருந்தது . இங்கு எம்.ஜி.ஆர், சிவாஜி போல அங்கு என்.டி.ஆர், நாகேஸ்வராவ் இருவர் தோன்றினர் இங்கு பத்மினி போல அங்கு பானுமதி என சரிக்கு சரியாக நட்சத்திரங்கள் உருவாக்கிக்கொண்டிருந்தனர்.
அதே சமயம் தமிழ்நாட்டில் அப்போதிருந்த இயக்குனர்களையும்விட யாரோடும் ஒப்புமையே செய்ய முடியாத மிகச்சிறந்த இயக்குனர் ஒருவர் ஆந்திர சினிமாவுக்கு பெருமை சூட்டிக்கொண்டிருந்தார் எல்.வி பிரசாத்.

பிற்காலத்தில் பிரசாத் ஸ்டூடியோ எனும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை சென்னையில் நிறுவி தென்னிந்தியாவின் மிகப்பெரிய சினிமா சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டவர்தான் எல்.வி.பிரசாத் .அவர் தயாரிப்பு இயக்கத்தில் தெலுங்கு தமிழில் ஒரே சமயத்தில் வெளியாகி இரண்டு மொழியிலும் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் மிஸ்ஸியம்மா.
இதில் நாயகன் நாயகியாக நடித்த ஜெமினி கணேசன், சாவித்திரி இருவருக்குமே ஒருவகையில் அறிமுக படம் எனலாம் . இருவருமே முன்பே ஒரு சில படங்களில் நடித்து தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் . இந்த படம் தான் இருவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் திரையுலக வாழ்க்கைக்கும் துவக்கப்புள்ளியாக அமைந்தது.

மிஸ்ஸியம்மா படத்தின் கதை:
நாயகி மேரி ( சாவித்ரி) வறுமையான கிறிஸ்தவ பெண் . வீட்டில் கடன் பிரச்சனை நெருக்கடி காரணமாக ஒரு பணக்கார வீட்டில் டியூஷன் சொல்லித்தரச் செல்கிறாள் .அங்கு பாலு என்ற இளைஞன் அறிமுகமாகிறான். அவனும் ஆசிரியர். இருவரும் ஒரே வீட்டில் டியூஷன் எடுக்கிறார்கள். அதனால் இருவருக்கும் பழக்கம். அவர்கள் டியூஷன் எடுத்துவந்த முதலாளிக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிவிட்டதால் இருவரும் ஒரே நேரத்தில் வேலையிழக்கிறார்கள்.
வேறு வேலை தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில் மகாலட்சுமி ஆரம்பப்பள்ளி சார்பாக அறிவிப்பு ஒன்று நாளிதழில் வெளியாகிறது. பி.ஏ. படித்த இருவர் ஆசிரியர் வேலைக்குத் தேவை என்றும் அவர்கள் தம்பதியாக இருக்க வேண்டும் என்றும் கணவனுக்கு ஊதியம் ரூ.200; மனைவிக்கு ரூ.250 என்றும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. இதைக் கண்ட பாலு, மேரியிடம் இது குறித்து நயந்து பேசுகிறான்.முதலில் கோபப்படும் மேரி ஓரிரவு முழுவதும் யோசித்துவிட்டுக் கணவன் மனைவியாக நடிக்கச் சம்மதிக்கிறாள். எப்படியும் ஓ.சி. டேவிட்டிடம் வாங்கிய ரூ.400 கடனை அடைக்க வேண்டும் என்பதாலும் எம்.டி. பாலு ஓரளவு மட்டு மரியாதை தெரிந்தவன் என்று நம்புவதாலும் இதற்கு ஒப்புக்கொள்கிறாள்.

மேரி கிறிஸ்தவ மதத்தில் மிகுந்த பற்றுக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு கிறிஸ்து மேல் மட்டுமே நம்பிக்கை இருக்கிறது. பாலுவுக்கோ சாதி, மதம் போன்ற எதன் மீதும் மரியாதையோ மதிப்போ இல்லை. தந்தையின் பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் சாதியின் பெயரைத் தன் பெயரின் பின்னே அணிந்துகொள்ள விரும்பாமல் உதறித் தள்ளிய பாலு பிறப்பால் இந்து. இந்து ஆணான பாலுவும் கிறிஸ்தவப் பெண்ணான மேரியும் ஒரே வீட்டில் கணவன் -மனைவியாகத் தங்கி மகாலட்சுமி ஆரம்பப் பள்ளியில் பணிக்குச் செல்கிறார்கள். கிட்டத்தட்ட ‘லிவிங் டுகெதர்’ என்பது போன்ற வாழ்க்கை.
வியப்பு தரும் கதாபாத்திரம்
‘மிஸ்ஸியம்மா’ படத்தைப் பொறுத்தவரை மகாலட்சுமி என்ற மேரியின் கதாபாத்திரச் சித்தரிப்பு முன்னோடிப் பண்புகள் நிறைந்தது. பொதுவாக, பிழைப்புக்காகக் கிராமத்திலிருந்து நகரத்துக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், இந்தப் படத்தில் குயின் மேரிஸ் கல்லூரியில் படித்த மேரி பணிக்காக ஆண்டிப்பேட்டை என்னும் கிராமத்துக்குச் செல்ல நேர்கிறது.இன்றும் கூடப் பெரும்பாலான பணியிடங்களில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஆனால், இந்தப் படத்தில் பாலுவைவிட மேரிக்கு ஐம்பது ரூபாய் அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. பள்ளி மேலாளர் சம்பளப் பணத்தையும் கணவனிடம் தராமல் மனைவியிடமே தருவார்.

தங்க நகைகள் போட்டுக்கொள்வதில் பிரியமற்ற பெண்ணாகவே மேரி இருப்பார். அர்த்தமில்லாமல் தன் மீது பாசம் காட்டும் மனிதர்களைக் காட்டுப்பூச்சிகள் எனும் கடுமையான சொல்லால் குறிப்பிடும் அளவுக்குத் தனது விருப்பங்களிலும் உரிமைகளிலும் மதிப்பு வைத்திருக்கும் பெண் அவர். ஆனால், நெருக்கடியான சூழல் காரணமாக தனது மதத்தை மறைத்துத் தான் இந்துப் பெண் என்று நடிக்குமளவுக்கு இங்கிதம் தெரிந்தவராகவும் இருக்கிறார்; பொட்டு வைத்துக்கொள்கிறார். சீமந்தம் என்றால் என்ன என்பதே தெரியாத அளவுக்குச் சடங்குகளின் அறிமுகமே இல்லாமல் 20 வயதை அடைந்திருக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தை வியக்காமல் எப்படி இருக்க முடியும்? பெண் முடியும் என்றால் முடியாது; முடியாது என்றால் முடியும் என்பது போன்று இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஓரிரு கருத்துகளைத் தவிர்த்துவிடலாம். இந்தக் கருத்து தவறு என்பதைக் காலம் நிரூபித்திருக்கிறது.
கிறிஸ்தவப் பெண்ணும் இந்து ஆணும் ஒரே வீட்டில் வசிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று சொன்னதால்தான் இந்தப் படத்தில் முதலில் நாயகியாக நடிக்கவிருந்த பானுமதி விலகிக்கொண்டார் என்று ஒரு தகவல் உலவுகிறது. அது உண்மை என்றால், ஒருவகையில் பானுமதி திரையுலகுக்கு நல்லதுதான் செய்திருக்கிறார்.இல்லையென்றால் இரண்டாம் நாயகியாக நடிக்கவிருந்த சாவித்திரி, கதாநாயகி அந்தஸ்தை அடைந்திருக்க மாட்டார். தமிழ்நாடும் ஒரு நல்ல நடிகையைப் பெற்றிருக்காது. ஆனால், இந்தப் படத்தில் கதாநாயகியாக உயர்ந்த சாவித்திரி இந்தப் படத்தால் வாழ்க்கையில் பெற்ற ஸ்தானத்தை நினைத்தால் வருத்தமே மிஞ்சுகிறது.
இந்த படத்தின் கதையை எழுதியவர் தெலுங்கு சினிமா கதை ஆசிரியர் அலூரி சக்ரபாணி . தமிழில் வெளியான “மனிதன் மாறவில்லை” என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் அருமையான பாடல்களில் எழுதியவர் தஞ்சை ராமையா தாஸ். இப்படத்திற்கு ராஜேஸ்வர ராவ் இசையமைத்திருந்தார் .