அதிமுக மாநாட்டினால் தமிழகத்தில் ஒன்றும் நடக்காது!  வைகோ பளீர்

 சிவகாசி அருகே நாரணாபுரம் கிராமத்தில்  மதிமுகவின் மாநில அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் குமரேசன் தனது தாயார் பெயரில் கட்டியுள்ள புதிய திருமண மண்டபத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- இந்தியாவிலேயே தங்கள் உரிமையை நிலை நிலைநாட்டும் மாநிலம் என்றால் அது கேரள மாநிலம் தான். 

பாடுபட்ட, பாடுபடும் தொண்டர்களை மதிமுக இயக்கத்தில் தான் பார்க்கிறேன். இந்தியாவிலேயே சிறந்த தொழிலதிபர்கள் சிவகாசியில் தான் உள்ளனர். தொழில் நகரமான சிவகாசிக்கு  பெருநகரங்கள் போல இன்டர்நெட் வசதி கொண்டு வந்தேன். மத்திய அமைச்சர்களை சந்தித்து சிவகாசியின் தொழில்களுக்கு பாதுகாப்பு கொடுத்தேன். அரசியலில் வெற்றி- தோல்வி வரும் போகும். 

பணம் கொடுத்தால் தான் ஓட்டு என்பது ஒரு ஆபத்தான விஷயமாகும். இதே நிலை தொடர்ந்தால் கோடீஸ்வரர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்களாகவோ, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ ஆக முடியும் என்ற நிலைமைக்கு  தள்ளப்படும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதெ ன்பது இந்தியா முழுவதும் இருந்தாலும் கேரள மாநிலத்தில் இல்லை. அங்கேயும் வந்து விடுமோ! என்ற அச்சம் உள்ளது. பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நம் கடமையை செய்வோம். 

பதவியில் இல்லாமல் கூட பொதுப்பணி ஆற்றலாம். இந்திய அரசியலை விருதுநகர் தான்  தீர்மானித்தது ஒரு காலத்தில். டெல்லியில் உள்ள விவரமானவர்கள் மதிமுக வெற்றி பெற்று விடக்கூடாது என எண்ணி மதிமுகவிற்கு ஆதரவான தொகுதி ஊர்களை எல்லாம் தனி தனியாக பிரித்து எடுத்து துண்டித்தனர். பணத்திற்காக ஓட்டு போடாதீர்கள். இன்று அதுதான் பிரதானமாக உள்ளது.ஒரு எம் பி சொல்கிறார் தான் 20 முதல் 25 கோடி ரூபாய் வரை செலவழித்ததாக. இன்றைய அரசியல் கெட்டுப் போய் பாழாகிவிட்டது. 

இங்கே எதையுமே பணம்தான் தீர்மானிக்கிறது. இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். அதற்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இன்றைய தினம் திராவிட மாடல் ஆட்சியை  பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது அவரவர் உரிமை. மதுஒழிப்பு, நதிநீர்இணைப்பு, அரசியல்நேர்மைக்காக நான் நடை பயணம் செய்துள்ளேன். இதுவரை 7 ஆயிரம் கிலோமீட்டர் வரை நடை பயணம் மேற்கொண்டுள்ளேன். 

ஆனால் இன்று நடை பயணமென்பது ஒரு பேஷனாகிவிட்டது. நான் ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர் தூரம் வரை அன்றாட நடை பயணத்தின் போது நடந்து சுறுசுறுப்பாக இயங்கினேன். என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடை பயணத்தை மறைமுகமாக சாடினார். ஆனால் இன்றைய தினம் வயதாகி போய் நோய் தாக்கும் போது, இயற்கை தண்டனை கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. தமிழகத்திற்கு எதிரான ஸ்டெர்லைட் நிறுவனம், மீத்தேன்திட்டம் ஆகியவற்றை எதிர்த்து போராடி நிறுத்தி வைத்தேன். 

யார் என்ன கோரிக்கை வைத்தாலும், நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி  கொடுப்பேன். தோல்விகள் வந்த போது பலர் என்னிடமிருந்து விலகினர். எனக்கு பண வசதி கிடையாது. ஜாதி, மதம் எனக்கு கிடையாது.  மதிமுகவில் உள்ள இளைஞர்கள் உறுதியாக இருப்பார்கள். மதிமுக வின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். முன்பாக நடந்த தேர்தலில்  விருதுநகரிலும், சிவகாசியிலும் தான் எனக்கு மிகுந்த ஆதரவு. ஆகையினால் நன்றி மறக்காமல் இங்கு வந்துள்ளேன். அரசியல்வாதி குடும்பத்தில் யாரும் தீக்குளிப்பது கிடையாது. 

தொண்டன் தான் தீக்குளிப்பான். இந்த நாட்டுக்காக என் குடும்பமே பாடுபட்டு உழைத்துள்ளது. மதிமுக பொலிவு பெற செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் மதுரை மாநாட்டுக்கு வாருங்கள். மதிமுக கட்சி நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்த முடியாது .ஏனென்றால் உங்களிடம் பணம் இல்லை .பக்கம் பக்கமாக விளம்பரங்கள் தர முடியாது.எனவே வெயிலில் கூரை போட்டு கோடிக்கணக்கில் செலவழிக்க முடியாமல் மாநாட்டை மாலையில் தான் நடத்த முடிவு செய்துள்ளேன். சுய மரியாதை, தன்மானத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். தொண்டர்களின் அன்பை மதிமுக பெற்றுள்ளது. 

மதிமுகவுக்கென்று ஒரு அந்தஸ்தை பெற மதுரை மாநாட்டை வெற்றிகரமாக ஆக்கித்தாருங்கள். என்றார். முன்னதாக பள்ளி மாணவி அனாமிகா வைகோ முன்பாக பரதநாட்டியமாடியதை பார்த்து ரசித்தஅவர், அனாமிகாவை தனது மடியில் தூக்கி  உட்கார வைத்து பரிசு வழங்கி பாராட்டி, பலருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:- அதிமுக எழுச்சி மாநாட்டை ஆடம்பரமாக திருவிழா போல் நடத்துவதாகவும், உண்மையான அதிமுக தொண்டர்கள் மாநாட்டிற்கு போகவில்லை என்றும், ஆகையால் அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை என தெரிவித்த அவர், திமுக போல  மாநாட்டை யாரும் நடத்த முடியாது என்ற வைகோ அதிமுக நடத்தும் மாநாட்டினால் தமிழக அரசியலில் எந்த விதமான மாற்றமும் ஏற்படாது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *