தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு (1947-1977) : இந்தியாவின் சிசிலி.பி.டெமிலி எஸ்.எஸ்.வாசன் கற்பனையின் சாகசம்

புராணப் படங்கள் ஓடிக்கொண்டிருந்த 1943ம் வருட  காலத்தில் ஒளவையார் படத்தைத் துவக்கினார் வாசன். ஆனால் திரைக்கதை முடிந்து படப்பிடிப்பு கிளம்பும் போது சினிமாவில் ட்ரெண்ட் மாறிப்போய்  பிரம்மாண்ட ராஜா ராணி கதைகளும் ,படங்களும், பிற்பாடு திராவிட சினிமாவும் கோலோச்சத் துவங்கியது.

சரி தன்னுடைய  சந்திரலேகா பட பாணியில் பிரம்மாண்ட படமாக்க முடிவு செய்தார். ஒளவையார் கதையில் அப்படி என்ன பிரம்மாணடம் காண்பிக்க முடியும்  என  இயக்குனர் கொத்தமங்கலம் சுப்பு உள்ளிட்ட  எழுத்தாளர் குழுவினர் பலரும் மண்டையை போட்டு குழப்ப கடைசியில் அதற்கேற்றார் போல கதையில் ஒரு காட்சியும் இருந்தது. திமிர் பிடித்த மூன்று அரசர்கள் ஒளவையாருக்கு தொல்லை கொடுக்க அவர்களை சமாளிப்பதற்கு ஒளவையார் கோவிலுக்கு சென்று விநாயகரிடம் ஒரு கும்பிடு போட்டு கோரிக்கை வைக்கும் ஒரு காட்சி இருந்தது.  அதை கொஞ்சம் டெவலப் செய்து ஒளவையாரின் கோரிக்கையை ஏற்கும் விநாயகர் 100 யானைக் கூட்டத்தை அனுப்பி அந்த மன்னர்களில் ஒருவரது கோட்டையை இடிக்க அனுப்பி வைப்பது தான் அந்தக் காட்சி.

இந்த காட்சிக்குத் தேவையான 100 யானையை வரவழைத்துக் காட்சி படுத்தி விட்டால் அதை விட பிரம்மாண்டம் வேறென்ன இருக்க முடியும் என வாசன் முடிவெடுத்து காரியத்தில் இறங்கினார். இதற்கு 100 யானைகளை தேடி  ஜெமினி ஸ்டூடியோ குழு அங்குமிங்குமாக அலைந்த போது ஒரு தகவல் அந்தக் குழுவுக்கு கிடைக்க உடனே துறைமுகம் விரைந்தது, கூர்க்கில் சும்மா திரிந்து கிடந்த 100 யானைகளை  சென்னை துறைமுகம் வழியாக கப்பலில்  அந்தமானுக்கு  யானைகள்  கூட்டமாக கொண்டு செல்லப்படுவதாக வந்த செய்திதான் அது.   

இப்படி அந்தமானுக்கு  செல்லும் யானைகளை படப்பிடிப்புக்கு கொண்டு வருவது என்பது மலையைக் கட்டி கேசத்தில் இழுக்கும் விஷயம். ஆனால் வாசனால் அது சாத்தியப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு  காரியத்தை அந்தக் காலத்தில் வேறு ஒரு தயாரிப்பாளர் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. வாசனால்  மட்டுமே இதை சாத்தியப்படுத்த முடிந்தது என்றால்  இதுதான் அவரது யானை பலம்.

இப்படியாக 100 யானைகளை ஸ்டூடியோவுக்கு கொண்டுவந்து  கோட்டையை செட் போட்டு அதை யானைகள் மோதி உடைப்பது போல பத்து நாட்கள் தொடர்ந்து படம் பிடித்தார் .

 அந்த 100 யானையை பத்து நாட்கள் பராமரித்த செலவில் மட்டும்  இன்று மூன்று படங்கள் எடுத்துவிடலாம். 100 யானைகளைக் குளிப்பாட்ட செலவான வான் நீர் மட்டுமே  ஒரு நாளைக்கு எவ்வளவு கேலன்கள் என கணக்கு போட்டு அதை பெருக்கிப் பாருங்கள்  அந்த நீரை கொண்டு வந்து நிரப்பி  போக்குவரத்து  ஊழியர்கள் செலவு என ஒவ்வொரு விஷயத்தையும் கணக்கு போட்டால் மலைத்து போய்விடுவோம்.

ஒரு கட்டத்தில் படம் முழுவதும் முடிந்து  இறுதியாக எடிட்டிங் டேபிளில் இரண்டு படங்களுக்கான ரீல்களை கொண்டு வந்து வைக்க  வாசன்  தான் உருவாக்கிய படைப்பு என உச்சி முகராமல்  படத்தொகுப்பாளரிடம் ஈவு இரக்கமில்லாமல்  தேவையற்ற காட்சிகளை வெட்டி எறிந்து கச்சிதமான வடிவத்துக்கு படத்தை வடிவமைக்குமாறு உத்தரவிட்டார். 

தொழில்நுட்ப பணிகள் முடிந்த பின் தன் ஸ்டூடியோவில் ஆனந்த விகடன்  ஊழியர்கள் அனைவரையும் கூட்டி அவர்களுக்கு படத்தைப் போட்டு காண்பித்தார் . படம் முடிந்தவுடன்  அனைவர் கையிலும் ஒரு ஊழியர் ஒரு துண்டு பேப்பரை கொடுத்து ஒளிவு மறைவில்லாமல்  படத்தை விமர்சிக்கும் படி கட்டளையிட்டார் . அப்படி எழுதப்பட்ட விமர்சனத்தில்  ஒன்று உங்கள்  படத்தை அப்படியே  தூக்கி கொண்டு பொய் வங்காள விரிகுடா கடலில் போட்டு விடலாம் என  துணிச்சலாக எழுதினார் . கதிர் எனும் ஊழியர், அவரை உடனே அழைத்து வரும்படி வாசன் கோவத்துடன்  உத்தரவிட்டு  இயக்குனர் கொத்தமங்கலம்  சுப்புவையும் அவர் வரும் போது  தன் அறையில் உட்கார வைத்தார். பயந்துகொண்டே வந்த கதிர் என்பவரிடம்  பொறுமையாக அவர் ஏன் அப்படி எழுதினார் என கேட்க படம் சுவாரசியமாக இல்லை என அவர் வெளிப்படையாக  கருத்து கூற, அதை ஏற்றுக்கொண்ட வாசன்   யோசித்து பின் மீண்டும் கொத்தமங்கலம் சுப்புவிடம்  மேலும் சில காட்சிகளை சேர்க்க சொல்லி மீண்டும் படப்பிடிப்பு நடத்த உத்தரவிட்டார்  

அதன்படி பண்டைத் தமிழ் மன்னன் பாரி  ஒளவையாருக்கு  பிரம்மாண்ட வரவேற்பை அளிப்பதாக  எழுதப்பட்டு ரூ. 1.5 லட்சம் செலவில் ஒரு முழு தெரு செட்  போடப்பட்டது.  10,000 இளைய கலைஞர்கள் மற்றும் பல வகையான நாட்டுப்புற நடனங்கள்  அந்த ஊர்வலத்தில் சேர்க்கப்பட்டன. இந்த பிரம்மாண்டமான காட்சி திரைப்படத்தை உயிர்ப்பித்தது.

படம் வெளியான போது எழுத்தாளர் கல்கி தனது பத்திரிகையில் ஒரு சிறந்த விமர்சனத்தை எழுதினார், இது அவரது முன்னாள் முதலாளி வாசனுடன் நல்லுறவுக்கு வழிவகுத்தது. வெலிங்டன் திரையரங்கிற்கு  ஒளவையார் படம் பார்க்க வந்த முதல்வர் ராஜாஜியை  விமர்சித்து  கல்கி தாக்கி  எழுத அதுவும் சேர்ந்து படத்துக்கு மிகப்பெரிய விளம்பரமானது .

இன்று எல்லோரும் ரிலையன்ஸ் அம்பானியின் வெற்றி சூத்திரமாக சொல்லும் எல்லாம், அன்று வாசன் அவர்கள் கடைபிடித்து தென்னிந்திய வணிக சாம்ராட்டாக வலம் வந்ததோடு மட்டும் அல்லாமல் மும்பை பட உலகையும் மிரள வைத்தார். இல்லாவிட்டால் திராவிட சினிமா பேரெழுச்சி பெற்ற இக்காலகட்டத்தில் எதிர் நீச்சல் போடும் அளவுக்கு இப்படி ஒரு படத்தை இவ்வளவு செலவு செய்து  துணிச்சலாக  எடுத்து  வெளியிட்டு அதில் வெற்றியும் பெற்று நிரூபித்தது அத்தனை சாதாரண விஷயமல்ல.

இதுபோன்ற சாகசங்கள் பலவற்றை  அவர் வாழ்க்கை முழுக்க செய்தார்.  இதனால்தான் இன்றும் அவர் சரித்திரத்தில் இடம்பிடித்து   போற்றப்பட்டு வருகிறார்.

இப்படியாக ஒளவையார் படத்துக்கு வாசன் எடுத்த மெனக்கெடல்,  அது  எப்போதும் பல வியப்புகளை ஊட்டக்கூடியதாக  இருக்கிறது . பொதுவாக கடும் உழைப்புக்கும், பிரமாண்டத்துக்கும் உலகம்  முழுக்க 10 கமாண்ட்மெண்ட்ஸ் எடுத்த சிசிலி.பி. டெம்லியை  சொல்வார்கள். இந்திய  சினிமாவில் சிசிலி.பி.டெம்லி என வாசன் ஒருவரை மட்டுமே சொல்ல முடியும் என்றால் அது ஒளவையார் படத்துக்கு எடுத்த மெனக்கெடல்.

வெகு காலத்திற்கு பிறகு, உலகத் தமிழ் மாநாட்டிற்கு கடற்கரையில் அவ்வை சிலையை வாசன் வழங்கினார். தற்செயலாக, சிலைக்கு செங்குத்தாக உள்ள சாலைக்கு அவ்வை சண்முகம் சாலை என்று பெயர் சூட்டப்பட்டது.

(தொடரும்)

– எழுத்தாளர். அஜயன் பாலா.

பின் குறிப்பு : ஆசிரியரின் தமிழ் சினிமா வரலாறு பாகம் ஒன்று 1916-1947 நாதன் பதிப்பகம் வெளியீடாக நூலாக வெளி வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து  இரண்டாம் பாகமாக இத்தொடர் 1948 துவங்கி தமிழ் சினிமாவின் முக்கிய வரலாற்றுத்தடங்களை விவரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…