ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என தீர்ப்பு!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் அவரது வெற்றி செல்லாது என அதிரடியாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில் தேனி தொகுதியின் எம்பியாக யார் நீடிப்பார்?, அடுத்து என்ன நடக்கும்? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 2019ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திராநாத் அதிமுக சார்பில் போட்டியிட்டார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக சார்பில் தங்க தமிழ் செல்வனும் களமிறங்கினர்.இதில் ஓபி ரவீந்திரநாத் 5 லட்சத்து 4 ஆயிரத்து 813 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட் ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 4 லட்சத்த 28 ஆயிரத்து 120 ஓட்டுகள் பெற்ற நிலையில் 76,693 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஓபி ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தான் ஓபி ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. ரவீந்திரநாத் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட விபரங்களை மறைத்துள்ளார். இதனால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்கு ரவீந்திரநாத் எதிர்ப்பு தெரிவித்தார். மிலானியின் மனுவை தள்ளுபடி செய்ய கூறி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் ரவீந்திரநாத்தின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, மிலானி மனு மீது தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. ரவீந்திரநாத் எம்பி, தேர்தல் அதிகாரிகள் ஆஜராகி வந்தனர். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் தான் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அதிரடியாக உத்தரவிட்டார். இது ரவீந்திரநாத் எம்பிக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் தான் ரவீந்திரநாத் எம்பியின் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் தேனி தொகுதியின் எம்பி யார்? அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ரவீந்திரநாத் எம்பியின் வெற்றி செல்லாது என அறிவித்தாலும் கூட மேல்முறையீடு செய்ய வசதியாக 30 நாட்கள் தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ரவீந்திரநாத் அடுத்த 30 நாட்கள் எம்பியாகவே தொடர்வார். ஆனால் இந்த 30 நாட்களில் அவர் மேல்முறையீடு செய்து நிவாரணம் தேடிக்கொள்ள வேண்டும்.

அதாவது தேனி நாடாளுமன்ற தொகுதியில் பெற்ற வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை அல்லது அந்த உத்தரவு செல்லாது என மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு பெற வேண்டும். இத்தகைய உத்தரவு பெற்றால் ரவீந்திராத் எம்பியாக தொடர்வதில் எந்த சிக்கலும் இருக்காது. மாறாக ரவீந்திரநாத்தின் மேல்முறையீட்டு வழக்கிலும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என வந்தால் அவரது எம்பி பதவி காலியாகிவிடும். இது நடக்கம் பட்சத்தில் அவர் எம்பியாக தொடர முடியாது. அதோடு தேனி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் யார்? என்பது மேல்முறையீட்டின் வழக்கின் தீர்ப்பின் சாராம்சத்தை பொறுத்து தான் அமையும். அதாவது ஓபி ரவீந்திரநாத்தின் எம்பி பதவி காலியானால் தேனி நாடாளுமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்படுமா? இல்லாவிட்டால் வேறு விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிய நாம் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/after-chennai-high-court-verdict-that-op-ravindhranath-victory-is-invalid-in-theni-who-is-continue-519977.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *