ஆளுநரை கட்டுப்படுத்துங்கள் !- முதல்வர் ஸ்டாலின்

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

அமலாக்கத்துறை நடவடிக்கையால் பாஜக மீதான தனது நிலைப்பாட்டை திமுக மாற்றிக் கொள்ளாது, அமலாக்கத்துறைக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம், பாஜகவின் கைப்பாவை போல அமலாக்கத்துறை செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர். என் ரவி நேற்று கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தான் எடுத்த நடவடிக்கைக்கான காரணங்களை விளக்கி இருந்தார். அதில், அமைச்சர் ஒருவர் மீது புகார் உள்ளதாலும், அவர் நீதிமன்ற காவலில் உள்ளதாலும் அவரை பதவியில் இருந்து நீக்குவதாகவும், அவர் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும்.அவர் அமைச்சராக தொடர்ந்தால் விசாரணையை தடுப்பார். கரூரில் நடந்த ஐடி சோதனையின் போது அதிகாரிகள் நடத்தப்பட்ட விதமே விசாரணை தடுப்புக்கு உதாரணம். ஐடி அதிகாரிகள் தாக்கப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களும் பறிக்கப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் ஆரோக்கியமற்ற முறையில் பாரபட்சமாக செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

நான் அவரை நீக்கும்படி ஆலோசனை சொன்னேன். ஆனால் என்னுடைய ஆலோசனையை ஏற்காமல் எரிச்சலூட்டும் வார்த்தைகளை கொண்ட கடிதத்தை எழுதி நான் சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாக மிதமிஞ்சிய வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனங்களை வைத்து இருந்தார். இதனால் நான் சட்ட 154, 163 & 164 பிரிவுகள் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குகிறேன், என்று ஆளுநர் ஆர். என் ரவி குறிப்பிட்டு உள்ளார்.ஆளுநருக்கு பொதுவாக இந்த அதிகாரம் கிடையாது. அமைச்சரை தன்னிச்சையாக நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. இந்த நிலையில் சரியாக 5 மணி நேரத்தில் ஆளுநர் ஆர். என் ரவி தனது முடிவை மாற்றினார். அதாவது செந்தில் பாலாஜியை நீக்கியது செல்லாது என்று அறிவித்தார். அதோடு இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்தான் தனக்கு அறிவுறுத்தியது. அவர்களின் அறிவுரை காரணமாக எனது அறிவிப்பை நிறுத்தி வைக்கிறேன். அதோடு இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுக்கிறேன், என்றும் ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் ஆளுநரின் இந்த செயலுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தி இந்து ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த அரசுக்கு தொந்தரவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். தனக்கு எந்த பவரும் இல்லை என்று ஆளுநருக்கு தெரியும் ஆனாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை ஏதாவது செய்ய வேண்டும்,

கவர்னருக்கு ஒரு அமைச்சரை தேர்வு செய்யவோ, நீக்கவோ அதிகாரம் கிடையாது. அவ்வளவுதான். அவருக்கு எந்த விதமான பவரும் கிடையாது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால் தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.தமிழ்நாடு அரசை சுமூகமாக செயல்பட விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர் வேலை பார்க்கிறார். அமலாக்கத்துறை நடவடிக்கையால் பாஜக மீதான தனது நிலைப்பாட்டை திமுக மாற்றிக் கொள்ளாது.அமலாக்கத்துறைக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். பாஜகவின் கைப்பாவை போல அமலாக்கத்துறை செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் திமுக அமைச்சர்களை குறிவைத்து பாஜக செயல்படுகிறது.தேசிய முன்னணியை உருவாக்க முயற்சிப்பதால், இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. தவறு செய்த அமைச்சர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கலாம். ஆனால் குறிப்பிட்ட சிலரை மட்டும் குறி வைக்க கூடாது. பாஜகவில் வழக்கு உள்ள அமைச்சர்கள் பலர் உள்ளனர். அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படவில்லையே.ஒரு பக்கம்தான் நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது மிக மிக தவறானது. செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறார். அமலாக்கத்துறை அவரை மிக மோசமாக நடத்தி இருக்கிறது.18 மணி நேரம் அவரை வைத்து துன்புறுத்தி உள்ளனர். இதைத்தான் தவறு என்று சொல்கிறோம். ஜெயலலிதா சிறைக்கு செல்லும் வரை முதல்வராக இருந்தார்.. அவரை யாரும் பதவியில் இருந்து நீக்கவில்லையே என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *