‘கடல் வற்றிவிடும் என்று கனவு காணாத அண்ணாமலை’ அதிமுக ஜெயக்குமார் சாடல்

கடல் எப்போதும் வற்றாது, காத்திருந்து காத்திருந்து பாஜக வீணாக போகும். பாஜக ஆட்சி என்பது தமிழ்நாட்டில் நடக்காத ஒன்று. பெரியார் சிலை விவகாரத்தில் எச்சரிக்கையால் அண்ணாமலை பல்டி அடித்துவிட்டார். ஓபிஎஸ் குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கிறார். பொன்னேரியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நடிகர் வடிவேலு கால் வைத்த இடமெல்லாம் கன்னிவெடி என்பது போல ஓபிஎஸ் நிலைமை ஆகிவிட்டது என்றும் கட்சி விதிகளின்படி, பொதுக்குழு மற்றும் தொண்டர்கள் ஆதரவுடன் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும், ஆனால் ஓபிஎஸ் வீணாக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். 

கொக்கு தொடர்பான விமர்சனத்தில் அண்ணாமலைக்கு புரிதல் இல்லை எனவும் கடலை உவமையாக கொண்டு தான் அந்த பழமொழியை, கடல் எப்போதுமே வற்றாது என்றும் காத்திருந்து, காத்திருந்து பாஜக வீணாக போகும் எனவும், 2026ல் அதிமுக ஆட்சி அமையும் எனவும், பாஜக ஆட்சி என்பது தமிழ்நாட்டில் நடக்காத ஒன்று என ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார். 

பெரும்பாலானோர் கொடுத்த எச்சரிக்கையால் பெரியார் சிலை தொடர்பான கருத்துக்கு அண்ணாமலை தற்போது பல்டி அடித்து விட்டார் எனவும் ஜெயக்குமார் அப்போது தெரிவித்தார். தேர்தல் நெருங்கும் போது கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு விடை கிடைக்கும் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார். இந்தியாவிலேயே திமுக ஊழலில் முதலிடம் என்றும், வல்லவனுக்கு வல்லவன் என்பது போல அமலாக்கத்துறை, வருமானவரித்துறை திமுக மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார். 

உப்பு தின்னவன் தண்ணி குடிக்க வேண்டும் என்பது போல தப்பு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும், எனவே ஊழல் செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என தெரிவித்தார். சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு , மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். 

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்ந்து ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாக்களை புறக்கணிப்பது குறித்த கேள்விக்கு பட்டமளிப்பு விழா என்பது பொது நிகழ்ச்சி என்றும் அதில் அரசு தரப்பில் அமைச்சர் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்பது மரபு எனவும் ஆனால் அமைச்சர் பொன்முடி ஆளுநர் பட்டமளிக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதது உயர்கல்வித்துறையை அவமதிப்பதாகும் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *