பெரியாரை இழிவுபடுத்தி பேசிய ’சாட்டை துரைமுருகனை’ கைது செய்யக்கோரி புகார்
பெரியாரை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை கைது செய்யக்கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.
பெரியாரை இழிவுபடுத்தியும், ஜாதி மோதல்களை உருவாக்கும் விதமாகவும், பல்வேறு ஜாதிகளை இழிவுபடுத்தியும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாகவும் பேசி தனது (சாட்டை யூடியுப் சேனல்) சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு வரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகனை நடவடிக்கை எடுத்து கைது செய்யக்கோரி திராவிடர் விடுதலை கழக மதுரை மாவட்ட செயலாளர் மா.பா.மணியமுதம் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் விடுதலை கழக மதுரை மாவட்ட செயலாளர் மா.பா.மணியமுதம், ” திருக்குறளை மலம் என்று பெரியார் சொன்னதாக நாக்பூர் இந்துத்துவ கும்பல் சமூக வலைதளத்தில் பரப்பி வரும் பொய்யான செய்திகளை எடுத்து சாட்டை துரைமுருகன் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.
ஏற்கனவே திராவிட இயக்கத் தலைவர்களை ஒருமையில் பேசி சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகும் மீண்டும் தற்போது நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக பேசி வருகிறார்.எனவே பொய்யான செய்திகளை பரப்பி வீடியோ வெளியிட்ட சாட்டை துரைமுருகனை உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்”என்றார்.