எகிப்தில் 12 வயது ஆசிரியை!

எகிப்து, கெய்ரோ பகுதியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அட்மிடா கிராமத்தைச் சேர்ந்தவர் ரீம் எல் கவ்லி. 12 வயதுச் சிறுமியான கவ்லி, தனது கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஆசிரியராக மாறி பாடங்களைக் கற்பித்து வருகிறார். தினந்தோறும் சுமார் 30 குழந்தைகள் இவரிடம் பாடம் கற்று வருகின்றனர்.

இதுகுறித்து ரீம், ”கரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. குழந்தைகள் தெருவில் விளையாடுவதற்குப் பதிலாக நானே அவர்களுக்குக் கற்பிக்கலாம் என்று நினைத்தேன்.

தினந்தோறும் அதிகலையில் எழுந்து, தொழுதுவிட்டு, அருகில் உள்ள குழந்தைகளுக்கு அரபி, கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களைக் கற்பிப்பேன். ஆரம்பத்தில் நோட்டுப் புத்தகத்தில் கற்பித்து வந்தேன். கரும்பலகை கிடைத்தபிறகு அதில் சொல்லிக் கொடுக்கிறேன். இப்போது உள்ளூர் நிறுவனம் மூலம் வெள்ளைப் பலகையும் மார்க்கர் பேனாக்களும் கிடைத்துள்ளன. அவற்றின் மூலம் தற்போது கற்பித்து வருகிறேன்.

பெரியவளாகி, கணித ஆசிரியராகப் பணியாற்ற வேண்டுமென்பதே எனது ஆசை. ஆரம்பத்தில் என்னுடைய சத்தம் உரத்துக் கேட்கும் என்பதால் அம்மாவுக்கு நான் கற்பிப்பதில் ஆர்வமில்லை. ஆனால் குழந்தைகள் கற்று பலனடைவதைப் பார்த்தவர், நான் விரும்பும் வரை பாடம் எடுக்கலாம் என்று உற்சாகப்படுத்தினார்” என்று தெரிவித்துள்ளார் ரீம் எல் கவ்லி.

12 வயது ஆசிரியரான ரீம் எல் கவ்லியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *