மேதகு – ஓர் தேசிய இனத்தின் காத்திரமான எழுச்சியும் ; தீர்ந்துபோகாத பெருவலியும்!

தமிழர் என்றோர் இனமுண்டு ; தனியே அவர்கோர் குணமுண்டு என வெறுமனே பாடி வைக்கவில்லை நம் தமிழ்ப்பாட்டன். அத்தகைய வரலாற்றுத் தரவுகளையும் – பெருமைகளையும் கொண்டது நம் தமிழினம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான தஞ்சை பெரிய கோயில் இன்னமும் நம் ‘கோப்பறகேசரி’ அருண்மொழி ராஜராஜசோழனின் பெருமையையும், தலைமைச்சிற்பி குஞ்சரமல்லரின் பேராற்றலையும், பழந்தமிழர் கட்டிடக்கலையையும் உலகுக்கு பறைசாற்றி நிற்கிறது.
அதேபோல், தகப்பனின் போரியல் வெற்றிகளை விஞ்சி கடல் கடந்து களம் பல கண்டு கடாரம் வரையில் வெற்றிகளை வாரிக்குவித்த ராஜேந்திர சோழனின் பெருமையையும், அவனது தலைமைச்சிற்பி சீராளனின் பெருமையையும் எந்நாளும் பேசி நிற்கும் கங்கைகொண்ட சோழபுரம்.
கலைகளில் மட்டுமல்ல மனித நேயத்திலும் தமிழன் எந்நாளும் உயர்ந்தவனாகவே இருந்துவந்துள்ளான். உலகப்பொதுமறையாம் திருக்குறள் தந்தது தொடங்கி, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வரைக்கும் அனைத்து உயிர்களுக்குமான மனித நேயத்தை பேசிய தமிழர் மரபில் வந்த ஈழத்தமிழரின் வலி நிறைந்த வரலாற்றைப் பேசி நிற்கிறது மேதகு.
ஈழத்தந்தை செல்வா காலம் தொடங்கி, முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் உயிர்களை சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு கொன்றொழித்த வரைக்குமான ஓர் நெடிய வரலாறு ஈழத்தமிழர்களின் தனி ஈழ கனவும், தாகமும், உரிமை கோரலும்.
செல்வா போன்றவர்கள் அறப்போராட்டத்தை முன்னெடுக்க, அத்தகைய போராட்டங்களால் எத்தகைய பயனுமில்லை என்பதனை உணர்ந்த இளைஞர் குழாம் தனி ஈழத்திற்காக பல இயக்கங்களை கட்டி முன்னெடுக்க, அதனில் முதன்மையாக நின்றது மேதகு.பிரபாகரனைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.
சிங்கள ராணுவத்திற்கெதிரான போரியல் நடவடிக்கைகளில் வென்று தமது கட்டுப்பட்டு பகுதியான ஈழத்தில் முப்படைகளையும் நிறுவியவர்கள். காவல்துறை, போரில் தாய் – தந்தையரை இழந்த குழந்தைகளுக்கான செஞ்சோலை காப்பகம் என உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படாத ஓர் அரசினை நிறுவியவர்கள் தமிழீழ புலிகள்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என முழுக்க முழுக்க தமிழர்களுக்கானதோர் தேசமாக உருவாகிக்கொண்டிருந்தது புலிகளின் தாகமான தமிழீழ தாயகம்.
அந்த சமயத்தில் தான், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்று உலகிலுள்ள ஆயுத போராட்ட குழுக்கள் அனைத்தையும் தடை செய்து, கருப்பு பட்டியலில் சேர்த்து சர்வதேசம். அதிலும், விடுதலைப் புலிகளும் அடங்கிப்போனது காலத்தின் கோலமின்றி வேறென்ன.
அதேபோல், இயக்கம் வளர்க்க ஆதரவளித்த, போர் பயிற்சி அளித்து ஆதரவளித்த இந்திய தேசத்தின், தலைமைப் பொறுப்பை வகித்தவரான அமரர் ராஜீவ் காந்தியை கொன்றது, ஈழ போராட்ட அமைப்புகளுள் ஒன்றான ஈபிஆர்எல்எப்பின் தலைவர் தோழர் பத்மநாபா போன்ற சனநாயக சக்திகளை கொன்றது என புலிகளும் பக்கமும் தவறுகள் இல்லாமல் இல்லை.
கடந்த காலங்களில், பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் போன்றவர்களும் கூட தங்களது தார்மீக உரிமையான பாலஸ்தீன் தனி நாட்டு கோரிக்கையினை பேச்சு வார்த்தைகளின் மூலம் சாதித்திட முயலுகையில், எத்தனையோ சனநாயக அமைப்புகளின், சக்திகளின் ஆதரவினை பெற்ற புலிகள் பேச்சு வார்த்தைகளில் அதிக நம்பிக்கை காட்டாததும், சிங்கள அரசினது எதேச்சதிகார இனவாத கடும் போக்குகளுமே முள்ளிவாய்க்கால் பெரும் துயரத்திற்கு காரணமாகும்.
தமது தார்மீக உரிமையான தனி ஈழத்தினை முதலில் சாத்வீகமாகவும், பின்பு ஆயுத போராட்ட வழியிலும் கெட்டதற்காக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றொழித்தும் இலங்கை அரசின் மீது போர்க்குற்ற விசாரணைகளை தொடக்கி குற்றவாளிகளை தண்டிக்க சர்வதேசம் இன்னமும் முனையாதது போன்ற கசப்பான யதார்த்தங்களை சனநாயக பாதையை விட்டு வேறு பாதைக்கு நகர்த்துகிறது என்றால் அதில் மிகையேதுமில்லை.
தனி ஈழ கோரிக்கையிலிருந்து இம்மி அளவு பின்வாங்கினாலும் என்னை சுட்டுக்கொள்ளுங்கள் எனக்கூறி மாபெரும் ராணுவத்தினை கட்டியெழுப்பி உலகத்தை தமிழர்களின் உரிமைப்போராட்டம் குறித்து பேசவைத்த மகத்தான தலைவன் பிரபாகரனின், அவரது புலிகளின் இயக்கத்தின், தமிழீழ மக்களின் தார்மீக உரிமைகோருதலின் திரைவடிவமே தற்போது வெளியாகியுள்ள மேதகு.