மக்கள் யாரைத் தான் நம்புவது?

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரு வழியாக முடிந்து விட்டது. மேற்கு வங்கத்தில் நடந்ததைப் போல் உயிர்பலியில் முடியாமல், சிறு சிறு சலசலப்புகள் இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் அமைதியாக நடந்ததே ஆறுதலான விஷயம் தான்.

தேசிய கட்சிகள் என்ன தான் கூட்டணி வைத்து தமிழகத்தில்  காலூன்ற நினைத்தாலும், தற்போது வரை பிரதானமானது திராவிட கட்சிகள் மட்டுமே. அதுவும் குறிப்பாக, திமுகவும் அதிமுகவும் தான். இந்த தேர்தல் முடிவுகள் இரு கட்சியினருக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. திமுகவின் கொள்கைகள் பாசிசத்திற்கு எதிரானது; திமுகவில் இருந்து பிரிந்து வந்து எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி தான் அதிமுக என்றாலும், காலப்போக்கில் இரண்டு கட்சி கொள்கைகளிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

தமிழத்திற்குள் மதவாத சக்திகளைக் கொண்டு வரக்கூடாது என்ற முக்கிய நோக்கத்தில் திமுகவுடன் மற்ற கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது. காரணம், கருணாநிதி,  ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் அடுத்த தலைமுறை தலைவர்கள் சந்திக்கும் முதல் தேர்தல்.

ஸ்டாலின்,  பழனிச்சாமி என்ற இருவரும் சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். திமுக வேட்பாளர்களுக்கு சென்ற இடங்களில் எல்லாம் வரவேற்பு இருந்ததை ஏற்றுக் கொள்ளும் நாம், அதிமுகவிற்கு எழுந்த எதிர்ப்பையும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். அதற்கு, அவர்கள் வைத்துள்ள கூட்டணி தான் காரணமா என்பதை மக்கள் தான் கூற வேண்டும். உண்மையில் இந்த தேர்தல் திமுகவா? அதிமுகவா? என்பதை விட ஸ்டாலினா? பழனிச்சாமியா? என்று கூறும் வகையில் தான் இருந்தது. 

தேர்தல் பரப்புரை களங்களே இதற்கு உதாரணம். இவரை அவர் திட்டுவது, அவரை இவர் தாக்கிப் பேசுவது என ஒவ்வொரு தொகுதி பரப்புரையிலும் பட்டியல் நீண்டு கொண்டே போனது.

அதிமுக என்னதான் வெற்றி நடை போடும் தமிழகமே என ராஜநடை போட்டு விளம்பரம் செய்தாலும் உண்மையில் மக்கள் வேறு மாதிரி தான் சிந்திக்கின்றனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர் செல்வம் செல்லும் இடங்களில் கூட மக்கள், அவர் பேசுவதைக் கண்டுகொள்ளாமல் கலைந்து சென்றனர். அமைச்சர்கள் அவர்கள் இத்தனை வருடங்களாக தங்கள் கோட்டையாக நினைக்கும் தொகுதிகளில் பரப்புரைக்குச் செல்கையில், 5 வருடங்களாக தொகுதியை எட்டிக் கூட பார்க்காமல் தேர்தல் நேரத்தில் மட்டும் வருவீர்களா? என மக்கள் கொந்தளித்ததைக் காணமுடிந்தது.

சரி, மக்களின் செயல் தான் குழப்பமாக இருக்கிறது என்றால், அவர்களின் கூட்டணிக்குள்ளும் அதே நிலை தான். கூட்டணி குறித்து பழனிச்சாமி மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்திற்கு தேவையான வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என விளக்கம் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த இணக்கம் அவர்களுக்குள் இருக்கிறதா? அதிமுக தேர்தல் அறிக்கையில் குடியுரிமைச் சட்டத்தை விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.

பாஜகவோ, குடியிரிமைச்சட்டத்தைத் திரும்பப் பெற வாய்ப்பே இல்லை. பழனிச்சாமிக்கு இந்த சட்டத்தைப் பற்றி விளக்கிக் கூறி புரிய வைப்போம் என வெளிப்படையாகவே கூறியிருந்தது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பாகவே இணக்கம் இப்படி இருந்தால், வெற்றி பெற்றால் எப்படி இருக்கும்?

திமுகவிற்கு செல்லும் தொகுதிகளில் எல்லாம் மக்கள் ஆதரவு அபரிவிதமாக இருந்தது. இதற்கு, 10 ஆண்டுகள் ஒரே ஆட்சி தொடர்வதால் மாற்றம் வேண்டும் என்ற எண்ணமா? இல்லை ஆளுங்கட்சி மீது இருக்கும் அதிருப்தியா?

என்ன இருந்தாலும், திமுக தலைமையை விரும்பாத மக்களும் இருக்கிறார்கள். அதற்கு முதலில் அவர்கள் சொல்லும் நியாயம் ஊழல் என்பது தான். அதன் பின், மின்வெட்டு பிரச்சனை மணற்கொள்ளை, நிலம் கையகப்படுத்துதல் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

திமுகவின் தேர்தல் அறிக்கையும், ஸ்டாலினின் பேச்சும் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தாலும், சிலரின் பேச்சு நெருடலாக இருப்பதை மறுக்க முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக பதவியேற்றதும் மாட்டுவண்டியில் மணல் அள்ளலாம். அதைத் தடுக்கும் அதிகாரிகள் பதவியில் இருக்க மாட்டான் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அரசு அதிகாரிகளை அவன், இவன் என ஒருமையில் அழைப்பது முறையா? இது, ஜெயிப்பதற்கு முன்னாலயே இப்படியா? ஜெயித்தால் என்ன ஆகுமோ? என்ற அச்சத்தையும் மக்களிடம் ஏற்படுத்தியது. ஆக, யாரை நம்புவது என குழப்பம் மக்களிடம் ஏற்படுவது இயல்பு தானே.

 ஆனாலும், தேர்தல் முடிந்து விட்டது. மக்கள் தங்களது எண்ணங்களை வாக்குகளாக செலுத்தி விட்டார்கள். தமிழகத்திற்கு யார் தலைமை என வாக்கு இயந்திரத்தில் பதிவாகி இருக்கும். மதவாத சக்திகளை எதிர்த்து சமூக நீதியை நிலைநாட்டும் தலைமை வந்தால் நன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *