மக்களை மத ரீதியாக பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் பாஜக; இரா.முத்தரசன் காட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஈரோட்டில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், ஒன்றிய அரசில் பாஜக பொறுப்பேற்று பத்து ஆண்டு காலம் ஆகியும் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக விலைவாசி நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கட்டுப்படுத்துவதற்கு எந்தவித முயற்சிகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை. பெட்ரோல் டீசல் விலையை தற்போது விற்கின்ற விலையை விட குறைவாக கொடுக்க முடியும். 

ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் போது 112 டாலர் பீப்பாய் இறக்குமதி செய்தார்கள். கடந்த ஓராண்டுக்கு மேலாக ஒரு பீப்பாய் 75 டாலர் என்றுதான் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த சூழ்நிலையில் விலையை பெரும் அளவு குறைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் குறைப்பதற்கு மாறாக விலையை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களை மத ரீதியாக பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிக்கிறது. பிரதமர் செல்லும் இடங்களில் குடும்ப அரசியல் மற்றும் ஊழலை பற்றி மட்டுமே பேசுகிறார் ஊழலை பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு தார்மீக பலம் இருக்கிறதா என்பதை அவர் யோசிக்க வேண்டும். சுதந்திரமாக செயல்படக்கூடிய மத்திய அரசின் தணிக்கை குழு ஒன்றிய அரசின் திட்டங்களை பரிசீலித்து அறிக்கை தரக்கூடிய அமைப்பு, 

சாலை அமைத்தல் உட்பட பல்வேறு முறைகேடுகளை   வெளிப்படுத்தி இருக்கிறது. ஒன்றிய அரசு,  தான் ஊழல் செய்யவில்லை என்பதை போலவும் மற்றவர்கள் ஊழல் செய்வதை போன்று கருத்தை பரப்பி வருகிறது ஒன்றிய அரசின் ஊழலை யார் கேட்பது என்பதுதான் தற்போதைய கேள்வி.   திருவிழா கூட்டத்தில் திருடர்கள் திருடிவிட்டு திருடன் ஓடுகிறான் என கத்திக்கொண்டே செல்வதை போல் தான் பிஜேபி இந்த அணுகுமுறையை மேற்கொள்கிறது.

ஊழல், வேலையில்லா திண்டாட்டம் இதையெல்லாம் கண்டித்து வருகிற செப்டம்பர் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு தமிழ் நாட்டில்  தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம். 12ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், 13 ,14 இரு நாட்களில்  வட்ட மற்றும் ஒன்றிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.. 

தமிழ்நாடு ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டி அரசாங்கத்தையும் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கை அரசாங்கத்திற்கு எதிரானது மட்டுமல்ல தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கையாக உள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பூர்த்தி செய்ய வேண்டும், ஆனால் அரசை செயல்படுத்த முடியாத நடவடிக்கையை ஆளுநர் மேற்கொண்டு வருகிறார். 

ஆளுநரின் செயல்பாட்டை எதிர்த்து குடியரசுத் தலைவரிடம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு முறையீடு செய்துள்ளார்கள். ஆனால் இதுவரை குடியரசுத் தலைவர் இந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது வருத்தமாக உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் பணியில் நேரடியாக ஆளுனர் ஈடுபடுகிறார் ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகிறார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கவில்லை. மாறாக, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆளுனரை ஊக்குவிக்கின்றனர்.  

 தமிழ்நாட்டில் ஏட்டிக்கு போட்டியாக தொடர்ந்து வன்முறையை தூண்டக்கூடிய வகையில் ஆளுனரின் நடவடிக்கை உள்ளது. ஆளுநரை கண்டித்து தமிழ்நாட்டு நலன் கருதி ஆளுநரின் அராஜகத்தை கண்டித்து மக்களே வெகுண்டெழுந்து  போராட வேண்டிய நிலைமை ஏற்படும்,  மக்களே கிளர்ந்து எழுந்து ஆளுநரை விரட்டி அடிக்கும் நிலைமை ஏற்படும். இது போன்று ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு ஆளுநரும் ஒன்றிய அரசம்தான் பொறுப்பேற்க வேண்டும்..

 காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது வரவேற்கத்தக்கது். 25ஆம் தேதி முதலமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார் அனைத்து நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி 25ஆம் தேதி அவரவர் தொகுதியில் திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும் என கூறியிருக்கிறார். முதல்வரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும்.

 நாட்டிலேயே மிக மோசமான முறையில் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களின் உயிர் உடமை பாதுகாப்பில்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.  இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதும் சேதப்படுத்தப்படுவதும் தொடர்ந்து வருகிறது. 

கடற்கொள்ளையர்களாலும் பொருட்கள் களவாடப்படுகிறது. 2014ல் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களின் நலன் காக்கப்படும் என பிரதமர் கூறியிருந்தார் இலங்கையுடன் நல்ல நட்பில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை ஒன்றிய அரசு ஏற்படுத்த வேண்டும்.

 உச்ச நீதிமன்றம் அனைத்து சாதியினர் அச்சகராகலாம், சாதியை சொல்லி தடை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதன் அடிப்படையில் அர்ச்சகர் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *