தமிழ்நாட்டின் டிசைன் அப்படி: ஆடுகளும் ஆட்டுக்குட்டிகளும்

Ban__NEET

சட்டமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட மன்றம். 8 கோடி வாக்காளர்களைக் கொண்ட தமிழ்நாட்டை 234 தொகுதிகளாகப் பிரித்து, அத்தனை வாக்காளர்களுக்குமான ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை உள்ளடக்கிய பேரவை. ராஜ்பவன் என்பது இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் பரிந்துரையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிற ஆளுநர் என்கிற நியமனப் பதவி கொண்டவருக்கான அலுவலகம்.

அலுவலகம் என்பது கொடுக்கின்ற-கிடைக்கின்ற வேலையைப் பார்க்கும் இடம். பேரவை என்பது மக்களின் குரல் ஒலிக்கின்ற இடம். இதைத் தமிழ்நாடு அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். நினைவுப்படுத்த வேண்டிய சூழல் உருவாக்கப்படுவதும் உண்டு.

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு கிராமப்புற-ஏழை மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைக்கிறது என்பதை தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி-தோழமைக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசோ அது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்று பழியைத் தூக்கிப்போட்டுவிட்டு, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மறுத்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த தவறு என்பது உண்மையென்றால், ஐ.நா.சபை வரை தமிழின் பெருமையைப் பேசும் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பதுதானே நியாயமாக இருக்கும்?

“அதெல்லாம் தெரியாது. நாங்க காங்கிரசையும் நேருவையும் திட்டிக்கிட்டே இருப்போம். மக்களுக்கு உருப்படியா எதையும் செய்யமாட்டோம். அதையெல்லாம் எங்ககிட்ட எதிர்பார்க்காதீங்க” என்பது போலத்தான் பா.ஜ.க. அரசு நடந்து கொள்கிறது. அந்த அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்குத் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கே திருப்பி அனுப்பிவிட்டார்.

நீட் தேர்வின் சாதக-பாதகங்கள் குறித்து ஆராய்பவதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து, மக்களிடம் கருத்துகள் கேட்டு, குழுவின் விரிவான அறிக்கையையும், நீட் தொடர்பான தகவல்களையும் ஆய்வு செய்த பிறகே, தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டிய ஆளுநர் மாளிகை, திருப்பி அனுப்பியது. இந்த வரம்புமீறலை தமிழ்நாட்டு பா.ஜ.க.வினர் கொண்டாடினார்கள். திருப்பி அனுப்ப ஆளுநருக்கு உரிமை இருக்கிறது என்றனர்.

திருப்பி அனுப்ப உரிமை இருக்கலாம். சட்டமன்றம் மறுபடியும் மசோதவை நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் அதனை நிராகரிக்க முடியாது. குடியரசுத் தலைவருக்குத்தான் அனுப்ப வேண்டும். அதனால்தான், பிப்ரவரி 8ஆம் நாள் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

‘கறை நல்லது’ என்பது போல ‘நீட் நல்லது’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. என்ன செய்தது? நீட் தேர்வு எந்தெந்த வகையில் நல்லது, எப்படியெல்லாம் ஏழை மாணவர்களுக்குப் பயன்படுகிறது, தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள டாக்டர்கள் எத்தனை பேர் என்பதை ஆதாரத்துடன் சொல்லி, சட்டமன்றத்தில் உள்ள 4 பா.ஜ.க. உறுப்பினர்களும் வாதங்களை எடுத்து வைத்திருக்கலாம். அதற்குப் பதிலாக, ஏதேதோ பேசி வெளிநடப்பு செய்துவிட்டார்கள். பேரவைத் தலைவர் அப்பாவு, “எதற்கு இவ்வளவு பில்டப்? வெளிநடப்பு செய்வதென்றால் செய்துக்குங்க” என்று சொல்லிவிட்டார். மக்களிடம் அம்பலப்படாமல் தப்பித்துக் கொண்டார்கள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்.

எதிர்க்கட்சியான அ.தி.மு.க உள்பட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு நிறைவேறியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சில், நீட் எதிர்ப்பு மட்டுமின்றி, மாநில உரிமைகளுக்கான குரல் ஓங்கி ஒலித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் தீர்மானத்தை, வெறும் நியமனப் பதவியில் உள்ள ஆளுநர் திருப்பி அனுப்புவது என்பது மக்களாட்சித் தத்துவத்தை அவமானப்படுத்துவதாகும்” என்பதை அழுத்தமாக எடுத்துரைத்தார். தன் பேச்சை முடிக்கும்போது, தமிழ்நாடு வாழ்க என்று மூன்று முறை அழுத்தமாகச் சொன்னார்.

நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டிய அறிஞர் அண்ணா, அதே சட்டமன்றத்தில் அப்போது 3 முறை தமிழ்நாடு வாழ்க என்றார். மற்ற உறுப்பினர்களும் முழக்கமிட்டனர். அதே அண்ணா, “ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்னர் எதற்கு?” என்றும் கேட்டிருக்கிறார். ஆளுநர் பதவி என்பது தேவையற்ற ஆணி என்பதுதான் அதற்கான அர்த்தம்.

பா.ஜ.க.வின் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் கேரளா, மேற்குவங்காளம், தமிழ்நாடு இங்கெல்லாம் ஆளுநர்களை வைத்து, மாநில உரிமைகளைப் பறிக்க நினைக்கிறது ஒன்றிய அரசு. அதற்கு எதிரானக் குரல்கள் வலிமையாகக் கேட்கத் தொடங்கியுள்ளன. அண்ணாவின் குரல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஒலிக்கிறது.
ஆடுகளின் பின்னே ஆட்டுக்குட்டிகள் நின்று ஆதரவு தெரிவிக்கின்றன. அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையைப் பாதுகாக்கும் சிங்கத்தின் கர்ஜனையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேட்கிறது.

– கோவி.லெனின்.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…