தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு (1947-1977) : ஒளவையார்

Tamil_Cinema_TheNEWSLite

தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்ட படமான சந்திரலேகாவை 1948ல் எடுத்த அதே வாசன் தான் இரண்டாவது பிரமாண்ட படமாக ஒளவையாரையும் எடுத்து 1953ல் வெளியிட்டார். அதே சமயம் பல வருட உழைப்பு பிரமாண்ட செலவு ஆகியவற்றில் சந்திரலேகாவுக்கு சற்றும் சளைத்ததல்ல ஒளவையார். சந்திரலேகாவாவது ஆக்‌ஷன் மசாலா காட்சிகள்   நிறைந்த ஒரு படம் அதற்கு அவர் செலவழித்த ஆண்டுகளும் பணமும் சரியானது. ஆனால் ஒளவையார்  ஒரு கவி பாடும்  கூன் விழுந்த மூதாட்டிப் பெண்ணின் கதை. இதுக்கு  இத்தனை  வருடமும் செலவும் தேவையா? என்ற கேள்வி அக்காலத்தில் சினிமா தொழில் சார்ந்த அனைவரிடமும் இருந்தது. ஒரு சிலர் வாசன் பணத்தைக் கொட்டி படம் எடுப்பது வீண் வேலை என்றும் முணுமுணுத்தனர். ஆனாலும் வாசன் பிடிவாதமாக இருந்தார். ஒளவையார் படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்குவதில் அவர் பிடிவாதமாக இருந்தார்.  ஒவ்வொரு நாளும் திரைக்கதையிலும் பாடல் மற்றும் இசையிலும் படப்பிடிப்பிலும், படத்தொகுப்பிலும், ஒலி சேர்க்கையிலும் அங்குலம் அங்குலமாக கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கண்காணித்தார்.

அப்படி அவர் ஒளவையார் கதையில் களமிறங்க நேரிடையாக ஒரு காரணமும் இல்லை . அன்று என்னவோ திரை போக்குகளில்  நத்தார் பட்டினத்தார், காரைக்கால் அம்மையார்  போன்ற கவிஞர்களின்  வாழ்க்கைக்கு சினிமாவில் மவுசு இருந்தது. இதற்கு காரணம் துவக்க காலத்தில் படத்தின் வெற்றியை பாட்டுகளின் எண்ணிகையே  தீர்மானித்தது.  அத்தனை பாட்டுக்கும் கவிஞர்களுக்கு காசு கொடுத்து எப்படி மாள்வது? அதனால் இறந்த புலவர்களை பற்றிய படமெடுத்தால்   இருக்கவே இருக்கிறது அவர்கள் எழுதிய பாடல்கள்  ஒன்னுக்கு நூறாக  இசையமைப்பாளர்களிடம் அவற்றைக் கொடுத்தால் பாட்டுக்கு பாட்டும் ரெடி, கதைக்கு கதையும் ரெடி.

 மக்களிடையேயும் அவை தொடர் வெற்றி பெற்றன. இந்த  சூழ்நிலை காரணமாகத்தான் வாசன் ஒளவையார் கதையை படமாக எடுக்க 1943 வாக்கில் முன் வந்தார். அவர் இந்த முடிவுக்கு வர இன்னொரு காரணம் . அவ்வை சண்முகத்தின் மிகப்பெரிய வெற்றி பெற்ற நாடகம்  ஒளவையார்.  சங்கரதாஸ் சுவாமிகள் , பம்மல் சம்பந்த முதலியாருக்கு பிறகு தமிழ் நாடக உலகை வளர்த்த மிகப்பெரிய ஆளுமை அவ்வை சண்முகம். அவர் எழுதிய பல நாடகங்களில் பெண் வேடங்களில் அவரே நடிக்கவும் செய்தார். அப்படி அவர் போட்ட வேடங்களில்  பிரசித்தி பெற்ற நாடகம்  ஒளவையார். அதில் தோற்றம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக தனது இரண்டு முன் பற்களை அகற்றி, கீழ் உதட்டை உள்நோக்கி வளைத்து, ஒரு வயதான பெண்ணாகவே  மாறினார். இந்த நாடகத்தின் அபரிதமான வெற்றி தான் வெறும் டி.கே சண்முகமாக இருந்த அவரை அவ்வை சண்முகம் என அழைக்க வைத்தது.

 சென்னையில் மட்டும் 96 முறை தொடர்ந்து இந்த நாடகத்தை அவர் நடத்த  அது அவருக்கு நிரந்தர முதுகுவலியைக் கொடுத்தது. 1948 ஆம் ஆண்டில், இந்த நாடகம் நடத்தி முடித்த கையோடு ஆம்புலன்சில் ஏறி முதுகுவலிக்கு   மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்படியான  அவ்வை சண்முகம் நாடகத்தின் வெற்றியும்  வாசன் அவர்கள் இந்த படம் எடுக்கும் முடிவுக்கு வர முக்கிய காரணம்.

T.K.சண்முகம்

படத்தை எடுக்கும்  முடிவுக்கு வந்த உடன் வாசன்  நேரடியாக  டி.கே சண்முகத்திடம் அணுகி படத்தில் நடிக்க கேட்டபோது அவர் மறுத்துவிட்டார் . காரணம் ஆண் பெண் வேடம் போட்டல் நாடகத்தில் ரசிப்பார்கள் ஆனால் சினிமாவில் ரசிக்க மாட்டார்கள் எனக் கூறி மறுத்துவிட்டார். தடை என்று வந்தாலே அதை உடை என்பதுதான் வாசனின் மந்திரம். உடனே அவர் ஒளவையாரை எடுத்தே தீர்வது என்ற முடிவுக்கு வந்தார்.  புராணக்கதைகளுக்கு ஏது உரிமை என நினைத்தாரோ என்னவோ அவ்வை சண்முகத்தின் திரைக்கதையை கோராமல் தன் ஆஸ்தான எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்புவை அழைத்து  ஒளவையார் பற்றி இன்னும் கூடுதல் புதிய தகவலுடன் புதிய திரைக்கதை எழுதி தரும்படி  உத்தரவிட்டார் . அப்போதே நாடகத்துக்கும் நம் சினிமாவுக்கும் எந்த தொடர்பும் இல்லாத அளவுக்கு வித்தியாசமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தார் .  அதற்கேற்ப காட்சிகளில் பிரம்மாண்டம் தோன்றும்படி எழுதச் சொன்னார்

அப்போது அவர் முன் இருந்த சவால் எப்படி அவ்வை சண்முகத்தின் ஒளவையாரை விடவும் பெயர் வாங்குவது  என்பதுதான். அப்போது தொடங்கிய எழுத்துப் பணிக்கு தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்கள் பலரும் அழைக்கப்பட்டனர். இரண்டு வருட கடும் உழைப்புக்கு பின் திரைக்கதை முழு வடிவம் கண்டது .

இப்போது அவர்  முன் இருந்த இன்னொரு சவால் ஒளவையார் பாத்திரம் . அந்த ரோலில் யாரை நடிக்க வைப்பது, யார் நடித்தாலும்  அவ்வை சண்முகத்தை மிஞ்சும் வகையில் நடிக்க வேண்டும் வியாபாரத்திலும் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும் , பலமாக மூளையை போட்டு கசக்கிய வாசன்  மனதில் பளிச்சென்று மின்னல் வெட்டினால் போல மனதில் தோன்றினார் கே.பி சுந்தராம்மாள். கிட்டப்பாவின் மனைவி கிட்டப்பா இறந்த பிறகு மேடையில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின் சில ஆண் வேடங்களில் நடித்து வந்தவர்  பெண் வேடங்களில் நடிக்கவில்லை.

கிட்டப்பக்குபின் யாருடைய ஜோடியாகவும் அவர் நடிப்பதை தவிர்த்து வந்தார் . ஆனாலும் அவர் பாடல்களால் மக்கள் மத்தியில் அவருக்கு மிக பெரிய பேரும் புகழும் இருந்தது. இதனால் வாசன் கே.பி.சுந்தராம்பாளை அணுகினார்.ஆனால் கே.பி.எஸ்சோ இனி நடிக்க போவதில்லை என்று கூறி மறுத்தார். ஆனாலும் வாசன் பிடிவாதமாக சுந்தராம்பாள் மறுக்கவே முடியாத வாய்ப்பை வழங்கினார் தனக்கு  ஒருவரிடம் காரியம் ஆக வேண்டுமென்றால் அவர்கள் மறுக்கவே முடியாத வாய்ப்பை அவர்களுக்கு வழங்கு என்பது புகழ்பெற்ற வாசகம். எம்.பி.ஏ போன்ற வணிகம் சார்ந்த படிப்புகளில் கற்றுக்கொடுக்கப்படும் இந்த பிரபல சூத்திரம் காட்பாதர் திரைப்படத்திலிருந்து கையாளப்பட்டுள்ளது. ஆனால் வாசன் அவர்களோ எந்த எம்.பி.ஏ வகுப்பிலும் படிக்காதவர். ஆனால் அவர் மிகப்பெரிய முதலாளியாக தொழிலில் வெற்றி பெற்று இந்தியாவை அசர வைக்க காரணம் அவரிடம் இயல்பாகவே இருந்த வணிக மூளை.

எஸ்.எஸ்.வாசன்

அப்படித்தான் கே.பி.சுந்தராம்பாள் அவர்களை சம்மதிக்க வைத்தார். அவரை சம்மதிக்க வைத்து யாரும் கொடுக்க வர முடியாத அன்றைய சூழலில் இந்தியாவில் யாருமே வாங்காத அதிகபட்ச சம்பளமாக கே.பி.எஸ்சுக்கு ஒரு லட்சம் சம்பளம் பேசினார். அதன்படி இன்றைய மதிப்புக்கு 15 கோடி ரூபாய் ஒளவையார் போன்ற படத்துக்கு ஐம்பது வயதை கடந்த நரை தரித்த வயதான பெண்ணுக்கு 15 கோடி, இன்று கொடுத்தால் கூட அவரை அனைவரும் வினோதமாக பார்ப்பார்கள். ஆனால் வாசன் துணிந்து கொடுத்து ஒப்பந்தம் செய்தார் இப்படியாகத்தான் ஒரு லோ பட்ஜெட்  கதை  பிரமாண்ட மெகா பட்ஜெட் உயர்ந்தது.

1948ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று பூஜை போட்டு ஒளவையாரின் படப்பிடிப்பு துவங்கியது. செலவுக்கு மேல் செலவுகள் இழுத்துக்கொண்டே போனது . வாசனும் அஞ்சாமல் படம் பிரமாண்டமாக வரவேண்டும் என்று கனவு கண்டார். காரணம் அப்போது அவருக்கு உண்டான திடீர் நெருக்கடி . அதுவரை  புராண படங்களுக்கு இருந்த மவுசு, இவர்  படம் துவங்கிய சில நாட்களில் மாறத்தொடங்கியது. அண்ணாவின் வேலைக்காரி, கலைஞரின் ராஜகுமாரி, மந்திரிகுமாரி, பொன்முடி என தொடர்ந்து சமூக புரட்சி பேசும் படங்களில் திராவிட இயக்க கருத்துக்கள் நெருப்பு பொறி பறந்தன. கடவுள் மறுப்பு கொள்கை உடைய திராவிட இயக்கத்தினருக்கு கிட்டிய மிகப்பெரிய வெற்றி வாசனுக்குள் எதிர்பார அச்சத்தையும் மாற்றத்தையும் உண்டாக்கி இருக்க  வேண்டும் அல்லது உடனிருக்கும் சினிமா வியாபாரிகள் அவருக்கு ஒளவையார் படம் இக்காலத்துக்கு ஒத்துவராது என கருத்து சொல்லியிருக்க வேண்டும். இப்படியான சமூக நெருக்கடிகளை மனதில் கொண்டோ என்னவோ ஒளவையார் படத்தை வெற்றி பெற வைத்து  தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என வாசன் முடிவெடுத்தார். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் முதல் பிரம்மாண்டம் என பெயரெடுத்த சந்திரலேகாவை அது மிஞ்ச வேண்டும் என யோசித்தார். ஆனால் கதையோ நாயகி ஒரு கிழவி கதையை விட்டு விலகாமலும்,  அதேசமயம் அது கண்னை கவரும் விதத்திலும் அமைய வேண்டும் என கொத்த மங்களம்  சுப்புவிடம் குடைய  எதார்த்தம் கெடாத பிரம்மாண்டம்  எப்படி என யோசித்ததன் விளைவு தான் 100 யானைகள் ஒரு சேர  ஒளவையாரின் கட்டளை கேட்டு  கோட்டையை தகர்க்கும் காட்சி உருவானது .

சரி கற்பனையில் 100 யானை யோசித்தாகிவிட்டது படப்பிடிப்புக்கு 100 யானை கிடைக்க வேண்டுமே அப்படியே கிடைத்தாலும், அத்தனை யானைகளை பராமரிப்பது படப்பிடிப்புக்குள் கொண்டு வருவதென்றால் அது இன்னும் பல மடங்கு செலவுகளை உள்ளடக்கியது. இது சாத்தியமா? என வாசனிடம் அனைவரும் கேட்க அவர் சொன்ன பதில் சாத்தியம். அதுதான் எஸ்.எஸ்.வாசன்.

(தொடரும்)

– எழுத்தாளர். அஜயன் பாலா.

பின் குறிப்பு : ஆசிரியரின் தமிழ் சினிமா வரலாறு பாகம் ஒன்று 1916-1947 நாதன் பதிப்பகம் வெளியீடாக நூலாக வெளி வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து  இரண்டாம் பாகமாக இத்தொடர் 1948 துவங்கி தமிழ் சினிமாவின் முக்கிய வரலாற்றுத்தடங்களை விவரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…