பொது சிவில் சட்டத்தை நான் ஏற்கிறேன்! -சீமான்

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

பொது சிவில் சட்டத்திற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பொது சிவில் சட்டம் குறித்து தனது பாணியில் பேசியுள்ளார். வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் நாட்டில் பொது சிவில் சட்ட விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. பிரதமர் மோடியே கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பேசினார். இரண்டு வகையான சட்டங்களை கொண்டு நாட்டை நடத்த முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைவரும் சமம் என்றும் பிரதமர் மோடி பேசியிருந்தார்.பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பேசிய பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன.வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலேயே பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எனினும், பொது சிவில் சட்டத்திற்கு தற்போது என்ன அவசரம் வந்து விட்டது? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், பொது சிவில் சட்டம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பொது சிவில் சட்டம் கொண்டு வாங்க… எதையும் கொண்டு வாங்க.. இதுவரைக்கும் இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கு.. குறிப்பாக இஸ்மாலிய, கிறிஸ்தவ மக்களுக்கு இருக்கிற சட்ட முறையை தகர்க்க வேண்டும் என்பதுதான்.. என் சட்டையும் உங்க சட்டையும் ஒரே மாதிரி இருக்கா.. என் சாப்பாடும் உங்க சாப்பாடும் ஒரே மாதிரி இருக்கா… சரி பொது சிவில்சட்டத்தை நான் ஏற்கிறேன். ராணுவத்திற்கு வரும் போது தாடியை எடுக்கிறேன். முடியை ஒட்ட வெட்டிக்கொள்கிறேன். சீக்கியரை தாடியை எடுத்து விட்டு முடியை வெட்டி விட்டு வர சொல்லி விடுவீர்களா நீங்க… சொல்லுங்க.. அப்புறம் பொது சிவில் சட்டம் பற்றி பேசுவோம்.. ஒரே நடைமுறை நாட்டில் எல்லாருக்கும்.. அதை கொண்டு வாங்க.. அதற்கப்புறம் அதைப்பற்றி பேசுவோம்.விலை வாசி எவ்வளவு இருக்கு… எவ்ளோ பிரச்சினை இருக்கு.. ஒரு அடிப்படை கட்டமைப்பு இல்லை.

கல்வியில் இல்லை,போக்குவரத்தில் இல்லை,மின் உற்பத்தியில் இல்லை,சாலை போடுதல் பரமாரிப்பில் இல்லை,எதுவும் இல்லை.லட்சக்கணக்கான பேருக்கு வேலை இல்லை.. நீங்களே சொன்னீங்க ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று.. அப்போ 2 கோடி பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். 10 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறீர்கள். இது பற்றி பேசுவதே இல்லை. சரி… பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்துட்டீங்க.. என்ன ஆகிடும். நாடு அப்படியே பொருளாதார வளர்ச்சியில் மேலோங்கிடுமோ வளர்ந்துடுமா.. ஒன்னும் கிடையாது.. முதலில் பெண்களுக்கு சம உரிமை இருக்கா!ஒரே சிவில் சட்டம் கொண்டு வாருங்கள் ஏற்றுக்கொள்கிறேன். கோவிலுக்குள் என்னால் உள்ளே போக முடியுமா? ஒரே குளத்திற்குள் குளிக்க முடியுமா? ஒரே சுடுகாட்டில் புதைக்க முடியுமா? பிறகு எதற்கு ஒரே நாடு, ஒரே சட்டம் என பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.. சட்டத்தின் முன்பு சமம் இல்லை என்று இருக்கும் போது எதற்காக இந்த பொது சிவில் சட்டம்… வேலையில்லாத வேலை” என்று ஆவேசமாக பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *