பலகாரம் தெரியும், அது என்ன பலாத்காரம்? – பேசும் புத்தகம்

Toilet Seat

அப்பொழுது எனக்கு பனிரெண்டு வயதிருக்கும். ஒரு முன்னிரவு வேளையில், எங்கள் வீட்டிலிருந்த டிவியில் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது.

“இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன 8 வயது சிறுமி, அவளது வீட்டிற்கு அருகிலுள்ள பாதளசாக்கடையில் பிணமாக கண்டெடுப்பு. பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று வீசியுள்ளதாக உடற்கூராய்வில் தகவல்” இதுதான் செய்தி. எல்லோரும் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க எனக்கு மட்டும் ஒரு சந்தேகம். பலகாரம் தெரியும், அது என்ன பலாத்காரம்? அதை செய்தால் ஏன் சாக வேண்டும்? அருகில் அமர்ந்திருந்த என்னை விட மூன்று வயது பெரியவளான அக்காவிடம் கேட்டேன். திருத்திருவென்று முழித்து விட்டு எதுவும் கூறாமல் சென்று விட்டாள் .அவளுக்கும் தெரியவில்லை அல்லது என்னிடம் எப்படி கூறுவதென்று தெரியவில்லை. பனிரெண்டு, பதினைந்து வயது சிறுமிகளான எங்களுக்கே மேற்கூறிய சம்பவம் ஒருமாதிரி புரிந்தும் புரியாமலிருக்க, பாதிக்கப்பட்ட குழந்தைக்கோ வயது எட்டு. அதை அவள் எப்படி எதிர் கொண்டிருப்பாள்? ஒருவேளை அவள் அன்று கொல்லப்படாமல் இருந்திருந்தால் வாழ்நாள் முழுவதும் இப்படி ஒரு கசப்பான அனுபவத்துடன் எப்படி வாழ்ந்திருப்பாள்?

மேற்கூறிய சம்பவம் நடந்து சுமார் பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது. இன்று வரை ஏதேனும் நல்ல மாற்றங்கள் நடந்துள்ளதா? இன்னும் சொல்லப் போனால் இந்த மாதிரியான சம்பவங்கள் மேலும் அதிகரிக்கவே செய்திருக்கின்றன. அதுவும் இதை விட இன்னும் சிறிய தளிர்களுக்கு. இதில் ஆண், பெண் பாகுபாடில்லாமல் எல்லோரும் பாதிப்படைவது குறிப்பிடத்தக்கது.

ஆமா, இந்த மாதிரி குற்றவாளிகளை எல்லாம் நடு ரோட்டுல நிக்க வச்சி சுடனும். இவங்களுக்கெல்லாம் கொடூரமான தண்டனை கொடுக்கணும் என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் எத்தனை பேருக்கு? அதுவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வரம்பில்லாமல்!. ஒருவேளை நீங்கள் சொல்வதுபோலவே கொடூரமான தண்டனை தான் தீர்வு எனில், இதுவரை எத்தனையோ பேருக்கு தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும், ஏன் மீண்டும் மீண்டும் இது மாதிரியான செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமிக்கின்றன? ஊடக வெளிச்சத்திற்கு/ பொதுவெளிக்கு வராதவை எத்தனை எத்தனையோ…


ஒருவேளை குற்றவாளிகளின் பட்டியலில் உங்கள் தந்தையோ, கணவனோ, உடன்பிறந்தோர்களோ ஏன் நீங்களே இருந்தால்? அப்போதும் இப்படியே யோசிப்பீர்களா? ஆம். நம்மில் பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பதில் பாலியல் தொந்தரவிற்க்கு ஆளாகியிருப்போம் அல்லது சில நேரங்களில் நீங்களே யாருக்காவது இந்த மாதிரியான தொல்லைகளை ஏற்படுத்தியிருக்கலாம். பின்னர் அப்படி நடந்து கொண்டதை நினைத்து வருந்தியும் இருக்கலாம். ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்தாலும் இதுதான் உண்மை. இதெல்லாம் ஏன் நடக்கிறது? இதையெல்லாம் எப்படி சரி செய்வது? என்றாவது சிந்தித்தது உண்டா? தப்பு பண்ணிட்டேன் திருத்திக்கணும்னு நெனைக்கிறவங்களும், நானும் பாதிக்க பட்டிருக்கேன் அதை எப்படி எதிர்கொள்வது?

நம் வீட்டு குழந்தைகளை எப்படி இதிலிருந்து காப்பது? என்று கேட்பவர்கள் மட்டும் மேற்க்கொண்டு படித்தால் போதும். ஊர்ல எங்கையோ யாருக்கோ நாலு பேருக்கு அப்படி நடக்குது அதுக்குன்னு எல்லாரையும் குத்தம் சொல்ல முடியுமானு கேக்குறவங்களுக்கும், பாலியல், காமம் இதை பற்றியெல்லாம் படிப்பதோ/தெரிந்து கொள்வதோ பாவம் என்று நினைப்பவர்களும் இதை படிக்க வேண்டாம்.

சரி கதைக்கு வருவோம். இதுபோல பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஏதேனும் மனநோயா? என்றால், இல்லை என்கிறார் எழுத்தாளர் லதா. பிரச்னை நம்மிடத்தில், நம் சமூகத்தில், நம் கலாச்சாரத்தில். வேர் அழுகியுள்ளபோது இலைகளுக்கு மருந்து தெளித்து என்ன பயன்? என கேட்கும் அவர், பாலியல் குற்றங்களுக்கு என்ன தீர்வு சொல்கிறார்?
கணவன் மனைவி உறவு இறுதி வரை சுமூகமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
திருமணத்தை தாண்டிய வெளிமண உறவுகள் தவறா? பதின் பருவத்திலேயே முளைவிடத் தொடங்கும் காம ஆசைகளை எப்படி எதிர்கொள்வது? அல்லது அவற்றை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு எப்படி சொல்லி கொடுப்பது?

ஆண் பெண் உறவில் ஆண்கள் பெண்களை பற்றியும், பெண்கள் ஆண்களை பற்றியும் அறிந்து கொள்ளாதது என்ன? அல்லது தவறாக புரிந்து கொண்டிருப்பது என்ன? உண்மையிலேயே திருமணம் ஒரு necessary evil தானா? இதற்கெல்லாம் அடிப்படையான காமத்தை பற்றி பேசுவதே தவறா? எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள், ஆண்களின் ‘கழிவறை இருக்கை’ என ஏன் சொல்கிறார்? தெரிந்துகொள்ள எழுத்தாளர் லதா எழுதிய “கழிவறை இருக்கை” எனும் நூலை வாசியுங்கள். காமத்தை பற்றிய இதுநாள் வரையிலான உங்கள் பார்வையை சரி செய்து கொள்ளுங்கள்.

(குறிப்பு: நூல் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கிடைக்கிறது)

சூரியா சுந்தரராஜன், வேளாண் பட்டதாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment

  1. Nice review