இறந்த பறவைகளை தேடி – இறுதி அஞ்சலி

Sambhar_Lake

ராஜஸ்தான் மாநில வனத்துறை அதிகாரி இரவு 9 மணிக்கு தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தார். சாம்பார் ஏரியிலிருக்கும் ஆபத்தான நிலைமையும், அவர்கள் அனைவரும் ஆபத்தை தடுக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள் எனபதும் அவர் பேசாமலேயே முகத்தை பார்த்ததும் புரிந்து கொள்ள முடிந்தது. அவரும் “சாம்பார் ஏரியிலிருந்து தான் வருகிறேன். மூன்றாவது நாளாக இன்னமும் பறவைகள் இறந்து கொண்டு தான் இருக்கின்றன, என்ன செய்வதென்று தெரியவில்லை” ? என்றார் கவலையுடன். இந்த நிலையிலும் என்னுடைய பயணம் பற்றி விசாரிக்காமல் இல்லை. இரவு உணவின் போதே அங்கிருக்கும் நிலை மற்றும் நாளை செய்ய வேண்டிய வேலைகளைத் திட்டமிட்டோம்.  

நான்காம் நாள் காலை சாம்பார் உப்பு நீர் ஏரிக்கு அழைத்துச் செல்ல மாவட்ட வனத்துறை அலுவலர் வந்திருந்தார். பெண் அலுவலர் என்பதால் இத்தனை பிரச்னைகளுக்கு நடுவிலும் எனது பயணம் பற்றி கொஞ்சம் கூடுதலான அக்கறையுடன் விசாரித்தார். அவர் கடந்த நான்கு நாட்கள் நடந்த பிரச்சனைகளை விளக்கமாக பகிர்ந்து கொண்டார்.

 சாம்பார் ஏரியை சென்றடைந்தோம், செய்தியாளர்கள், இந்தியாவின் மற்ற பகுதியிலிருந்து வந்திருந்த ஆய்வாளர்கள், தன்னார்வலர்கள் என மக்கள் கூட்டமும் இருந்தன. இறந்தவரின் வீட்டு வாசலில் நிற்பது போன்ற தோற்றம் மட்டுமில்லை மனநிலையும் அப்படியே இருந்தன.  ஆங்காங்கே பரவலாக பறவைகள் இறந்து கிடந்தன. இறக்கும் பறவைகளை ட்ரக்கில் ஏற்றி குழி தோண்டி புதைத்துக்கொண்டிருந்தனர்.

நாம்  கொரோனா நோயினால் இறந்தவர்களை குவியல் குவியலாக எரிப்பதை தொலைக்காட்சியில் பார்த்தோம், அப்போது நம் ஒவ்வொருவருக்கும் இருந்த  மனநிலை  மறக்கமுடியாது, ஆனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்குமோ அதே மனநிலையில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாம்பார் ஏரியில் நின்றுகொண்டிருந்தோம் .

இதை தவிர வேறு எந்த வார்த்தைகளால் வலியை புரியவைப்பது என்று தெரியவில்லை. அறிகுறிகளுடன் காணப்பட்ட பறவைகளை சிகிச்சைக்காக எடுத்து வந்து ஒரு இடத்தில் பாதிப்புக்கு தகுந்தாற் போல் பிரித்து கால்நடை மருத்துவர்களுக்கு உதவிக்கொண்டிருந்தனர் தன்னார்வலர்கள்.

இறந்த பறவைகளின் உடல்களை பரிசோதனைக்காக வைக்கட்டிருந்தன

அறிகுறிகளை உடனடியாக கவனித்து கால்நடை மருத்துவரிடம் கொண்டு வந்த பறவைகள் தப்பித்தன, தாமதமாக வந்த பறவைகள் உயிர் பிழைத்தாலும் இறக்கைகள் செயல்பட முடியாமல், பறக்க இயலாமல் முடங்கி போனது.

நாங்களும் ஏரியை சுற்றயுள்ள நிலை பற்றி விசாரித்து, கால்நடை மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து பிறகு உடல் கூறு ஆய்வு செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தோம். உடல் கூறு ஆய்வு செய்ததில் மாற்றங்கள் எதுவும் தெரியாததால் சந்தேகம் ஏற்பட்டது, சில பறவைகளையோடு நிறுத்தி மீண்டும் கால்நடை மருத்துவர்களிடம் பேசினோம்.

அப்பொழுது ஐந்தாம் நாள், 18 ஆயிரம் பறவைகள் இறந்துவிட்டன. ஆதலால் அன்று மாலையே அனைத்து நிபுணர்களும் கலந்து பேச அரசும் வனத்துறையும் முடிவு செய்தது. மாலை எனது விஞ்ஞானியும் வந்து சேர்ந்தார். ஆராச்சியாளர்கள், விஞ்ஞானிகள், அரசு அலுவலர்கள் மற்றும் அப்பகுதி அரசியல் பிரமுகர்கள் சிலரும் கலந்து பேசினோம். அனைவரிடமும் எதனால் ? என்ற கேள்வி மட்டுமே இருந்தன. அனைவரின் மனதிலும் இறக்கும் எண்ணிக்கையை குறைப்பதற்காவது வழிகளை யோசித்து செயல்படுத்த வேண்டும் என்றே தோன்றியது.

உலகில் இதற்கு முன் வேறு எங்காவது நடந்துள்ளதா என யோசித்ததில்  அமெரிக்காவின் கிரேட் லேக், கனடாவில் உள்ள சஸ்கட்சேவான், வட மற்றும் தென் கொரியா ஆகிய வெவ்வேறு நாடுகளில் நடந்துள்ளன என தெரியவந்தது. மீண்டும் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியாத  கடினமான சூழலுக்கு தள்ளப்பட்டோம்.  

ஆதலால் முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள பல்வேறு ஆய்வகளுக்கு இறந்த பறவைகளின் உடல் உறுப்புகளும், இறக்கும் நிலையிலிருந்த பறவைகளின் இரத்த மாதிரிகளையும் அனுப்பலாம் என முடிவு செய்துதோம். அன்று இரவே சில மாதிரிகளையும், காலை சில மாதிரிகளையும் வேறு வேறு மாநிலங்களில் உள்ள ஆய்வங்களுக்கு விமானத்தில் அனுப்பிவைத்தனர் அதிகாரிகள். சூழல் மாசு அளவை ஆராய எங்களுடைய ஆய்வகத்திற்கு மாதிரிகளை விமானத்தில் அனுப்பிவைத்தோம். ஆறாம் நாள் இன்னும் பறவைகள் இறந்துகொண்டிருந்தன.    

இறந்த பறவைகளின் உடல்களை குழிக்குள் புதைக்கும் காட்சி

அனைவரும் ஏதாவதொரு ஆய்வகத்திலிருந்து முடிவு தெரியாத என்று காத்துக்கொண்டிருந்தோம். நெருங்கிய உறவுகளில் ஒருவர் உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவர் பரிசோதிக்கும் போது நாம் அந்த அறைக்கு வெளியில் நடந்துகொண்டிருப்போமே, அந்த மன நிலையில் அங்கிருந்த அனைவரும் 24 மணி நேரத்தைக் கடந்தோம்.  ஏழாம் நாள் ஆய்வு முடிவு வந்தது, அப்பொழுது பறவைகளின் இறப்பு 20 ஆயிரத்தை தொட்டது.  இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வகம் (IVRS) avian botulism என்ற நோய் இத்தகைய தாக்குதலை ஏற்படுத்தியுள்ளன என்ற ஆய்வு முடிவை வெளியிட்டனர்.

அதென்ன avian botulism ?

Clostridium botulinum என்ற பாக்டீரியம் பறவைகளின் உடலை வாழ்விடமாக கொண்டுள்ளன. இந்த பாக்டீரியாவின் வளர்சிதை மாற்றக் கழிவுகளால் ஏற்படும் பாட்டுலினியம் என்ற நஞ்சினால் உண்டாகும் நோய். இந்த பாக்டீரியா ஆழமான குளம் குட்டைகளில் தேங்கிய தண்ணீரில் இனப்பெருக்கம் செய்கின்றன.  அங்குள்ள பறவைகளை மட்டுமில்லாமல் பாலூட்டிகள் மற்றும் மீன்களையும் தாக்குகின்றன.

இந்த பாக்டீரியா வயது வரம்பின்றி பறவைக் குஞ்சுகளையும் விட்டுவைக்காமல் தாக்குகின. ஒரு பறவையிலிருந்து மற்றொரு பறவைக்கு நேரடியாக பரவுவதில்லை, ஆனால் இறந்த பறவைகளில் உடல்களை மக்கச்செய்யும் புழுக்களால் பரவுகின்றன. இதனால் இறந்த பறவைகளை உடனடியாக அப்புறப்படுத்தி புதைப்பது உடனடியாக செயல்படுத்த வேண்டிய ஒன்று.

ஆய்வு முடிவு வெளிவந்த உடனடியாக சிகிச்சைக்கான ஆலோசனைகள் நடத்தி, அறிகுறியுடன் காணப்பட்ட பறவைகளை தனிமைபடுத்தி சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன. எட்டாம் நாள் இரவு பறவைகள் ஏதும் இறக்கவில்லை. இறப்பு தடுக்கப்பட்டது. அனைவரும் பெருமூச்சு விட்டுகொண்டோம். இது தான் 20,000 பறவைகள் முதன் முறையாக ஒரே இடத்தில் இறந்திருக்கின்றன. அதன் பிறகு இன்று வரை அங்கு மட்டுமில்லை எங்கும் எந்த காரணத்தினாலும் இந்த அளவிற்கு இறப்பு ஏற்படவில்லை என்பதில் மகிழ்ச்சி. எங்கள் ஆய்வகத்திலிருந்து சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கான காரணங்களையும், தீவரத்தையும், அவற்றை குறைக்க தீர்வுகளையும் முன் வைத்தோம். தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தன. இனிமேலும் பறவைகள் இறக்காது என்ற நம்பிக்கையில், எந்த பதட்டமுமின்றி பொறுமையாக ரயில் பயணத்தை ரசித்துக்கொண்டு கோவைக்கு வந்துசேர்ந்தேன். 

பயணமும் காட்சியும் தொடரும்……….

– முனைவர். வெ. கிருபாநந்தினி, பறவைகள் ஆராய்ச்சியாளர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *