பாலின சமத்துவத்தில் பெற்றோரின் பங்கு

“இந்த உலகம் எங்க சார் போய்ட்டு இருக்கு, பொண்ணுங்களும் நமக்கு போட்டியா எல்லா இடத்திலயும் வந்துட்டாங்க”, என்று சிலர் புலம்புவதைப் பார்த்திருப்போம். சரி, “பொண்ணுங்களும் வேலைக்கு வர்றதுல உங்களுக்கு என்ன சார் ப்ராப்ளம்”, என  கேட்டால் அதற்கு அவர்கள் சொல்லும் பதில் தான் நம்மை அசர வைக்கும். அவுங்களும் வேலைக்கு வந்துட்டா வீட்ட யாரு பாத்துக்குறதாம்.


அப்போ வீட்டைப் பாத்துக்கறது மட்டும் தான் பெண்களின் வேலையா? என்று கேள்வி கேட்டால், ஆம் என்ற பதில் தான் பெரும்பாலும் வரும். முதலில், இது ஆணுக்கான வேலை, இது மட்டும் தான் பெண்களின் வேலைகள் என ஒதுக்கி வைத்தது யார்? வீட்டு வேலைகள் பெண்களுக்கானது என்றால் வீட்டில் பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்களா. வீடு என்பது நாம் பாதுகாப்பாக இருப்பதற்கான இடம். நம்மைச் சார்ந்தவர்களும் நம்முடன் அந்த இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் அவ்வளவு தான். எனில், அந்த இடத்தில் அதாவது வீட்டில் இருக்கும் வேலைகள் அனைவருக்கும் பொதுவானது தானே. இதில் ஆண் பெண் பேதம் எங்கிருந்து வந்தது. வர வைத்தது யார்?

இதற்கு முக்கிய காரணம் நாம் வீட்டில் பார்த்து வளர்ந்தது. அம்மா என்றால் வீட்டில் இருப்பார். அப்பா வெளியில் சென்று வேலை பார்த்து விட்டு வருவார். தவிர, வீட்டில் பெண் பிள்ளை இருந்தால் வீட்டு வேலைகளில் அம்மாக்களுக்கு உதவியை அவர்கள் தான் செய்வர். அவ்வளவு ஏன் சாப்பிட்ட தட்டைக் கூட ஆம்பளைப் பிள்ளைகளை எடுக்க விட மாட்டார்கள். தப்பித் தவறி எடுத்து விட்டால், ஆம்பளைப் பிள்ளை இதை எல்லாம் செய்யலாமா என்று பெண்களே செய்து விடுவார்கள். 


இதைப் பார்க்கும் பிள்ளைகளுக்கு என்ன தோன்றும். வீட்டு வேலைகள் எல்லாம் பெண்களுக்குத் தான் என நினைத்து  அடுத்த தலைமுறைக்கும் அதையே கடத்துவார்கள். பெண்களும் இதை எல்லாம் செய்வது பெருமையா, கடமை என நினைக்கும் அளவிற்கு வந்து விடுவார்கள். ஆக, முதலில் மாற வேண்டியது வீடு தான். பாலின சமத்துவத்தின் தொடக்கப் புள்ளி வீடு தான். வீடு மாறினால் தெரு மாறும், தெரு மாறினால் ஊர் மாறும், ஊர் மாறினால் நாடு மாறும். வீடு மாற வேண்டும் என்றால் வீட்டில் இருப்பவர்கள் முதலில் மாற வேண்டும். 

வீட்டில் ஒரு வேளை இருக்கிறது என்றால் ஆண் பிள்ளை என்றாலும் பெண் பிள்ளை என்றாலும் சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தில் ஒரு காட்சி இருக்கும். வழக்கமாக, வெளியே செல்லும் கணவனுக்கு, என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை அப்படியே போட்டு விட்டு மனைவி தான் வந்து செருப்பை எடுத்துக் கொடுப்பார். அவர் வெளியூருக்குச் சென்ற போது, யாரையும் எதிர்பார்க்காமல் கணவன் தானே செருப்பை எடுத்து போட்டுக் கொண்டு செல்வார். 


ஆக, ஆண்களுக்கும் அனைத்து வேலைகளையும் தனக்குத் தானே செய்யத் தெரியும். அவர்களை செய்ய விடாமல் தடுப்பது வீட்டில் உள்ள பழக்கம் தான். அவர்களையும் பழக்கப்படுத்தினால் இயல்பாகி விடும். நம் தலைமுறையாவது இதைப் புரிந்து கொண்டு, அடுத்த தலைமுறைகளான நமது பிள்ளைகளுக்கு பாலின சமத்துவத்தை வீட்டிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். 

எனவே, பாலின சமத்துவத்தை சொல்லிக் கொடுப்பதில் சமூகத்தை விட வீட்டில் இருக்கும் பெற்றோருக்கே அதிக பொறுப்பு உள்ளது. குழந்தைகளுக்கு கல்வியை கற்றுக் கொடுப்பது போல பாலின சமத்துவத்தையும் சிறு வயதில் இருத்தே கற்றுக் கொடுக்க வேண்டும்.

கற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் தாமும் குழந்தைகளின் முன் அந்த சமத்துவத்தை பின்பற்ற வேண்டும். நம்முடைய ஒரு தலைமுறை மாறினால் நம்மைப் பார்த்து வளரும் பிள்ளைகளின் தலைமுறையும் மாறும். ஒன்றை மாற்ற வேண்டுமானால் முதலில் நாம் மாற வேண்டும். வீடு மாறினால் நாடும் மாறும்.

திவ்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *