குடி கெடுக்கும் குடி ; அரசே மது விற்கும் அவலமும் – ஓயாத நந்தினியின் போராட்டமும்!

நீங்கள் செய்தி தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், சமூக வலைத்தளங்களை கவனிப்பவராக இருப்பீர்களானால் நிச்சயம் கையில் மது எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், தனது தந்தை மற்றும் சகோதரியுடன் அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் நந்தினியை பற்றி அறிந்திருப்பீர்கள்.

சட்டக்கல்லூரி மாணவியாக இருக்கும் போதே தமிழக அரசே ‘டாஸ்மாக்’ மூலம் மது விற்பனையில் ஈடுபடலாமா? எளியோர்கள் பலரின் குடும்பங்கள் முற்றாக சிதைந்து போக டாஸ்மாக் மூலம் வழி செய்யலாமா? என்றெல்லாம் கேள்வியெழுப்பி டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டங்களில் ஈடுபடும் நந்தினி, இதர சமூக பிரச்னைகளுக்காகவும் தன்னந்தனியாக வீதியில் இறங்கி போராடக்கூடியவர். அதற்காக கைது நடவடிக்கைகளுக்கும் ஆளானவர்.

தற்போது தமிழக டிஜிபிக்கு நந்தினி மின்னஞ்சல் மூலம் புகார் ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில், அரசினை நோக்கி அவர் முக்கிய கேள்வியொன்றினை எழுப்பியுள்ளார். இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 328ன் படி மதிமயக்கம் செய்யக்கூடிய, போதை தரக்கூடிய, உடல் நலத்தைக் கெடுக்கக்கூடிய எந்தப் பொருளையும் ஒருவர் மற்றொருவருக்கு கொடுப்பது குற்றமாகும். டாஸ்மாக் மதுபானங்களும் மதிமயக்கம் செய்யக்கூடிய, போதை தரக்கூடிய, உடல் நலத்தைக் கெடுக்கக்கூடியவை தான். ஆக, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 328ன் படி இது குற்றமாகும் என தெரிவித்துள்ள நந்தினி, அரசே இத்தகைய சட்ட மீறலில் ஈடுபடலாமா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் கெடுக்கக்கூடிய, குற்றங்களை தூண்டக்கூடிய, மக்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் கெடுக்கக்கூடிய சட்டவிரோதமான டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்” எனவும் அவரது புகார் மனுவில் தெரிவித்துள்ளார் நந்தினி. மதுவிற்கு எதிரான தனது போராட்டம் தொடருமெனவும் தெரிவித்துள்ளார் அவர்.

அதேசமயம் மது விலக்கு குறித்து கருத்து தெரிவிக்கும் சமூக நோக்கர்களோ, நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக கொரோனா பெருந்தொற்று காலத்திலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு டாஸ்மாக் மூலம் மது விற்பது நியாயம் தானா? என கேள்வியெழுப்பிய திமுக தலைவர் ஸ்டாலின், அவர் ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் டாஸ்மாக் கடைகளை திறக்கத்தான் செய்கிறார். காரணம் கேட்டால், கொரோனா பரவல் குறைந்து விட்டது என்கிறார்கள்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் மது விலக்கை தேர்தல் வாக்குறுதியாக வழங்கிய திமுக, நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அது குறித்து வாய் திறக்கவே இல்லை என்பதும், டாஸ்மாக் நிறுவனத்துக்கு அரசு கொள்முதல் செய்யும் மதுபானங்கள், திமுக – அதிமுக கட்சிகளின் முக்கிய புள்ளிகளின் தொழிற்சாலைகளிடமிருந்தே பெறப்படுகிறது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி அல்ல ஊரறிந்த நெல்லிக்கனி.

மதுவால் எத்தனை எத்தனை குடும்பங்கள் சீரழிகின்றன, உயிர்கள் பலியாகின்றன, விபத்துக்கள் நடைபெறுகின்றன என்பதெல்லாம் எத்தனை எத்தனை முறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் பயனேதுமில்லை. ஏனெனில், அரசுகள் மக்கள் மீது அக்கறை கொண்டவனவாக இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

மது அரக்கனால் எளியோர்களின் குடும்பங்கள் படும் இன்னல்களை உணர்ந்துகொள்ள கூடிய அரசும் – ஆட்சியாளரும் என்றேனும் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பில் அமர்வர்களேயானால் அன்று வேண்டுமெனில் தமிழகத்தில் மது விலக்கு சாத்தியப்படலாம் ; தமிழகத்தில் மது விலக்கு கானல் நீர் தான் என்கின்றனர் அரசுகளின் மீது நம்பிக்கை இழந்தவர்களாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…