கள்ள மௌனம் காத்த ’மோடி ஒரு இம்சை அரசன்’  – கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் 

மணிப்பூர் கலவரம் குறித்து வாய் திறக்காத மோடி ஒரு இம்சை அரசன் என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம். மணிப்பூரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக வாழ்ந்து வரும் நிலையில் பிரதமர் மோடி எந்தவித கவலையும் படவில்லை  எனவும் கண்டனம்.

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறை நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு இளம் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதலுக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்தும், பிரதமர்  மோடியை பதவி விலகக் கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மணிப்பூர் கலவரத்திற்கு கண்டனம் தெரிவித்து சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதன் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசையும் , பிரதமர் மோடியையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.  மேலும் மணிப்பூர்  கலவரத்தை பற்றி எந்த கவலையும் படாத  மோடி பதவி விலக வேண்டும் என்று  ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

இதனைதொடந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முத்தரசன் செய்தியாளர்களிடம்  கூறும்போது,  மணிப்பூர் மாநிலத்தில்  கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறை தொடர்ந்து,  இன்று வரை நீடித்து வருகிறது . அங்கு அமைச்சர் வீடுகள் தீப்பற்றி எரிகிறது,  காவல் நிலையங்களில் ஆயுதங்கள் பறிபோகிறது,  பெண்கள் சூறையாடப்படுகிறார்கள். ஆனால் நம் நாட்டின் பிரதமர் மோடி இரட்டை எஞ்சின் ஆட்சி தான் எல்லா மாநிலங்களுக்கும் வேண்டும் என்று சொல்கிறார்.  

மணிப்பூர் மாநிலத்தில் இரட்டை எஞ்சின் ஆட்சி தான் நடக்கிறது . இந்த நிலையில் தான் அங்கு வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது . ஆனால் அங்கு அமைதியை நிலைநாட்டவோ, மக்கள் பிரச்சனையை தீர்க்கவோ,  வன்முறையை கட்டுப்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இளம்பெண்கள் சாலைகளில் நிர்வாணமாக  இழுத்து செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் , 

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர்,  தந்தை கொலை செய்யப்பட்டுள்ளனர்,  200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர்   சொந்த நழநாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் . ஆனால் பிரதமர் இதைப் பற்றி எந்த கவலையும் படவில்லை,  உச்ச நீதிமன்ற கண்டனத்திற்கு பிறகு சில வார்த்தைகளை மட்டும் ஊடகத்தினரிடம் கூறி உள்ளார். நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கிறார். பிரதமர் மோடி ஒரு இம்சை அரசர் போல செயல்பட்டு வருகிறார் , அவர் பதவி விலக  வேண்டும் என்றார்.

தொடர்ந்து கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தவர் அம்பேத்கர் புகைப்படம் அனைத்து நீதிமன்றங்களிலும் இடம்பெற வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *