தன்னம்பிக்கை கதைகள் ; தூய்மைப்பணியாளர் துணை ஆட்சியரான கதை!

மனித வாழ்வில் எல்லோருக்குள்ளும் ஆசைகளும், லட்சியங்களும், கனவுகளும் இருக்கவே செய்கின்றன. ஆனால், பெரும்பான்மையானோரால் தமது இலக்குகளை எட்டமுடிவதில்லை. இலக்குகளை நோக்கிய பயணங்களில் எதிர்ப்படும் தடைகளையும், இடர்ப்பாடுகளையும் எதிர்கொண்டு அவற்றை கடந்துவந்தவர்களே இங்கு சாதனையாளர்களாக மாறுகிறார்கள்.

அப்படியான சாதனையாளர்களுள் ஒருவர் தான் ராஜஸ்தானை சேர்ந்த ஆஷா காந்தாரா. ராஜஸ்தானை சேர்ந்த இவர் எட்டு வருடங்களுக்கு முன்னர் தனது கணவரை விட்டு பிரிந்தவர். அதன் பின்னர் வாழ்வின் சுமை அவரை துரத்த, தன் பிள்ளைக்காக ஜோத்பூரில் தூய்மைப்பணியாளர் வேலை செய்துகொண்டே, ராஜஸ்தான் நிர்வாக தேர்வுக்கு தயாரானார். அவரது கடின உழைப்பின் பலனாக தேர்வில் வெற்றி பெற்ற ஆஷா காந்தாரா விரைவில் ராஜஸ்தான் மாநிலத்தில் துணை ஆட்சியராக நியமிக்கப்படவுள்ளார்.

குடியுரிமைப்பணி தேர்வில் வெற்றி பெற ஆஷா காந்தாரா விரும்பியதாகவும், ஆனால் வயது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளின் காரணமாக அந்த தேர்வுகளில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்துள்ளார் காந்தாரா. தம் வாழ்வின் கடினமான காலங்களில் எதிர்கொண்ட அவமானங்களும், இன்னல்களுமே தம்மை இந்த நிலைக்கு உயர்த்தியதாக தெரிவித்துள்ள காந்தாரா, தாம் ஏற்கவுள்ள பொறுப்பினை பயன்படுத்தி எளியோர்க்கு உதவிட முயல்வேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‘விடியாத இரவுகள் என்று இங்கு எதுவுமில்லை’ என்பதுதான் ஆஷா காந்தாரா போன்றவர்களின் வெற்றிகள் மூலம் நமக்கு இங்கு புலப்படுவது. ஆகவே, நமது கனவுகளை நோக்கி நம்பிக்கையுடன் பயணிப்போம் நமக்கான விடியலும் நிச்சயம் எதிர்வருமென்று.
–
இரா.இளம்பரிதி தமிழ்
மிகச் சிறந்த பதிவு
VIZHIMAA