PET பீரியடுகளை டீச்சர்கள் கடன் வாங்க கூடாது ! -அமைச்சர் உதயநிதி

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

முதல்வர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி, அங்கிருந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் ஆசிரியர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.தமிழ்நாடு முழுக்க முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. முதலில் மாவட்ட அளவிலான போட்டிகள் இப்போது மாநிலத்தில் நடந்து வருகிறது.அதன்படி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வென்ற 1979 வீரர்கள், வீராங்கனைகளுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன.இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 39 லட்சம் மதிப்புள்ள பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, “தமிழ்நாடு முழுக்க 38 மாவட்டங்களில் கடந்த பிப். முதல் மார்ச் வரை நடந்த முதல்வர் கோப்பைக்கான போட்டிகளில் 3.71 லட்சம் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அதில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் அடுத்து மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். சென்னையில் வரும் ஜூன் 30ஆம் தேதி மாநில அளவிலான போட்டிகள் தொடங்குகிறது. தமிழ்நாட்டை விளையாட்டுத் துறையில் முதலிடத்திற்குக் கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரு நாட்களுக்கு முன்பு தான், சென்னையில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.அதேபோல வரும் ஆகஸ்ட் மாதம் சென்னையில், ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறுகிறது. இப்படித் தொடர்ந்து சர்வதேச போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதால் அடுத்த ஆண்டு நடக்கும் கேலோ இந்தியா யூத் விளையாட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வாய்ப்பை அளித்துள்ளது. ஏற்கனவே இதற்கான தயாரிப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. விளையாட்டுத் துறையில் தனி முத்திரை பதிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.பல எழுத்தாளர்களையும், அரசியல் தலைவர்களையும் உருவாக்கிய தஞ்சை மண், வரும் காலத்தில் அதிக விளையாட்டு வீரர்களையும் உருவாக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தஞ்சை இனி விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கும்.

இங்கே பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் இருக்கிறார். ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைக்க நான் விரும்புகிறேன். பள்ளிகள் இப்போது ஆரம்பித்துவிட்டது. பொதுவாக இந்த PET பீரியடுகளை கணிதம், சயின்ஸ் ஆசிரியர்கள் கடன் வாங்குகிறார்கள். தயவு செய்து எங்கள் மாணவர்களை விளையாட அனுமதியுங்கள். PET பீரியடுகளை கடன் வாங்காதீர்கள்.முடிந்தால் உங்கள் கணிதம், சயின்ஸ் பீரியடுகளை எங்களுக்குக் கடன் கொடுங்கள் என்பதைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முன்னிலையில் கேட்டுக் கொள்கிறேன். எதற்கும் தயங்காமல் மாணவர்கள் உங்கள் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். மாநில, தேசிய, சர்வதேச களங்கள் உங்களுக்குக் காத்திருக்கிறது” என்று அவர் தெரிவித்தார். PET பீரியடுகளை மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்கக் கூடாது என்று அமைச்சர் உதயநிதி சொன்ன போது, அங்கிருந்து மாணவ, மாணவிகள் உற்சாகமாகக் கரவொலி எழுப்பினர்.

Read more at: https://tamil.oneindia.com/news/thanjavur/teachers-should-not-borrow-pet-periods-says-minister-udhayanidhi-517408.html?story=2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *