இறந்த பறவைகளை தேடி- இயற்கை கட்டிடக் கலைஞர் மீது ஏன் வெறுப்பு

Special Article

இயற்கை கட்டிடக் கலைஞர் வேற யாருமில்லைங்க தூக்கணாங்குருவி தான். இனப்பெருக்க காலத்தில் ஆண்குருவி இனைதேடி ,பெண் துணை உறுதியான பின்பே ஆண்குருவி கூடு கட்ட ஆரம்பிக்கிறது. கூடு பாதி கட்டிய பின், பெண்குருவி கூட்டை விசிட் செய்து, முழுவதும் சுற்றிபார்க்கும். கூட்டின் உட்பகுதி பெண்குருவிக்கு பிடிக்கவில்லை என்றால் ஆண்குருவியை விட்டு பிரிந்து விடும். ஆண்குருவி வேறு பெண்குருவியை தேடிச்செல்லும், அல்லது கூட்டை சிறிது மாற்றியமைத்து மீண்டும் அதே பெண்குருவியை கூட்டி வந்து காட்டும் இரண்டாவது முறையாக சரிபார்க்கும். இதே போல் தன் இணையரின் ரசனைக்கேற்ப கூடுகட்டிய பின்பும், அதை இணையர் ஏற்றுக்கொண்ட பின்பும் கூட்டின் நீண்ட பகுதியை ஆண்குருவி கட்டத் தொடங்கும். இவை நார்களை, இலைகளை தங்கள் அலகுகளால் நேராக கிழித்து அவற்றை பின்னி கூடுகளைக் கட்டும். இதனால் தூக்கணாங்குருவியை ஆங்கிலத்தில் வீவர்ஸ் பேர்ட் (Weavers Bird) என்று அழைக்கிறார்கள். 

ஆண்பறவை தான் கூடு கட்டும். காய்ந்த புல், வைக்கோல், நீண்ட இலைகள் போன்றவற்றை சேகரித்து வந்து கூடு கட்டும். பின்பு ஈரக்களிமண், உலர்ந்த மாட்டுச்சாணி ஆகியவற்றை கொண்டு வந்து, அவற்றை பசையாக்கி புல், வைக்கோல், இலைகள் ஆகியவற்றை இணைத்து வலுவான உறுதியான கூட்டினை கட்டுகிறது. வீடு கட்ட மனிதன் சிமிண்டு அல்லது சுண்ணாம்பு கலவையை பயன்படுத்துவது போல்வே கட்டுகிறதா இல்லை நாம தான் அவர்களை போல் கட்டு கற்றுக்கொண்டோம். இது மட்டுமில்லை இதுபோன்ற நாம் செய்யும் பல செயல்பாடுகள் இயற்கையிடமிருந்து கற்றுக்கொண்டது தான். தூக்கணாங்குருவி பெரும்பாலும் கூடு கட்ட கிணற்றுப் பகுதிகள் மற்றும் பனை மரங்களையே தேர்ந்தேடுக்கிறது. 

பெண் குருவி ஒரு பருவத்திற்கு மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடும். இந்த முட்டைகள் கூண்டுப் பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்படும். காற்று வீசும் திசையை நன்கு கணித்து அதற்கேற்ப கூண்டின் குடுவைப்பகுதியும், நீண்ட பகுதியும் அமைக்கப்படும். காற்று எவ்வளவு வேகமாக அடித்தாலும் முட்டைகள் குடுவைப்பகுதிக்குள்ளேயே இருக்கும் படி நீண்ட பகுதி பின்னப்பட்டிருக்கும். மேலும் கூட்டின் மீது காற்றின் தாக்கம் இல்லாத மரக்கிளைகளில் இவை கூடு கட்டும். குடுவை போன்ற பகுதியை கட்ட எட்டு நாட்களும் நீண்ட பகுதியை கட்ட பத்து நாட்களும் எடுத்துக்கொள்ளும். பெண் குருவி பதினைந்து நாட்கள் அடைகாக்கும். இதனாலேயே இதன் கூட்டை வைத்து காற்று, மழை போன்றவற்றை கணித்தனர் நம் முன்னோர்கள். 

இத்தகைய பறவை இறந்து கிடக்கின்றன என்று கோவை மாவட்டம் வனகாப்பாளர் எங்களுக்கு தகவல் கொடுத்தார். ஒரு மணி நேரத்தில் சூலூர் வன வரம்பு அலுவலகத்துக்கு விரைந்தோம். அப்பகுதி வனப்பாதுகாவலர் வன அலுவலகத்தில் எங்களுக்காக காத்திருந்தார். அவரின் உதவியுடன் தூக்கணாங்குருவி இறந்து கிடக்கும் இடத்திற்கு சென்றோம். அங்கே பறவைகளின் உடல்கள் சிதறிக்கிடந்தன. இறந்த முழுப்பறவை ஒன்றைக் கூட காணவில்லை. எப்பவும் போல் அந்த வீட்டைச் சுற்றியுள்ள மக்களிடம் விசாரித்ததில் அவர்களும் எப்பவும் போல் யாருமே பேசவில்லை. 

ஒரு குறிப்பிட்ட வீட்டின் மதில் சுவருக்கு அருகில் மட்டும் இறந்து கிடந்தது சந்தேகத்தை அதிகரித்தது. ஆதலால் அந்த வீட்டின் உரிமையாளரின் அனுமதியோடு மொட்டை மாடிக்கு சென்று பார்த்ததும் சந்தேகம் உறுதியானது. மேலும் சில கள ஆய்வின் மூலம் தரவுகளை திரட்டிக்கொண்டு ஆய்வகத்திற்கு திரும்பினோம். 

உடல்கூறு ஆய்வு செய்ததில் வயிற்றுபகுதியில் இறுதியாக உட்கொண்ட அரிசி என தெரிய வந்ததும் அதிர்ச்சியடைந்தோம். ஏனென்றால்   நாங்கள் மொட்டை மாடியில் கண்டதும் இதே அரிசி தான். இரண்டையும் ஆய்வு செய்ததில் முடிவு ஒன்றாகவே இருந்தது. சந்தேகமும் அந்த பறவைகளின் வாழ்வை போன்றே முடிவுக்கு வந்தது. 

பறவைகள் காப்பாற்ற படவேண்டியவர்கள். அவர்களை கொலை செய்வது நமக்கு நாமே உண்ணும் slow poison அதுவும் நமது அடுத்த தலைமுறைக்கான விசம் என்பதை இன்னும் எத்தனை இயற்கை பேரிடர்களுக்குப் பின் உணரப் போகிறோம் என்ற கேள்வியுடனும், பாவம் இப்பறவைகளுக்கு ஏன் விசம் வைத்து கொன்றனர் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்காமல் குழப்பத்துடனுமே பயணிக்கிறேன். 

பயணமும் காட்சியும் தொடரும்……

முனைவர். வெ. கிருபாநந்தினி, பறவைகள் ஆராய்ச்சியாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *