2024 தேர்தல் படிக்கும்- குடிக்குமான தேர்தல்… பாஜக அண்ணாமலை எதுகை மோனை.!!

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக பிரச்சார வாகனத்தில்  நின்று பேசும்போது கூறியதாவது:- காசிக்கு செல்ல முடியாதவர்கள் சிவகாசி சிவனை வழிபடலாம். சுயம்பு போல குட்டி ஜப்பான் சிவகாசி உருவெடுத்துள்ளது. 

இங்குள்ள பட்டாசு தொழிற்சாலையில் 90% பட்டாசுகளும், தீப்பெட்டி தொழிற்சாலையில் 70% தீப்பெட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு, அச்சகங்களும் என ஒரு மைய புள்ளியாக திகழ்கிறது. பீனிக்ஸ் பறவை போல இங்கு உள்ளவர்கள் உழைத்து பெரிய நகரமாக சிவகாசி உருவாகி சரித்திரம் படைத்துள்ளது. சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க சீன பட்டாசுகளுக்கு தடை ஏற்படுத்தியது மோடி அரசு. 

அதேபோன்று தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க  சீனாவில் இருந்து இறக்குமதியாகும் லைட்டருக்கு தடை செய்தது ஒன்றிய அரசு. பட்டாசு தொழிலுக்கு ண்டான உச்ச நீதிமன்ற வழக்கில் விரைவாக தடையில்லாத தீபாவளி ஆண்டாக நிரந்தரமான தீர்வு காணப்படும். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இல்லாவிடில், சிவகாசி பட்டாசு தொழில் வளர்ந்து இருக்காது. சீன பட்டாசு இறக்குமதியாகி, உச்ச நீதிமன்றத்தில் சிவகாசி பட்டாசுக்கு தடை வந்து இருக்கும். 

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி 3வது முறை மத்தியில் ஆட்சிக்கு வர இந்த பாதயாத்திரை மூலமாக மக்களை கேட்க வந்துள்ளோம். பட்டாசு விற்பனைக்கு தடை போடச் சொன்னவர் தமிழக அமைச்சர் துரைமுருகன். பட்டாசு இல்லை என்றால் நமது கலாச்சாரம் இல்லை, பாரம்பரியம் இல்லை. விடுமுறை தினங்களில் அமெரிக்க போன்ற வெளிநாடுகளில் பட்டாசுகள் வெடிப்பதன் மூலமாக ஏற்படும் புகை மூட்டத்தை அதன் அளவு எவ்வளவு என்பதை கணக்கு பார்க்க மாட்டார்கள். 

அதேபோன்று தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரம் கட்டுப்பாடு இருக்கக் கூடாது. புகை மூட்டத்தின் அளவையும் கணக்கு பார்க்கக்கூடாது. அடுத்து வரக்கூடிய தலைமுறைக்கு பட்டாசு குறித்து நாம் தான் தெரியப்படுத்த வேண்டும். தமிழகத்தின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு அடித்தளமிட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர். தற்போது ஸ்டிக்கர் அரசாக திமுக தலைமையிலான தமிழக அரசு செயல்படுகிறது. 

2024 ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 400 உறுப்பினர்களுடன் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும். 2028 ம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும். சிவகாசிக்கும்- தென்காசிக்கும்- காசிக்கும் தமிழ் சங்கம் என உறவு ஏற்படுத்தி கொண்டாடியவர் பிரதமர் நரேந்திர மோடி. தமிழையும், தமிழனின் பெருமையையும் ஐநா சபையில் இருந்து எல்லா இடங்களிலும் பறைசாற்றியவர் பிரதமர் நரேந்திர மோடி. 

சோழர்கால செங்கோலை பாராளுமன்ற மைய மண்டபத்தில் வைத்துப் பெருமைப்படுத்தவர் நரேந்திர மோடி. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. 40 சதவீத மதுபான ஆலைகளை திமுகவினரே நடத்துகின்றனர். டாஸ்மார்க் மது பிரியர்களுக்கு நடக்கவில்லை. 

பணப் பிரியர்களுக்காக நடக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் படிக்கும்- குடிக்குமான தேர்தல். திராவிட மாடல் ஆட்சியா? தேசிய மடல் ஆட்சியா? சாமானிய அரசியல்வாதியா? வாரிசு அரசியலா? என்பதற்கான தேர்தல் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *