நடக்காத கிராம சபை கூட்டத்தை இணையதளத்தில் பதிவேற்றிய  ஒன்றிய அரசு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பனியம்பள்ளி ஊராட்சியில் ஆகஸ்ட் 15.ம் தேதி  கிராம சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், உண்மைக்கு மாறாக, கூட்டம் நடந்ததை போல் தவறான தகவல்களை ஒன்றிய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.. 

சென்னிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பனியம்பள்ளி ஊராட்சி சார்பில், ஆகஸ்ட் 15.ம் தேதி கிராம சபை கூட்டம் துலுக்கம்பாளையத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சிப்காட் கழிவு நீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன் வைத்த கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் கிராம சபை கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்த கிராம ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி  தீர்மான புத்தகத்திலும் அதனை குறிப்பிட்டு கையெழுத்திட்டார்.. 

இந்நிலையில், ஒன்றிய அரசின் இணையத்தில் பனியம்பள்ளி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்ததாகவும், அதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல்கள் பதிவேற்றம் செய்திருப்பதை கண்ட பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உண்மைக்கு மாறாக பொய்யான தகவல்களை பதிவேற்றம் செய்த அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு சென்னிமலை போலீசில் கிராம மக்கள் புகார் அளித்தனர். 

மேலும் முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் புகார் மனுக்களை அனுப்பினர். மேலும் பனியம்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தை இன்று மாலை முற்றுகையிட்டனர். 

இந்நிலையில், துணை வட்டாச்சியர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் இது குறித்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், தவறான தகவல்களை அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, நாளை முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக பனியம்பள்ளி கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *