ஒன்றிய அரசு என்பது கெட்ட வார்த்தையா? – கோவி.லெனின்!

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ தலைமையிலான தி.மு.க அரசு அமைந்ததிலிருந்து, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசை ‘ஒன்றிய அரசு’ எனக் குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.கவினரை டென்ஷன் ஆக்கி வருகிறது. ஏதோ கெட்ட வார்த்தைபோல இதைப் பார்க்கிறார்கள்.

தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றதும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில் ‘மத்திய அரசு’ ஒத்துழைக்கும் எனத் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், ‘ஒன்றிய அரசு ஒத்துழைக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

மத்திய அரசு என்பதற்குப் பதிலாக ‘ஒன்றிய அரசு’ என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதுடன், தி.மு.க ஆட்சி மீண்டும் அமைந்தபிறகு மத்திய அமைச்சர்களை ‘ஒன்றிய அமைச்சர்கள்’ என்று குறிப்பிடுவது தொடர்கிறது. ஜி..எஸ்.டி. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் மாண்புமிகு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களும் ‘ஒன்றிய அரசு’ என்றே குறிப்பிட்டார். இதுதான் தமிழக பா.ஜ.கவினரைப் பதற வைத்திருக்கிறது. கதற விட்டிருக்கிறது.

கலைஞர், பேராசிரியர் அன்பழகன் போன்ற தி.மு.கவின் மூத்த தலைவர்கள் தங்கள் பேச்சின் போது ‘மத்திய சர்க்கார்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியவர்கள்தான். ஆனாலும், ‘ஒன்றிய அரசு‘ என்பதே சரியானது என்பதை அவர்களும் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் மட்டுமல்ல, நமது அரசியல் சட்டமே அதைத்தான் வலியுறுத்துகிறது.

அதன் தொடக்கத்திலேயே

CONSTITIUTION OF INDIA

PART I

THE UNION AND ITS TERRITORY

1.Name and territory of the Union(1) India, that is Bharat, shall be a Union of States.

என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா (பாரதம்) என்பது மாநிலங்களின் ‘ஒன்றியம்’ என்பதைத்தான் நமது அரசியல் சட்டம் வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள், புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களின் அரசுகள் இவையனைத்தையும் உள்ளடக்கியதுதான் இந்திய யூனியன் எனப்படும் இந்திய ஒன்றியம்.

மத்திய அரசு – மத்திய அமைச்சர்கள் என நாம் பொதுவாக சொன்னாலும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி அது ஒன்றிய அரசுதான் (Union Government). அதன் அமைச்சர்கள் ஒன்றிய அமைச்சர்கள்தான் (Union Ministers). பிரதமர் தலைமையிலான அமைச்சரவையும் ஒன்றிய அமைச்சரவைதான் (Union Cabinet).

பல தேசிய இனங்களையும் அதனடிப்படையிலான மொழிவாரி மாநிலங்களையும் கொண்டதுதான் பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஒன்றியம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் நமது அரசியலமைப்புச் சட்டம்.

அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கிறவர்கள் ‘ஒன்றிய அரசு‘ என்று சொல்வதே பொருத்தமானது. அந்த சொல்லே, பன்முகத்தன்மை கொண்டவர்களின் உரிமைகளையும்-அவர்கள் அனைவரும் சம வாய்ப்புடன் ஒன்றியிருப்பதையும் வலியுறுத்துகிறது.

‘ஒரே தேசம்-ஒரே தேர்தல்’ எனத் தொடங்கி, ‘ஒரே மொழி (சமஸ்கிருதம்)’, ‘ஒரே பண்பாடு’ (வருணாசிரமம்) என வலியுறுத்தும் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் வகையறாவுக்கு இந்த ‘ஒன்றியம்’ என்பது ஒவ்வாத கெட்டவார்த்தையாகத் தெரிகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படுகிறவர்களை தேசவிரோதிகள் என முத்திரை குத்துகிறார்கள் பா.ஜ.கவினர். பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் தங்களைத் தாங்களே ‘தேசபக்தர்’கள் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment

 1. முத்தாய்ப்பான சிறந்த பதிவு
  அரசியல் நோக்கர்கள், அரசியல் விமர்சகர்கள் அறிந்துணர வேண்டிய பதிவு.

  ” அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கிறவர்கள் ‘ஒன்றிய அரசு‘ என்று சொல்வதே பொருத்தமானது. அந்த சொல்லே, பன்முகத்தன்மை கொண்டவர்களின் உரிமைகளையும்-அவர்கள் அனைவரும் சம வாய்ப்புடன் ஒன்றியிருப்பதையும் வலியுறுத்துகிறது ”

  படித்தறிய படித்து தெளிய
  மூத்த பத்திரிக்கையாளரின்
  சிறந்த பதிவு.

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…