இரண்டு ஆண்டுகளில் மட்டும் 487 விருதுகளை குவித்த தமிழ்நாடு; அமைச்சர் மா.சு பெருமிதம்

கடந்த 11 ஆண்டுகளில் சிறந்த மருத்துவமனைக்காக ஒன்றிய அரசால் இதுவரை வழங்கப்பட்ட 556 விருதுகளில் திமுக ஆட்சி அமைந்தபின் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 487 விருதுகளை தமிழம் பெற்றுள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம். மணப்பாறையில் ரூ. 10 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுக்கு புதிய கட்டிட கட்டுமானப்பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ. 10 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுக்கான புதிய கட்டிடம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா காமராஜர் சிலை அருகில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினர்.

அதன் பின்னர் ரூ. 30 லட்சம் மதிப்பில் மணப்பாறை அருகே கொடும்பபட்டியில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கல்வெட்டையும் திறந்து வைத்தனர். விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாமெல்லாம் ஏ.எம் மற்றும் பி.எம் ல் தான் (காலை, மாலை) வாக்கிங் செல்வோம் ஆனால் சி.எம் கூட வாக்கிங் செல்லும் அமைச்சர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மட்டும்தான். கொரோனா காலகட்டத்தில் திமுக ஆட்சிப்பொருப்பேற்றது. அப்போது இருந்த காலகட்டத்தில் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தமிழகம் முழுவதும் சுற்றி வந்து பல உயிர்களை காப்பாற்றினார். 

அவருக்கு உறுதுணையாக மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் சேர்ந்து பணியாற்றினார்கள் . இவர்களுக்கு எல்லாம் தலைமை மருத்துவராக செயல்பட்டவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாது பாதுகாப்பு அங்கியை அணிந்து கொண்டு கொரோனா வார்டுக்கு உள்ளே சென்று நோயாளிகளுக்கு ஆறுதலை சொல்லிவிட்டு வந்த இந்தியாவிலேயே ஒரே முதலமைச்சர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தான். என பெருமிதத்தோடு தெரிவித்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 2012 இல் இருந்து ஒன்றிய அரசு சிறந்த மருத்துவமனைகளுக்கு தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது வழங்கி வருகிறது. இதுவரை தமிழ்நாட்டிற்கு 556 விருதுகள் கிடைத்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் இந்த விருது கிடைத்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே மொத்தம் 487 விருதுகள் பெற்றுள்ளது. மொத்தம் 556 வருதுகளில் 487 திமுக ஆட்சி காலத்தில் கிடைத்துள்ளது என்றால் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் வெறுமனே 69 மட்டுமே பெற்றுள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் 487 விருதுகள் கிடைத்துள்ளது என்றால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் புதிய கட்டமைப்புகளை மேம்படுத்தியது புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தியது என்று பல்வேறு வகைகளில் செய்து வரும் காரணத்தினால் தான் விருதுகள் கிடைத்தன. சட்டமன்றத்தில் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் தொடங்கும் என்று அறிவித்தோம் அதன்படி நாளை மறுநாள் 22 ஆம் தேதி காலை ஈரோட்டில் துவக்கி வைக்க உள்ளோம். ஈரோடு, திருப்பூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் புற்று நோய்க்கான பரிசோதனைகள் துவங்கப்படவுள்ளது. 

7 மாதங்களில் இந்த பரிசோதனையில் முழுமையாக நிறைவுபெறும். கரூர் மாவட்டத்திலும் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது என கரூர் எம்பி தெரிவித்துள்ளார் அதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த நிதியாண்டில் அதனையும் சேர்த்து அடுத்த ஆண்டு கரூர் மாவட்ட மக்களுக்கும் ஒட்டுமொத்த பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 

 நிகழ்ச்சியில் கரூர் எம்.பி. ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *