தமிழ்நாடு ஆளுநர் ரவியை டிஸ்மிஸ் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

தமக்கான அதிகார வரம்பு தெரியாமல் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக ஜனாதிபதி திரவுபதி முர்மு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி வலியுறுத்தி உள்ளார்.தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென நேற்று இரவு அறிக்கை மூலம் அறிவித்தார். செந்தில் பாலாஜி மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன; அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்; இதனால் ஏற்கனவே இலாகா இல்லாத அமைச்சராகத்தான் செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். ஆனால் எந்த ஒரு ஆலோசனையும் இல்லாமல் திடீரென செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ரவி அறிவித்தது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களிலேயே தமது டிஸ்மிஸ் அறிக்கையை நிறுத்தி வைப்பதாகவும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆளுநர் ரவியின் இந்த குழப்பமான நடவடிக்கை நாடு தழுவிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மாநிலத்தில் ஆளுநருக்கான அதிகாரம் எது என்பதை உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தெள்ள தெளிவாக கூறிய பின்னரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த செயல்பாடு கடுமையான கண்டனத்தை எதிர்கொண்டிருக்கிறது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி எம்.பி. கூறுகையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உடனடியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமக்கான அதிகார வரம்பு எது என்பது தெரியவில்லை. ஒரு ஆளுநர் என்பவர் இத்தகைய அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளவே கூடாது.

இப்படியான நடவடிக்கைகள் மூலம் அரசியல் சாசனம் தமக்கு என்ன அதிகாரம் கொடுத்துள்ளது என்பதை அறியாமல்தான் ஆளுநராக இருக்கிறார் ரவி என்பது தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார்.திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், ஆளுநருக்கு அமைச்சரை நீக்குகிற அதிகாரம் எதுவும் இல்லை. மாநில முதல்வரின் அறிவுறுத்தல் இல்லாமல் அமைச்சரவையில் எந்த ஒரு மாற்றத்தையும் ஆளுநரால் செய்ய முடியாது. அரசியல் சாசனத்தை மீறி ஆளுநர் செயல்படுகிறார். ஒருவர் மீது வழக்குகள் இருப்பதாலேயே அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்துவிடவும் முடியாது என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *