‘படிப்புதான் முக்கியம்…’ அதற்காக எதையும் செய்வார் நம் முதல்வர்…! அமைச்சர் அன்பில் மகேஷ்

எந்த குழந்தையும் பசியோடு பள்ளியில் இருக்க கூடாது என்ற முதல்வரின் உன்னத திட்டம் தான் காலை உணவு திட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி,,கலைஞரின்‌ திட்டங்களுக்கு நானே எடுத்துக்காட்டு – அமைச்சர் மெய்யநாதன். கலைஞரின் நூற்றாண்டு விழாவில் அமைச்சர்கள் பேச்சு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு பகுதியில் மருங்காபுரி மத்திய ஒன்றிய திமுகவின் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டம் எப்படி வந்தது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கூறியதாவது,

இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள். தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு 18 லட்சம் பள்ளி மாணவ – மாணவிகள் பயன் பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார். ஒருமுறை முதல்வர் ஒரு பள்ளிக்கு செல்லும் போது அங்கிருந்த மாணவ- மாணவிகளை அழைத்து சாப்பிட்டாயா என்று கேட்ட போது சாப்பிடாமல் இருந்த குழந்தைகள் அதற்கான காரணங்களையும் கூறியுள்ளனர். 

இதைக் கேட்ட முதல்வர் உடனே பள்ளிக் குழந்தைகளின் பசியாற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில் அதிகாரிகளுடன் உடனே ஆலோசனை நடத்தினார். இந்த திட்டத்தில் 18 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு தினமும் வழங்கிட வேண்டும் என்றால் கூடுதலாக அரசிற்கு 400 கோடி செலவாகும் என்று சொன்ன போதும் பரவாயில்லை. 

முதலில் குழந்தைகள் பசியோடு இருக்கக்கூடாது. அவர்கள் வயிறாற உணவு சாப்பிட வேண்டும். பல திட்டங்கள் இருந்தாலும் பள்ளி மாணவ – மாணவிகளின் பசியாற்றுவதே சிறந்த திட்டம் என்று கூறி அந்த திட்டத்தை இப்போது விரிவுபடுத்து பள்ளி மாணவ – மாணவிகள் பயன்பெற்றுள்ளனர் என்று கூறினார்.

பின்னர் பேசிய அமைச்சர் மெய்யநாதன் பேசும் போது, கலைஞரின் திட்டங்களுக்கு நானே எடுத்துக்காட்டு. கலைஞர் 1989 ம் ஆண்டு முதல்வராக இருந்த போது ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்த நாள் 12 ம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரி படிப்பிற்கு புதுக்கோட்டையில் உள்ள கல்லூரிக்கு சென்ற போது படிப்பதற்கு பணம் இல்லை. ஏன் தந்தை இறந்து விட்டார். 

நான் கல்லூரிக்கு சென்று படிக்க 200 ரூபாய் மட்டுமே பணம் வைத்திருந்த நிலையில் கூடுதல் பணம் கேட்டால் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த போது 5 ரூபாய்க்கு உயர் கல்வி கொடுத்தார் கலைஞர். அதுபோன்ற திட்டத்தை அப்போதைய முதல்வர் கொடுத்திருக்கிறார் என்று சொன்னார். 

அதே போல் முதுகலை கல்லூரி படிப்பை தொடர முயன்ற போது இலவச மின்சாரத்தின் மூலம் விவசாயம் செய்து அதில் கிடைத்த வருமானத்தில் கல்லூரி படிப்பை நிறைவு செய்தேன் என்றார். விழாவில் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *