தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள்!

தமிழ் ஆய்வாளர், தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர்.
சென்னைக்கு வந்த பின்னர் கிறித்தவக் கல்லூரியில் வீ.கோ.சூரியநாராயண சாத்திரியாருடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1905 இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார்.
‘ஆங்கிலமும், சமஸ்கிருதமும் கட்டாயம் படிக்க வேண்டும். தாய்மொழிப் பாடத்தை விருப்பப்பாடமாக கற்றால் போதும்’ என்று சென்னைப் பல்கலைக்கழகம் தீர்மானம் போட்டபோது, 11 ஆண்டு காலம் பணியில் இருந்த மறைமலை அடிகளார், அதை எதிர்த்துத் தன்னுடைய பணியில் இருந்து விலகினார். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள், அதிலிருந்து தமிழை மீட்க முடிவெடுத்தார். வெறும் பேச்சால் மட்டுமே கொள்கைகளைப் பரப்பிவிட முடியாது என்ற தெளிவும் அவரிடம் இருந்ததால்தான் அதற்கு ஒரு முன்னுதாரணமாகச் செயல்படவும் தொடங்கினார்.

1916-ல் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக் காலகட்டத்தில் வழக்கத்திலிருந்த பல வடமொழிச் சொற்கள் வழக்கொழிந்துபோயின. இந்தச் சமயத்தில்தான் தன் பெயரை, ‘மறைமலை அடிகள்’ (வேதம் – மறை, அசலம் – மலை, சுவாமி – அடிகள்) என்று மாற்றிக்கொண்டார். அவரைப் பின்பற்றிப் பல தமிழர்கள் தங்களுக்குத் தூய தமிழில் பெயர் சூட்டிக்கொண்டனர்.
1933-ல் சென்னைப் புத்தகாலயப் பிரசார சங்கத்தார் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். அதில், கலந்துகொள்ளுமாறு மறைமலை அடிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு மறுப்புத் தெரிவித்துக் கடிதம் எழுதினார் அடிகள். அதில், ‘‘தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கு எமது மனம் இடம் தரவில்லை.
பண்பட்ட பழைய மொழிகள் எல்லாவற்றிலும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்னும் தன் பண்டைய நலம்சார்ந்த புகழோடு வாழ்கிறது. பிறமொழிக் கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்கும் என்றும், அதன் வளர்ச்சியினை குன்றச் செய்யும் என்றும் யாம் உறுதியாக நம்புகிறோம். ஆதலால், எமது தனித்தமிழ்க் கொள்கையினைக் கடைப்பிடிக்காத உங்களுடைய மாநாட்டிலே கலந்துகொள்ள முடியாமையினைப் பொறுத்துக்கொள்வீர்களாக’’ என்று எழுதியிருந்தார். இதன்மூலம் அவர் தமிழ் வளர்ச்சிக்கு எங்ஙனம் விளங்கினார் என்பதைக் காணமுடிகிறது.
மொழிக்கலப்பு தமிழ் மொழிக்குப் பாதிப்பாக அமையும் என்று உணர்ந்த அவர், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு இந்தி மொழி கட்டாயம் தடையாக இருக்கக் கூடாது என்று நினைத்தார் .1937-ல், இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டபோது, சென்னை சைதாப்பேட்டையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்கு மறைமலை அடிகளே தலைமை தாங்கினார்.

‘இந்தி பொது மொழியா?’ எனப் புத்தகம் எழுதினார். அதன் பொருட்டு நடந்த மறியலில் மகன் மறை திருநாவுக்கரசு போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவருடைய தாய் தடுத்தார். ‘‘தமிழ் காக்க நாம் அல்லவா சிறை அனுப்ப வேண்டும். வேலை போய்விட்டால் என்ன, வேறு வேலை கிடைக்காமலா போய்விடும்? சிவபெருமான் கைவிட மாட்டார்’’ என்று தன் மகனை அனுப்பிவைத்தார் மறைமலையடிகள்.
16-9-1943 அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மறைமலையடிகள் உரையாற்றியபோது… ஒருவர், ‘‘திராவிட நாடு பற்றி தங்கள் கருத்து யாது’’ எனக் கேள்வி கேட்டார். அதற்கு , ‘‘இந்தியா முழுவதுமே திராவிட நாடுதான்’’ என்று பதிலளித்தார்.
இலக்கியம், மறைபொருளியல், மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு, புதினம், பாடல், நாடகம், கடிதம், கட்டுரை, தத்துவம், வரலாறு, சமூகவியல் எனப் பலவகைகளில் 54 நூல்களை எழுதி அளித்துள்ளார்.
தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் தினந்தோறும் நாட்குறிப்பாக எழுதிவைத்தவர் மறைமலை அடிகள். இவை, ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளன.
‘‘என் நினைவு, பேச்சு, எழுத்து யாவும் தமிழாக உள்ளன. ஆங்கிலத்தில் எனக்குள்ள பயிற்சிக்குத் தொடர்பு வேண்டுமல்லவா, அதற்காக ஆங்கிலத்தில் எழுதுகிறேன்’’ என்று விளக்கம் அளிக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு படைத்தவர். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் மீதான வெறுப்பால், அறியாமையால் தோன்றியது அல்ல… அவருடைய தனித்தமிழ் இயக்கம். தமிழ் மீதான தணியாத காதலால் மலர்ந்தது.‘‘எல்லா உறுப்புகளும் அமைந்த அழகான ஓர் உடம்பில் அந்த உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டு, மண்ணாலும், மரத்தாலும் செயற்கையாக அந்த உறுப்புகளைப்போல் செய்து அவற்றை அதற்கண் ஒட்டவைத்துப் பார்ப்பதற்கு ஒப்பாய் இருக்கிறது… தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பது’’ என்று தமிழுக்கு விளக்கம் கொடுத்தார் மறைமலை அடிகள்.
‘அடிகளே தென்னாடு… தென்னாடே அடிகள்’’.

மறைமலை ஒரு பெரும் அறிவுக்கடல். தமிழ் நிலவு, சைவவான் அவற்றை நக்கீரரும் பிற்றைச் சிவஞான முனிவரும் ஓர் உருக்கொண்டு சிற்றை மறைமலையடிகளராகத் தோன்றித் தமிழ் வளர்க்கிறார்’’ என்று திரு.வி.க., மறைமலை அடிகளாரைப் புகழ்ந்துள்ளார்.
மறைமலை அடிகள், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்றவர். 4 ஆயிரம் நூல்களுடன் தன் வீட்டிலேயே நூலகம் ஒன்றை அமைத்தவர்; தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக் கொண்டவர்… இப்படித் தமிழுக்காக வாழ்ந்த மறைமலை அடிகள், தமிழ் மொழியின்மீது தீராத காதல்கொண்டு, தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்து தமிழ்மொழிக்கு தன்னிகரில்லாத் தொண்டாற்றியவர் மறைமலையடிகள். அதன் பயனாகத்தான் இன்று நமது தமிழ், செம்மொழி தகுதியைப் பெற்றிருக்கிறது.
பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள்.
குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.
‘தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ என்று அழைக்கப்பட்ட மறைமலை அடிகள் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழாவினை வேந்தர் கோ. விசுவநாதன் அவர்கள் தலைமையில் கொண்டாடும் வரலாற்றுக்குக் கடமையினை தமிழியக்கம் மேற்கொண்டுள்ளது.
தமிழ் மொழியை எல்லாத்துறைகளுக்கும் எடுத்து செல்வதுதான் நாம் அடிகளாருக்கு செய்யும் நன்றிக்கடன்.

மு. சுகுமார்
மாநிலச் செயலாளர் – தமிழியக்கம்.