உலகமே வியந்த முதல் தமிழ் சினிமா சந்திரலேகா… தமிழ் சினிமாவின் கதை (1948-1977 )

தென்னிந்திய சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவையே உலக அளவில் திரும்பி பார்க்க வைத்த பிரம்மாண்ட படம் ஜெமினி பிக்சர்ஸ் தயாரிப்பில் 1948ல் எஸ். எஸ். வாஸன் தயாரிப்பில் வெளியான  சந்திரலேகா  . சந்திரலேகாவின் சாதனையை பார்த்தபின் தான்  இந்தியில்  மொகல் இ ஆசம் , மதர் இந்தியா போன்ற பிரம்மாண்ட காவியங்கள் வரத்துவங்கின . அவ்வகையில் இந்திய திரையுலகிற்கே முன்னோடியாக  விளங்கி ஒரு தமிழ் திரைப்படத்தை உலகம் முழுக்க பிரபலப் படுத்தியதில் அதன் தயாரிப்பாளர்  இயக்குனர் எஸ் எஸ்  வாசனின் சாதனை அளப்பரியது.

சந்திரலேகா என்ற பெயரைக் கேட்டதுமே பலருக்கும் அந்த ட்ரம்ஸ் காட்சி நடனத்தின் பிரம்மாண்டம் மட்டுமே கண்களில் விரியும் . ஆனால், இப்படி காட்சி அமைப்பில் மட்டும் அல்லாமல்  தயாரிப்பு வெளியீடு என அனைத்திலும் சாதனையை இந்திய அளவில் உருவாக்கிய திரைப்படம் சந்திரலேகா

1943ல் துவங்கப்பட்டு 1948ல் வெளியான சந்திரலேகா ஐந்து ஆண்டு கால நீண்ட தயாரிப்புக்குப் பின் வெளியானது . 1942ல் .பால நாகம்மா ,1943 ல் மங்கம்மா சபதம்   என இரண்டு அடுத்தடுத்த படங்கள் கொடுத்த வெற்றிக்குப்பின் ஜெமினி பிக்சர்ஸ் சார்பில் மூன்றாவதாக ஒரு பிரம்மாண்ட  படத்தை எடுப்பது என அப்போதே  எஸ் எஸ் வாசனுக்கு ஒரு கனவு இருந்தது . . அக்காலத்தில் ஹாலிவுட்டில்  ரோமானிய பேரரசை பின்புலமாக கொண்ட  காஸ்ட்யூம் டிராமா எனப்படும்  அரசர் பின்புலம் கொண்ட பிரம்மாண்ட படங்கள்  மிகபெரிய வசூலை நிகழ்த்தி சாதனை செய்து வந்தன. அந்த பாதிப்பில் அது  போல பிரம்மாண்ட படம் எடுக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்த வாசன்  தாசி அமரஞ்சி படம்  1944ல் வெளியான போதே ஒரு அறிவிப்பை அதன் பாட்டு புத்தகத்தின் கடைசி புத்தகத்தில் வெளியிட்டிருந்தார். கே எல் வி வசந்தா நடிக்கும் சந்திர லேகா  இதுதான் அறிவிப்பு

அப்போதைக்கு பட்டி, விக்கிரமாதித்யன் கதையில் வரும் ஒரு குட்டி கதையை படமாக பண்ணும்  எண்ணம் மட்டுமே  ஜெமினி பிக்சர்ஸ்  வாஸனுக்கு இருந்தது..  ஆனால், பிற்பாடு அதில் வரும் பாத்திரமான சந்திரலேகா என்ற பெயரைமட்டும் வைத்துக்கொண்டு வேறு கதையை உருவாக்க  தன் கதை இலாகா குழுவுக்கு கட்டளை இட்டார் வாஸன் . கதை இலாகா குழுவில் வேம்பத்தூர் கிட்டு கே.ஜே மகாதேவன் , நைனா கொத்தமங்கலம் சுப்பு என பலரும் இருந்தனர் . மாதங்கள்  ஓடியதே தவிர கதை இலாகா சொன்ன கதைகள் எதுவும் வாஸனுக்குப் பிடிக்கவில்லை . அதனால் வால்டர் ஸ்காட் உள்ளிட்ட பல ஆங்கில எழுத்தாளர்களின் சரித்திர நாவல்களை கதை இலாகாக் குழுவில் கொட்டினார் .  ஏற்கனவே எஸ் எஸ் வாசன் ஆங்கில  நாவல்களை தழுவி சினிமாக்கதை செய்வதில் வல்லவர் . கடந்த காலத்தில் ஹென்றி வுட் எழுதிய டம்பரி ஹவுஸ் கதையை தழுவி சதி லீலாவதி   படமாக மாற்றியவர் அல்லவா ( இதுபற்றிய விவரங்கள் நான்  எழுதிய தமிழ் சினிமா வரலாறு முதல் பாகம் 1916-1947 ல் படிக்கலாம்) https://thenewslite.com/special-article/2021/06/27/tamil-cinema-history-from-1948-1977/

இப்படி வாஸன் வாங்கிக்கொட்டிய பல ஆங்கில நாவல்கள் படித்தபின் கதாசிரியர் வேம்பத்தூர் கிட்டுவுக்கு ஒரு நாவல் பிடித்துப்போய் அதை படமாகச் செய்தால் சந்திரலேகா  அருமையாகவரும் என எஸ் எஸ் வாசனிடம் கூற உடனே வாஸனும் அதன்முதல் பாகத்தை வாசிக்குமாறு சொன்னார் . .

இங்கிலாந்தின்  ஒரு  கிராமத்தின்  அடர்ந்த  இரவு நேரத்தில் வெறிச்சோடிய  சாலை ஒன்றில்  குதிரைகளால் வரையப்பட்ட ஒரு மெயில் கோச் கான்வாய்  செல்லும் போது, ​​ராபர்ட் மக்கேர்,  என்னும் கொள்ளைக்காரன் மற்றும் அவரது உதவியாளர்கள் சுற்றியுள்ள  மரங்களிலிருந்து வெளிப்பட்டு   அந்த வண்டியை பயங்கர ஆயுதங்களுடன் சூழ்கிறார்கள். காவலர்களுடன் கொள்ளையர்கள் மோத கொள்ளைக்கூட்டத் தலைவன்  ஓடிசென்று கோச் வண்டியின்  கதவைத்திறக்க அதனுள்:   அழகான கண்களுடன் ஒரு பெண் முகம்

கிட்டு இப்படி விவரித்த அந்த கதை எச்.டபிள்யூ. வி. ரெனால்ட்ஸ் என்பவர் எழுதிய பிரெஞ்சுகொள்ளைக்காரன் எனும் ஆங்கில  நாவல் . அந்த முதல் காட்சியே வாஸனுக்குப்  பிடித்துப்போக  உற்சாகத்துடன் அதை அப்படியே தழுவி  திரைக்கதை அமைக்க வாஸன் உத்தரவிட்டார் . திரைக்கதை முடிந்த  கையோடு உடனடியாக மங்கம்மா சபதம் இயக்கிய  டி.ஜி.ராகவாச்சாரியை  இயக்குனராக பணியமர்த்தினார் .

படப்பிடிப்பும் துரிதமாக துவங்கின . ஒருநாள்  கிண்டி ராஜ் பவனில் நடந்த படப்பிடிப்பின் போது எஸ் எஸ். வாசனுக்கும்  ராகாவாச்சாரிக்கும் முட்டிக்கொண்டது.  கையோடு இயக்குனர்  ராகவாச்சாரியை நீக்கிவிட்டு தானே இயக்குனர் என வாஸன் அறிவித்துக்கொண்டார் . இப்படியாக  தயாரிப்பு இயக்கம் என இரண்டிலும் எஸ் வாஸன் பெயரே இயக்குனராக இடம்பெற்றது .  அதுவே அவருக்கு இயக்குனராக முதல் திரைப்படம்.

ஒளிப்பதிவாளராக மேதை என அனைவராலும் புகழப்பட்ட கே. ராம்நாத் அவர்களும் கலை இயக்குனராக ஏ. கே. சேகரும் பணியமர்த்தப்பட்டனர். இதில்  கே. ராம்நாத் பாதியில் விலக இன்னொரு ஒளிப்பதிவளரகா கமல் கோஷ் பணியமர்த்தப்பட்டார். அது போலவே  நாயகியாக வாஸன் முதலில் அறிவித்த கே. எல்.வி . வசந்தா வெளியேற்றப்பட்டு டி. ஆர் ராஜகுமாரி ஒப்பந்தமானார். இப்படி படத்தின் துவக்கத்தில் பணியமர்த்தப்பட்ட பலரும் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருந்தனர்.

இக்காலத்தில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்த விழுப்புரம்  கணேசன் என்ற ஒல்லி  இளைஞர் இந்த சந்திரலேகா  படத்தில் எப்படியும் நடிக்கும் ஆர்வத்துடன் ஜெமினி ஸ்டூடியோவுக்கு நடையாய் நடந்தார் . என் எஸ் கிருஷ்ணன் அவருக்கு சிபாரிசு செய்ததன் பேரில் வெப்பத்தூர் கிட்டுவை சென்று பார்க்க  வேப்பத்தூர் கிட்டுவும் இப் படத்தில்  நாயகனின் மெய்க்கப்பாளன் எனும் சிறிய பாத்திரத்தில் நடிக்க வைப்பதாக வாக்களித்து வாஸனிடம் சிவாஜி எனும் கணேசனை அறிமுகப்படுத்த  அவரோ அவரது நீள சடாமுடி கோலத்தையும் ஒல்லியான தோற்றத்தையும்  பார்த்து நிராகரித்துவிட்டார் .

வாஸன் ஏற்கனவே மங்கமா சபதம் படத்தில் எம். ஜி. ஆரை நீக்கிவிட்டு ரஞ்சனை ஒப்பந்தம் செய்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

சிவாஜி நிராகரிக்கப்பட்ட  இந்த வேடத்தில்  அதன் பின் நடித்தவர் எழுத்தாளர்  ஜாவர் சீத்தாரமான் . பிற்பாடு சிவாஜி மிகப்பெரிய நடிகரான பின் அவரை  நாயகனாக வைத்து இரும்புத்திரை . மோட்டார் சுந்த்ரம்பிள்ளை போன்ற படங்களை  ஜெமினி எஸ்.எஸ். வாஸன் எடுத்தது வரலாறு .

படத்தில் ஒரு காட்சிக்கு நூற்றுக்கண்கான யானைகள் தேவைப்பட்டன . இதற்காக வேம்பத்துர்ர் கிட்டு தென்னிந்தியா முழுக்க அலைந்தார் சிலோனுக்கும் பயணம் செய்தார் . கடைசியில் கமால் சர்க்க்ஸ்  பரசுராம் லயன் சர்க்கஸ் என இரண்டு நிறுவங்களிடம் ஒப்பந்தம் செய்து யானைகளை பயன்படுத்தினார். பிற்பாடு இதே யனைகளை வைத்துத்தான்  ஔவையார் படத்துக்கு பயன்படுத்தினாரா தெரியவில்லை . இரண்டும் சம காலத்தில் உருவான  ஜெமினியின் படங்கள் . . இப்படி யானைகளுக்காக உள்ளே கொண்டுவரப்பட்ட சர்க்கஸ் குழுவை அப்படியே திரைக்கதையிலும் சேர்த்துக்கொண்டு புதியதக மாற்றி எழுதி படம்பிடித்தார் .

 ஒரு இரவு, சந்திரலேகா பறக்கும் ட்ரேபீஸில் நிகழ்த்தும் போது, முன் வரிசையில் வில்லனின் ஆட்களை கவனிக்கிறாள்.இது கேமிராவில் பெரிதாக காட்டப்படுகிறது. இன்று, வேகமான ஜூம் ஷாட்கள் மூலம் இதை எளிதாக செய்ய முடியும். ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற லென்ஸ் இல்லை. ராம்நாத் அதை கிரேன் பயன்படுத்தி செய்தார். அவர் அதை நீண்ட நேரம் ஷாட் ஒத்திகை பார்த்தார். அவர் ஷாட்டை 20 முறை எடுத்த பிறகு சிறந்த டேக்கை தேர்வு செய்தார். . படத்தின் புகழ்பெற்ற நடனக்காட்சியை இயக்கியவர் ராகவாச்சரி இந்த காட்சியில் 400 நடனக் கலைஞர்களுக்கு ஆறு மாத தினசரி ஒத்திகை இடம்பெற்றன.. பல லட்சங்கள் செலவு செய்து  மிக பிரம்மாண்டமகா எடுக்கப்பட்ட இக் காட்சியில் கதகளி மற்றும் பரதநாட்டியம்  இலங்கை கண்டியன் நடனம் ஆகியவை  பயன் படுத்தப்பட்டன . இந்த காட்சிகள் படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் கமல்கோஷுக்கு  உதவியாளரக இருந்த ஏ. வின்சண்ட் பிற்பாடு மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக தமிழ் திரையுலகில் அறியப்பட்டார்.

அக்காலத்திலேயே 30 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப் படத்துக்காக  வாஸன் தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்றது மட்டுமல்லாமல் தி இந்து ஆசிரியர் கஸ்தூரி சீனிவாசனிடமிருந்தும்  கூடுதலாக வட்டிக்கு கடன் வாங்கி படத்தை முடித்தார் . முதன்முறையாக  தினசரிகளின் முதல் பக்கங்களில்  முழுப்பக்க விளம்பரம் செய்தது . மட்டும்ல்லாமல்  ஒரே நேரத்தில் இந்தியா தாண்டி ரஷ்யா ஐரோப்பிய  நாடுகளில் ரிலீஸ் செய்தது   படத்தின் விளம்பர நோட்டீஸ்களை ஹெலிகாப்டரில் இருந்து இந்தியாவின்  முக்கிய நகரங்களுக்கு தூவியது .

ஒரே நாளில் உலகம் முழுக்க அதிக பிரிண்ட்களை விநியோகம் செய்தது என படத்தின் உள்ளே காட்சிகளில்  இருந்த பிரம்மாண்டத்துக்கு சற்றும் குறையாத  பிரம்மாண்டத்தை விநியோகத்திலும் செய்து  சரித்திரத்தில் நிலை பெற்ற திரைப்படம் சந்திர லேகா இன்றைக்கு 60 கோடி  என் கணக்கிடப்படும்  அந்த மதிப்பீட்டில் அன்று ஹாலிவுட் தவிர வேறு நாடுகள் எங்கும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட வில்லை .  தமிழ் சினிமா வில் சந்திரலேகாவின் உருவாக்கம் இந்தியாவையே பிரமிக்க வைத்தது என்றால் ஐயமில்லை

அஜயன் பாலா – தொடரும்

  (அடுத்த வாரம் – மருத நாட்டு இளவரசியும்  எம் ஜி ஆர் –ஜானகி காதல் உருவான கதையும்)

 பின் குறிப்பு

ஆசிரியரின் தமிழ் சினிமா வரலாறு . பாகம் ஒன்று 1916-1947  நாதன் பதிப்பகம் வெளியீடாக நூலாக வெளி வந்துள்ளது.   அதனைத்தொடர்ந்து  இரண்டாம் பாகமாக் இத்தொடர் 1948  துவங்கி தமிழ் சினிமா வின் முக்கிய வலாற்றுத்தடங்களை விவரிக்கிறது. இத்தொடர்…https://thenewslite.com/special-article/2021/06/27/tamil-cinema-history-from-1948-1977/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘செவ்வாய் கிரகத்தில் கூட கால் வைத்து விடலாம்… கோவில் கருவறைக்குள் முடியாது’ ஆசிரியர் கி.வீரமணி கோபம்…!

செவ்வாய் கிரகத்தில் கூட இன்றைய காலகட்டத்தில் மனிதன் கால் வைக்க முடிந்த நிலையில்…