அவை மரபும் கருத்து சுதந்திரமும்

File Image : Indian Parliament

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கவுள்ளது. அதற்கான முன்னேற்பாடாக அவை மரபற்ற சொற்கள் பட்டியல் தயாராகியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்கள் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. பாஜக’வின் ஒன்றிய அரசை விமர்சிக்க எதிர்க்கடசிகள் பயன்படுத்தும் பல சொற்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ‘ashamed’, ‘abused, ‘betrayed’, ‘corrupt’, ‘drama’, ‘hypocrisy’, ‘bloodshed’, ‘bloody’, ‘cheated, ‘chamcha’, ‘childishness’, ‘corrupt’, ‘coward’, ‘criminal’, ‘crocodile tears’, ‘disgrace’, ‘donkey’, ‘drama’, ‘eyewash’, ‘fudge’, ‘hooliganism’, ‘hypocrisy’, ‘incompetent’, ‘mislead’, ‘lie’, ‘untrue’, ‘dictatorial’, ‘anarchist’ உள்ளிட்ட பல சொற்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர்.

நாடு முழுவதும் சட்டமன்றங்களில் அவை மரபற்ற சொற்களாக அறிவிக்கப்பட்ட சொற்கள், 2021ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அவை மரபற்ற சொற்கள் மற்றும் 2020ம் ஆண்டு காமென்வெல்த் நாடுகளில் தடை செய்யப்பட்ட சொற்களும் தடை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலுக்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இதே நடைமுறை தான் கடைபிடிக்கப்படுவதாக அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள சொற்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது குறித்து இறுதி முடிவு  இரு அவைத்தலைவர்களின் ஆளுமைக்குட்பட்டது.

தற்போது, நாடாளுமன்ற கூட்டத்தொடர் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அனைத்தும் வீடியோ பதிவாக சேமித்து வைக்கப்படுகின்றன. அரசே இதனை ஆவணமாக வைத்துக்கொள்கிறது. தொலைக்காட்சி, வானொலி, இணையம், 24 மணி நேர செய்தி நிலையங்கள் என எந்த வித கண்டுபிடிப்புகளும் இல்லாத காலத்தில், அவைகுறிப்பே ஆவணமாக இருந்தது. ஆனால் இன்று அதன் தேவை என்பது பெரிதளவில் குறைந்துள்ளது. 

இந்நிலையில், அவை குறிப்பு என்பதே தேவை தானா என்கிற ஐயம் உள்ளது. மேலும், பல நேரங்களில் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட சொற்கள் அனைத்தும் பொது வெளியில் யார், எதற்கு எப்போது பயன்படுத்தினர் என அனைவருக்கும் காணொளியாகவே சென்று சேர்ந்துவிடுகிறது. எனவே, அவை குறிப்பு என்பது தொன்றுதொட்டு பயன்பாட்டில் இருக்கும் சடங்காகவே இருக்கிறது. அதன் மூலம் கிடைக்கும் பலன் என்பது இன்றைய தேதியில் பெரிதளவில் இல்லை. 

மேலும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொச்சையான சொற்களை பயன்படுத்த கூடாது, வன்முறை தூண்டும் சொற்களையும் மானபங்கப்படுத்தும் சொற்களை பயன்படுத்தக் கூடாது என்கிற பொதுவான, சாமானிய குடிமக்களுக்கு இருக்கும்  விதியே போதுமானது.   அதனை மீறி சில நேரங்களில் தவிர்க்கப்பட வேண்டிய சில சொற்கள் பயன்படுத்தப்பட்டால் அதனை அவை தலைவர் கண்டிக்கலாம். ஆனால் எந்த சொற்களும் அவை குறிப்பு மற்றும் வீடியோ பதிவு ஆகிய ஆவணங்களில் இருந்து எந்தவித சொற்களும் நீக்கப்பட கூடாது.  மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் மக்கள் மன்றத்தில் என்ன பேசினர், எவ்வாறு பேசினர் என்பது மக்கள் பார்வைக்கு எந்த வித தணிக்கையும் செய்யப்படாமல் சென்று சேர வேண்டும். 

21ம் நூற்றாண்டில் கருத்து சுதந்திரம் என்னும் அடிப்படை உரிமைக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வரும் வேளையில், மக்கள் பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்றத்திலேயே கருத்து சுதந்திரம் இல்லை என்றால், அவர்கள் எப்படி சாதாரண மக்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பார்கள் ? கருத்து சுதந்திரம் என்னும் உன்னத கோட்பாடு நாளடைவில் வழக்கொழிந்து போகும் நிலை கூட இந்த முடிவால் ஏற்படலாம். மக்கள் பிரதிநிதிகள் என்னென்ன சொற்கள் பயன்படுத்த வேண்டும் என்று அரசு தணிக்கை செய்ய நினைப்பது தான் அவை மரபா ? அதிலும் குறிப்பாக ஆளும் பாஜக அரசை விமர்சிக்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தப்படும் சொற்களாக பார்த்து தடை செய்ய நினைப்பது அவை மரபும் அல்ல. அரசியல் மரபும் அல்ல.  

அவை மரபற்ற சொற்கள் பட்டியலில் இருக்கும் பல சொற்களில் ஒன்று “Dictatorial”, “சர்வாதிகார போக்கு”. ஒன்றிய அரசின் இந்த முடிவை அப்படியே பிரதிபலிக்கும் சொல். அதனால் இச்சொல்லும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *