இறந்த பறவைகளை தேடி- நெளிந்த புழுக்கள் : கிருபா நந்தினி.

Title_Thumb_Tuesday_Article

செய்தித் தாள்களை பார்த்து தெரிந்து கொள்ளும் எங்களுக்கு மாவட்ட வனத்துறை அதிகாரியே தொடர்பு கொண்டு “பறவைகள் இறந்து கொண்டிருக்கின்றன, சீக்கிரமா வந்து என்ன பிரச்சனைனு பாத்து சொல்லுங்க” என அழைத்த பொழுது ஆச்சரியமாகவே இருந்தது. உடனே நேரடியாக பறவை இறந்து கொண்டிருந்த இடத்திற்கு கிளம்பினோம்.  

அந்த ஊரின் பெயர் கொக்ரேபெல்லுர் (Kokkarebellur) கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தின் மத்தூர் வட்டத்திலுள்ள உள்ள ஒரு கிராமம். இக்கிராமத்துக்கு மஞ்சள் மூக்கு நாரையின் கன்னடப் பெயரான “கொக்ரே” எனப் பெயரிடப்பட்டது. இந்த பறவை ஒவ்வொரு ஆண்டும் இங்கு அதிக எண்ணிக்கையில் கூடு கட்டுகிறது. மைசூர் மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு இடையில் மத்தூர் அருகே இந்த கிராமம் அமைந்துள்ளது. மஞ்சள் மூக்கு நாரைகளைத் தவிர, கூழைக்கடாக்களும் இங்கு அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இவ்விரு இனங்களும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறுத்தலுக்கு அருகில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளனது. இந்தியாவிலுள்ள பறவைகளின் 21 இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் இந்த கிராமமும் ஒன்றாகும். 

இத்தகைய முக்கியத்துவமான பகுதி என்பதால் Community Reserve பகுதியாக ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வன பகுதிகள் பல வகைகளில் இதுவும் ஒன்று. நேரடியாக வனத்துறையினரால் ஒரு சில வன பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு குறிப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களே அங்கிருக்கும் பறவைகள், விலங்குகளுக்கு பிரச்சனைகள் வராமல் பாதுகாத்து வருகின்றனர். அதே போல் கொக்ரேபெல்லுர் மீனுன்னும் பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை மற்றும் கூழைக்கடா என்ற இரண்டு வகையான பறவை இனங்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் கூடுகட்டுவதால் இதை Community Reserve ஆக அறிவித்துள்ளது கர்நாடக மாநில அரசு. மக்களும் பறவைகளை தொல்லை செய்யும் பட்டாசு போன்ற எதையும் அவர்கள் கிராமத்தில் செய்வதில்லை. பிள்ளை பேறுக்கு வந்த மகள்களாகவே பார்க்குமளவிற்கான புரிதல் இந்த கிராம மக்களுக்கு இருப்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.  இப்பறவைகள் அங்கிருக்கும் மரங்களை கூடு கட்டி பயன்படுத்துவதால் மரங்களின் உரிமையாளருக்கு ஒவ்வொரு வருடமும் ஊக்கத்தொகை வழங்குகிறது கர்நாடக வனத்துறை. 

கீழ விழுந்திருந்த பறவைக்கு உணவளிக்கும் வனக்காவலர்

பெங்களூரிலிருந்து மைசூருக்கு செல்லும் பேருந்தில் செய்தித்தாள் விநியோகிப்பட்டது. அதில் இப்பறவைகள் இறந்த செய்தி படித்தவுடன் நேரடியாக கொக்ரேபெல்லுருக்கு செல்லலாம் என முடிவு செய்து மத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கினோம். மத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து கொக்ரேபெல்லுருக்கு ஒரு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பேருந்து செல்லும் என அங்கு விசாரித்ததில் தெரிய வந்தது ஆதலால் ஆட்டோவில் சென்றோம் நாங்கள் அந்த கிராமத்துக்கு பேருந்து நிறுத்தத்தில் இருந்து தேநீர் கடையில் தேநீர் குடித்துக்கொண்டே நிலைமையை விசாரித்தோம். தகவல்களை சேகரித்தோம். 

பின்பு அந்த பகுதியில் ஒரு வன துறைக்கான சிறிய கட்டிடத்தில் பாதிக்கப்பட்ட பறவைக்கு உணவளித்துக்கொண்டிருந்தார் வனக்காவலர். அவரிடம் விசாரித்துவிட்டு தங்குமிடம் சென்றோம். அடுத்த நாள் ஒரு பறவை இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தவுடன் மாவட்ட வன அலுவலருடன் சென்றோம்.

இறந்த பறவையை உடற்கூறு ஆய்வு செய்தேன். வயிற்றின் ஒரு பகுதியான அரவை பகுதியை திறந்த உடனே எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.  இயல்பாக பாதி செரிமானம் அடைந்த உணவு இருக்கும். இதனை வருடங்களில் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளான பறவைகளை ஆய்வு செய்ததிலும் கூட இறுதியாக உட்கொண்ட உணவே இருக்கும். ஆனால் இந்த பறவையின் அரவை பகுதியை திறந்தவுடன், எனதருகில் நின்றவர்களும் சற்று விலகிச் சென்றனர், அதே நேரத்தில் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த பல்வேறு ஊடகத்திலிருந்து வந்திருந்த நிருபர்கள் அருகில் வந்து புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தனர், மாவட்ட வன அலுவலரிடமும், என்னிடமும் பேட்டியும் எடுத்தார்கள். 

உடல் கூறு ஆய்வும் அரவைப் பகுதியில் இருந்த புழுக்களும்  

உணவுக்கு பதிலாக அரவை பை முழுவதும் குடல் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. நமக்கு மலக்குடல் அரித்தால் மருத்துவரிடம் பரிசோதித்தல் வயிற்றில் பூச்சி என்று சொல்வார்கள். மருத்துவர்கள் கொடுக்கும் மருந்தை உட்கொண்டால் அடுத்த நாள் காலை மலத்துடன் வெள்ளை நிற புழுக்களும் சேர்ந்தே  வெளியே வந்துவிடும். 

ஆனால் பறவைகளோ பாவம், என்ன செய்வார்கள்? அதும் நம்மால் அவர்களுக்கு ஏற்படும் இது போன்ற கொடுமைகளுக்கு? அவைகள் குடிக்கும் நீர், உண்ணும் உணவு போன்றவற்றில் பிரச்சனைகள் இருந்தால், இதுபோன்று புழுக்கள் உருவாகும். ஆதலால் உணவு எடுத்து கொள்ள முடியாமல், சத்துக்களை இழந்து பறக்க முடியாமல், அதன் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்க முடியாமல்   மன உளைச்சல், உடல் வேதனை ஆகியவற்றால்  அதன் வாழ்க்கை முடிந்து விடுகிறது, 

புழுக்கள் வயிற்றுக்குள் ஏன் வருகிறது என்ற பல கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் கள ஆய்வுகளை தொடர்ந்தோம். கூழைக்கடா நீர் அருந்த செல்லும் அனைத்து நீர் நிலைகள், மீன் உண்டுவிட்டு கூட்டிலிருந்து கீழ விழுந்திருந்த மீதி மீன்கள் ஆகியவற்றை சேகரித்தோம்.   எங்களுடன் மாவட்ட வன அதிகாரியும் பறவைகள் இறப்பு, எப்படி தடுப்பது என்பது பற்றி விரிவாக கலந்து பேசிக்கொண்டே பயணித்தோம்.

மீனில் ஆய்வு செய்யும் முனைவர் மைத்ரேயி

பறவையின் உடல் உறுப்புகள், அவைகள் அருந்தும் நீர் மற்றும் உண்ணும் மீன்களை ஆய்வகத்திற்கு எடுத்து வந்து வேதிப்பொருட்கள் பற்றிய ஆய்வுகளை தொடர்ந்தோம். எங்கள் குழுவில் உள்ள மீன்களில் ஆய்வு செய்யும் முனைவர் மைத்ரேயி மீன்களை உடல் கூறு ஆய்வு செய்தார். அதிலும் ஒரு சில மாற்றங்களை கவனிக்க முடிந்தது. அதன் உடலில் பழுப்பு நிற முட்டை போன்ற தோற்றங்களை கவனித்து சொன்னார். முட்டை புழுக்கள் என ஆய்வின் முடிவில் தெரியவந்தது. பின்பு அதன் வாழ்க்கை சுழட்சியை தீவிரமாக ஆராய்ந்தோம். 

இனப்பெருக்கம் செய்ய இடம் விட்டு இடம் பயணித்து இணையை முடிவு செய்து, கூடுகள் கட்டி, முட்டைகளிட்டு, குஞ்சுகள் பொரித்து அவர்களை வளர்க்கும் பொறுப்பும் கடமையும் இருக்கும் நேரங்களில் இது போன்ற கொடுமைகளால் அதன் குஞ்சுகள் பெற்றோர்களற்று வளர போராடுகிறார்கள், இந்த குஞ்சுகள் திரும்பி அவர்களின் இடங்களுக்கு எப்படி செல்வார்கள், அடுத்த வருடம் அவர்களின் மன நிலை என்ன? தீர்வு கண்டறிந்து செயல்படுத்தவில்லை என்றால் நம்முடைய சுற்றுச்சூழல் இன்னும் எப்படி பாதிப்புக்குள்ளாக்குவோம்?, நாம் எப்படி அதன் பாதிப்புகளை எதிர்கொள்ள போகிறோம்??. போன்ற பல கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் இன்னும் பதில் தேடிக்கொண்டேயிருக்கிறோம்.

பயணமும் காட்சியும் தொடரும்….. 

முனைவர். வெ. கிருபாநந்தினி, பறவைகள் ஆராய்ச்சியாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *