எங்கள் பண்பாட்டுத் தலைவன் இளையராஜா!
சமீபத்தில் இணையத்தில் ஒரு காணொளி அனைவரையும் நெகிழ்ச்சியூட்டியது. வெள்ளை வேட்டியும் வெற்றுடம்புமாக சைவ அடியார் கோலம் தரித்து ஒருவர் கிடாரில் இளையராஜாவின் இசையில் வந்த திரையிசை பாடலான இளைமை எனும் பூங்காற்றே பாடலை வாசிக்க உடன் அதே கோலத்தில் அவர் அருகே நிற்கும் பலரும் கண்ணில் நீர்வழிய அந்த பாடலைப் பாடுகின்றனர். காமிரா இப்போது லேசாகத் திரும்ப அங்கு மரப்பெட்டியில் வைத்திருக்கும் ஒரு சடலத்திற்கு இறுதிச் சடங்கு நிகழ்கிறது. கலாச்சார அதிர்ச்சியூட்டும் அந்த காட்சியின் வினோதம் பல்வேறு மனப் படிமங்களை கிளறிவிட்டது.
மலேசியாவில் இறந்த அந்த இளைஞன் அதி தீவிர இளையராஜா ரசிகன். தன் மரணத்தின் இறுதிச் சடங்கின் போது, இளையராஜா பாடல்கள் தான் இசைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை தான் அந்த நண்பர்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இது தான் இளையராஜா. இப்படி ஒரு விநோதம் இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலாவது நிகழுமா? ஏன் உலகத்தின் வேறெந்த மொழியிலாவது வெகுஜன சினிமா பாடலை இறுதிச் சடங்கில் இசைப்பார்களா? என்றால் இல்லை என்பது தான் பதில்.
ஒரு மொசார்டுக்கு ஆஸ்திரிய மக்கள் கொடுக்கும் மரியாதைக்கும் பீத்தோவானுக்கு பெல்ஜியம் மக்கள் கொடுக்கும் மரியாதைக்கும் நிகரானது இது. அவர்களாவது செவ்வியல் இசையின் பிதாமகன்கள். ஆனால் இளையராஜாவோ சினிமா எனும் வணிக இசையைச் சேர்ந்தவர். இப்படியிருக்க ஏன் இப்படி தமிழர்கள் மத்தியில், இளையராஜா மேல் அப்படி ஒரு வெறி?. சமீபத்தில் கூட ஒரு பெண்கள் கல்லூரியில் இளையராஜா, தென்றல் வந்து தீண்டும் போது பாடலை பாடப்போக ஒட்டு மொத்த பெண்களுமே கண்ணில் நீர் வழிய உணர்ச்சி அலைகளை எழுப்பியதை பார்க்க முடிந்தது. அவர்கள் அனைவரும் கருவில் உதிக்கும் முன்பே உருவாக்கப்பட்ட பாடல் அது என்பதுதான் விசேஷம்.
இப்படியான சினிமா இசைக்கலைஞருக்கு ஒட்டு மொத்த சமூகமும் உணர்ச்சிகளை பிரதிபலிப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?.
காரணம்… இந்த வழிபாடு அவர்களின் ஆதி ஞாபகம். தமிழர்களின் உடல் செய்யும் நன்றிக்கடன்.
எதற்காக இந்த உடல்கள் அவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும்?
அது தான் இளையாராஜா இசை வழி செய்த மகத்தான புரட்சி – பண்பாட்டு விடுதலை.
உலகம் முழுக்க இசை என்றால் மனித வாழ்க்கையில் கொண்டாட்டமும் கேளிக்கையும் தான். ஆனால் வேட்டை சமூகத்தில் தொல்குடி மரபு தொட்டு இசையே தங்களை ஆற்றுப்படுத்தும் மருந்தாக காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர். நமது தமிழ்ப் பண்பாடு பெரும்பாலும் வேட்டை சமூகத்தின் வாழ்வியலை ஒட்டி கட்டமைக்கப்பட்டது. இதனால் தான் பெருந்தெய்வங்கள் மதம் என்ற பேரில் ஆட்சி அதிகாரத்தால் நம் மீது திணிக்கப்பட்டும் இன்னமும் நமது குலதெய்வ வழிபாடு மூலம் மூனீஸ்வரனும் கருப்பனும் பேச்சியும் சுடலை மாடனும் மாரியும் இன்னும் எல்லையம்மன்களும் அண்ணன்மாரும் நம்முடன் வாழ்ந்து வருகின்றனர்.
இதனையொட்டி நமக்கென காலம் காலங்காலமாக ஒரு இசை மரபு ஒன்று இருந்து வந்தது மன்னராட்சியில் மக்கள் கூடி வாழத்துவங்கியதும் அந்த இசை பண்படுத்தப்பட்டு பல்வேறு கூறுகளுடன் அவை பண்களாக பிரிக்கப்பட்டு தாளக்கட்டுக்கள் வரிசைபடுத்தப்பட்டன. இவையே பிற்காலத்தில் தமிழிசையென அடையாளாம் பெற்றன. இப்படியாக தமிழிசை கண்ட வளர்ச்சியின் அடையாளங்களை சங்க இலக்கியம் தொட்டு பல்வேறு சான்றுகளும் தரவுகளும் நம் இலக்கியங்களில் இருப்பதை காணமுடியும்.
ஆனால், காலப்போக்கில் கடந்த சில நூற்றாண்டுகளாக நாயக்கர் காலத்துக்குப் பின் ஆட்சியாளர்களின் மாற்றத்துக்கேற்ப அறிவார்ந்த சமூகமும் மாறி புதிய வகை இசைகள் நம்மில் ஆட்சி செய்ய திணிக்கப்பட்டன. நாயக்கர் காலத்தில் கர்நாடாக இசை வளர்க்கப்பட்டு பிற்பாடு பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலும் அதுவே தொடர்ந்து பார்ப்பன சமூகத்தாரால் முன்னிறுத்தப்பட்டு நமக்கான ஆதி இசை மறுக்கப்படும் ஒரு வகை கலாச்சார அழிப்புக்கு ஆளானோம். நம் வாழ்வியலுக்கும் அந்த இசைக்கும் ஒட்டும் தொடர்பில்லை. இப்படியாக நம் வாழ்வின் இசை நம்மிடம் பறிக்கப்பட்டதால் தமிழர்களிடையே கூட்டுணர்வும் பறிக்கப்பட்டது. இசை வழியாக நமக்குள் நடந்த உணர்ச்சி பரிமாற்றங்கள் தடைபட்டன.
அதேசமயம் கிராமங்களில் சில பண்பாட்டு அடையாளங்களாலும் வழிபாடுகளாலும் மட்டும் அவை காக்கப்பட்டு வந்தன.
யோசித்துப்பாருங்கள் சென்ற நூற்றாண்டில் இசை என்றாலே கர்நாடக இசைதான் தமிழர் இசையாக நாடக உலகிலும் சினிமா தோன்றிய பின்னும் நம்மை முழுவதுமாக ஆக்ரமித்திருந்ததை யாராவது மறுக்க முடியுமா?. பாகவதர்கள் சூப்பர் ஸ்டார்களாகவே கொண்டாடப் படுமளவுக்கு கர்நாடக இசை நம்மை ஆக்ரமித்திருந்தது. சாதாரண பாமரர்கள் கூட கர்நாடக இசைதான் நம் இசை என நம்பி மாட்டு வண்டி கட்டிபோய் கச்சேரி கேட்டு வந்தனர். இசை புரிந்தவர் சிலர் என்றால் புரியாத பலரும் தலையாட்டி பாவனை செய்து வந்த கொடுமையும் நடந்தது. இத்தோடு சினிமாவில் இசை ஆதிக்கம் அதிகமாகி அவை மெல்லிசையான காலத்திலும் அவை ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த கர்நாடக இந்துஸ்தானி இசை அடிப்படையிலேயே இசைக்கப்பட்டன
இப்படியாக நம் இசை அடையாளம், பண்பாடு ஆகியவை நம் ஞாபகத்திலிருந்து முழுமையாக ஒழிக்கப்பட்டு அன்னிய இசை கேட்டு வளர்ந்த காரணத்தால் நம் வாழ்வும் வளர்ச்சியும் சோர்ந்து சுறுசுறுப்பில்லாமல் இருந்தது. தமிழர்கள் வாழ்வு கிட்டத்தட்ட ஒரு கலச்சார இருட்டில் திக்கு தெரியாமல் திக்கிக்கொண்டிருந்தபோது தொலைதூர வெளிச்சப் புள்ளியாய் 1975ல் அந்த இசை கேட்டது.
ஜானகியின் குரலில் ஒரு தெம்மாங்கு போல ஒரு ஏக்கம் நிறைந்த குரல் காடு, கழனி, கம்மாய், ஏரி, குளம் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது. அன்னக்கிளி உன்னைத்தேடுதே பாடலின் துவக்கத்தில் வரும் அந்த ஏக்கம் நிறைந்த அந்த குரல். அந்த குரலின் தெம்மாங்கு ஓசையில் தமிழர்கள் நாடி நரம்புகளில் உயிர்த்துடிப்பை உணர்ந்தனர். அவரது இசையில், ராகத்தில், தாளக்கருவிகளின் இசையால் தஙகள் மூளையின் அடி ஆழத்தில் ஒட்டிக்கிடந்த திசுக்கள் கண்விழிப்பதை உணர்ந்தனர்.
அந்த படத்தின் அனைத்து பாடல்களும் பட்டிதொட்டி எங்கு வெற்றிபெற்றன. முதன்முறையாக் தமிழ் கிராமத்து மக்கள் ஒரு சினிமா இசை தன் வாழ்வில் பிரதிபலிப்பதை உணர்ந்தனர். வேட்டை சமுகத்தின் பரந்து பட்ட நில வெளி அந்த இசையில் காட்சியால் விரியத் துவங்கியது. தொடர்ந்து கவிக்குயில், பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில் என தமிழர்களின் நிலப்பரப்பு இசை வேட்டை சமூகத்தின் விநோத ஒலிகளை ஆடுகள் தாவும்போது கேட்கும் கழுத்து மணி சப்தங்களை வானம் பார்த்த பூமியில் விவசாயி முதல் மழை தரிசிக்கும் சந்தோஷத்தை, என அவர்களது வாழ்வை அந்த இசை பிரதிபலிக்கத்துவங்கியது. அதுவரை பூட்டிக்கிடந்த அவன் உனர்வுகளுக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டது போல உணர்ந்தான்.
காட்சிகளின் பின்னணி இசையில் அவர் கொண்டு வந்த சப்தங்களில் அவர் நிகழ்த்திக் காட்டியது ஒரு புரட்சி. அங்கு அவர் தொட்டது வாழ்வியல் பிரதிபலிப்பு. அதுவரை சினிமாவில் தவிர்க்கப்பட்ட பறை இசையை ஒலிக்கச்செய்து பின்னணி இசையில் புதிய பரிமாணம் காட்டியவர் ஒவ்வொரு படமாக சில காட்சிகளின் பின்னணி இசைகுறித்து எழுதப்போனால் அது ஆயிரம்பக்கம் நூலாக எழுதிச் செல்லலாம். குறிப்பாக ரொசாப்பூ ரவிக்கைக்காரி மற்றும் முள்ளும் மலரும் போன்ற படங்களின் பாடல்களில் அவர் இசைத்த பழங்குடி இசை இதுவரை தமிழ் உலகம் கேட்டறியாதது.
இப்படிப்பட்ட இசையால் அவரை பலரும் தகரடப்பா இசை என விமர்சித்த போது கர்நடாக சங்கீதத்திலும் மேற்கத்திய சாஸ்திரிய இசையிலும் வேறு எவருமே தொட முடியாத இசை உச்சங்களைத் தொட்டு தான் இசை வழி ஆளப்பிறந்தவன் என்பதை நிரூபித்துக்காட்டினார். இதனால் அவரை எதிர்த்தவர்களும் அவரது ரசிகர்களாக மாறினர் என்பது வரலாறு.
இன்று தமிழ் தேசியம் எது என பலரும் பல வித கருத்துக்கள் சொல்கின்றனர். எங்கெல்லாம் இளையராஜா இசை ஒலிக்கப்படுகிறதோ அது எல்லாம் தமிழர் நிலம். அவர்கள் எல்லோருமே தமிழர்கள். அவர்கள் ரத்த நாளங்களில் தமிழ் மண் எங்கோ ஒட்டிகிடக்காமல் அவர்களால் இளையராஜாவின் இசையை ரசிக்க முடியாது.
இப்படியாக நம் வாழ்வோடும் வெளியோடும் வீசும் காற்றோடும் இளையராஜாவின் இசை ஒன்றிக்கிடப்பதால் தான் இரவுகளில் அவர் இசை அதிகம் கேட்கப்படுகிறது. நாற்பது ஆண்டு காலத்தில் எத்தனையோ பாடல் வந்த பின்னும் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலே எனும் பாட்டை கேட்ட மாத்திரத்தில் கண்ணீரை உகுக்க முடிகிறது
உலகமெங்கும் வாழும் பல கோடி தமிழர்கள் அன்னிய நிலப்பகுதியின் நெடுஞ்சாலைகளில் கார் ஓட்டும் போது அவர்களை மீறிய பரவசம் கண்களில் முகத்தில் மின்னுகிறதென்றால் அவர்களின் காரில் இளையராஜா அவர்களது உடலோடு உரையாடிக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்.
நம் மண்ணில் பெரியார் உருவாக்கிய விடுதலை ஒன்று என்றால் அதற்கு நிகரான கலச்சார விடுதலை பெற்றுத்தந்து வாழ்வுரிமை மீட்டவர் இளையராஜா அவர்கள்.
இன்று அவருக்கு பிறந்த நாள் என்பதும் அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதும் நமக்கு எப்பேர்பட்ட பேறு என்பதை இந்த நாள் முழுக்க ஒவ்வொரு கணத்திலும் உணர்வதே நாம் அவருக்கு செய்யும் நன்றிக்கடன்.
–அஜயன் பாலா