பெண்கள் இலவச பேருந்து திட்டத்தை இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் பின்பற்றுகின்றன… அமைச்சர் பெருமிதம்

தமிழகத்தில் பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி, அந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.. கிருஷ்ணகிரியில் நடந்த கலைஞர் 100வது பிறந்தநாள் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்..

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில், மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் கருணாநிதி அவர்களின் 100வது பிறந்த நாளையொட்டி 7,000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில்.. திமுக ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டன. ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பல நல்ல திட்டங்களை வழங்கியதும் திமுக ஆட்சியில் தான் என தெரிவித்தார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய தலைவர்களின் கருத்துக்களை உள்வாங்கி அவர்களுக்கு எண்ணங்களுக்கு ஏற்ப கருணாநிதி செயல்பட்டார். 

அவர்களின் வழியில் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினும் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றி வருகிறார் என பேசிய அமைச்சர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை தந்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றும், இந்த திட்டத்தை பின்பற்றி தான் இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர் என பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று மகளிருக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் இந்த தொகை வழங்கப்படும்.  அவை கிடைக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் அலுவலகத்தில் அணுகி அதற்கான படிவங்களை பெற்றுக் உரிமைதொகை பெற்றுகொள்ளலாம் என தெரிவித்தார். 

மேலும் தொட்டில் சம உரிமை, பெண்களுக்கு வேலை அளிப்பதில் முன்னுரிமை, உள்ளாட்சியில் 50 சதவீத இட ஒதுக்கீடு ஆகிய மகத்தான திட்டங்களை தந்தவர் கருணாநிதி என அமைச்சர் சக்கரபாணி பேசினார். நிகழ்ச்சியில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாநில துணை செயலாளர் செங்குட்டுவன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட திமுக.,வினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *