மகளிர் தினம், ஒரு நாள் கொண்டாட்டமா?
மார்ச் 8 ஆம் தேதி காலை பெரும்பாலும் அனைவரின் வீடுகளிலும் நடைபெறும் ஒரு விஷயம். நம் வீட்டுப் பெண்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிப்பது. அடுத்த நாள் என்ன நடக்கும் திரும்ப வேலைகள் அனைத்தும் பெண்கள் தலையில் தான். ஏன் மகளிருக்கு மட்டும் என்று தனியாக ஒரு தினம் கொண்டாடுகிறோம்? அதிலும் ஒரு வரலாறு இருக்கின்றது. 18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றிக் கொண்டிருந்தனர்.வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்ததோடு, பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட மறுக்கப்பட்டது.ஒருவழியாக 1857ஆம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது.
ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், பெண்களுக்கும் ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. இதனையடுத்து, அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள், 1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கிவிட்டனர். அதன் பிறகு, 1907ஆம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர். 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்கள் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினார்கள். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனியின் கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார்.
ஆனால், அதை நிறைவேற்றுவதிலும் தடங்கல் வந்தது. இறுதியாக,1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.இதனையடுத்து பேரணி தொடங்கப்பட்ட நாளான மார்ச் 8 ஆம் தேதியையே மகளிர் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த வரலாற்றில் இருந்து முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆணுக்கு நிகராக அதே வேலையைச் செய்யும் பெண்ணுக்கும் சம ஊதியம் என்பது தான் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி. இங்கே நாம் பார்க்க வேண்டியது ‘சமம்’ என்பதைத் தான். ஊதியம் மட்டுமல்ல, உரிமைகளும், நீதிகளும், விருப்பங்களும் இருபாலர்க்கும் சமம் என்ற நிலைக்கு உயரவேண்டும். ஆனால், இன்று நிலை எப்படி இருக்கிறது? மனித இனத்தில் உள்ள இருபாலர்களில் பெண்களும் ஒருவர் என்று பார்க்காமல் அவர்களை ஆணுக்கு கீழே என்ற நிலையில் தான் நடத்தி வருகின்றனர். அண்மையில் நடந்த இரு சம்பவங்கள் இதற்கு உதாரணம்.நீதியை நிலைநாட்டும் என மக்கள் நம்பும் நீதித்துறையும் தற்போது, பெண்களுக்கு எதிராக செயல்பட்டு வருவது தான் வேதனைக்குரிய விஷயம்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காகத் தான் போக்ஸோ சட்டம் உருவாக்கப்பட்டது.’ஆடையணிந்த’ ஒரு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஒருவர் ஈடுபடுகிறார். புகாரளித்தால், பாலியல் சீண்டலின் போது, சிறுமி ஆடையணிந்திருக்கிறாள்; தோலோடு தோல் தொட்டு நடத்தினால் தான் அது போக்ஸோ சட்டத்திற்கு கீழ் வரும் என குற்றவாளிக்கு தண்டனை குறைக்கப்படுகிறது. எனில், இந்தச் சட்டம் அதன் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தைப் பூர்த்தி செய்யவில்லை என்பது தானே பொருள். இதில் அதிர்ச்சியான ஒருவிஷயம் என்னவென்றால் இதைக் கூறியதும் ஒரு ’பெண்’ நீதிபதி தான்.
‘நாட்டாமை’ படத்தில் ஒரு காட்சி. ஒரு சிறுவனின் சாட்சியை வைத்து பலாத்காரக் குற்றவாளியின் தண்டனை நிரூபிக்கப்பட்டு, ஊரார் முன்னிலையில் அவனுக்குத் தண்டனை கொடுக்கப்படுகிறது. நீங்கள் உடனே தூக்குத் தண்டனை என்று நினைத்து விட வேண்டாம். இது கொஞ்சம் வித்தியாசமானது. அதாவது, தான் பலாத்காரம் செய்த பெண்ணையே அவனுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அடடே! நன்றாக இருக்கிறதே இந்த தண்டனை. இனி வாழ்நாள் முழுவதும் அந்தப் பெண், விருப்பம் இல்லாவிட்டாலும் அவனுடன் தான் வாழ வேண்டும். உண்மையில் தண்டனை அந்த ஆணுக்கா? பெண்ணுக்கா?
”இது திரைப்படக் கதை தானே, இதைப் போல் நம் வாழ்க்கையில் நடக்கவா செய்கிறது?” என்று கேட்பவர்களுக்கு, மகாராஷ்டிர மோஹித் வழக்கு ஆம் என்று பதில் சொல்லும்.18 வயது பூர்த்தி ஆகாத ஒரு பெண்ணை மகாராஷ்டிர அரசுத் துறையில் வேலை பார்க்கும் மோஹித் பலாத்காரம் செய்துள்ளான். பிரச்சனை ஆகி, நம் வழக்கப்படி, மன்னிக்கவும் இந்தப்படத்தில் வருவது போல, திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.வழக்கு பதிவானால், அரசாங்க வேலை போய்விடும் என்ன செய்வது?, சரி தியாகி ஆகிவிடலாம் என்று நடத்தப்பட்டதே இந்தத் திருமணப் பேச்சுவார்த்தை. இதில் ஆறுதலான ஒரு விஷயம், அந்தப் பெண் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை; 18 வயதைக் கடந்து தற்போதும் ஒப்புக்கொள்ளாவில்லை.
தியாகியாகும் முயற்சி தோல்வியில் முடிந்ததால், வேறு ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்துள்ளார். வழக்கும் விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணையின் போது, “ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீங்கள் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வீர்களா? அவ்வாறு என்றால் நாங்கள் உதவுகிறோம். இல்லை என்றால் நீங்கள் உங்கள் பணியை இழக்க நேரிடும். சிறையிலும் அடைக்கப்படுவீர். நாங்கள் உங்களைத் திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தவில்லை.
ஆனால், நாங்கள் உங்கள் பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று நீதிபதிகள் அமர்வு கேட்டுள்ளது. ஒரு நீதிபதி இப்படி கேள்வி எழுப்பலாமா? அவருக்கு இந்து திருமணச் சட்டம் தெரியாதா? அதுவும் போக, விருப்பமில்லாமல் அப்பெண்ணை நிர்பந்திக்கலாமா? இந்தக் கேள்விகளுக்கான விடையை நாம் தான் யோசித்து முடிவு செய்ய வேண்டும் ஒரு நாள் மட்டும் வாழ்த்து சொல்லிவிட்டு அடுத்தநாளில் இருந்து பழைய நிலையே தொடர்கிறது என்றால் பெண்கள் தினம் எதற்கு?இவை அனைத்தையும் பார்க்கும் போது, ஒரு நாள் கொண்டாட்டமா மகளிர் தினம்? என்று தோன்றுவதும் இயல்பு தானே.
-திவ்யா