பாஜகவும் சீமானும் ஒரே கோட்டில்!அதிரும் அண்ணாமலை !

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

விஜய் அரசியலுக்கு வருவதை எந்த தீய சக்தியாலும் தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எங்கள் அரசியலைத்தான் சீமான் அண்ணன் செய்கிறார் எனக் கூறியுள்ளார்.திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு, மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராடிய 3 விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பெருமாநல்லூர் பகுதியில் உள்ள விவசாயிகள் நினைவு ஸ்தூபியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ஜூலை 9ஆம் தேதி பாஜக சார்பில் தொடங்கப்பட உள்ள நடைப்பயணத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட இருக்கிறோம். பாஜக கள்ளுக் கடைகளை முழுமையாக ஆதரிக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் இந்த அறிக்கையில் வெளியிடப்படும். பனைமரம் மற்றும் தென்னை மரங்களை பாதுகாப்பதன் மூலம் ஒரு லட்சம் கோடி வருவாய் ஈட்டக்கூடிய வழிமுறைகளை அதில் வெளியிட இருக்கிறோம்” என்றார்.

மேலும் பேசிய அண்ணாமலை, “நேற்றைய தினம் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு “பீகாரில் இருந்து எல்லாரும் பிழைப்பு தேடி தமிழ்நாடு வருகின்றனர். அது போல தான் ஆளுநரும் வந்திருக்கிறார்” என கடுமையாக விமர்சனம் வைத்து, ஆளுநர் பதவியைக் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க தடையில்லை என நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறார்.

இப்படியே போனால், இன்னும் ஓராண்டிற்குள் தமிழக அமைச்சரவையில் முதல்வர் மட்டுமே எஞ்சி இருக்கக்கூடிய நிலை ஏற்படும். ஆனால், முதல்வர் மீதும் சிபிஐ-யில் புகார் அளித்துள்ளோம்.” என்றார்.மேலும் பேசிய அண்ணாமலை, “சீமான் அண்ணனைப் பொறுத்தவரை, பல இடங்களில் பெரிதும் அவரை மதிக்கிறோம். ஓட்டுக்கு பணம் கொடுப்பதில்லை என்ற பெரிய அரசியல் போராட்டத்தை அவர் முன்னெடுத்துள்ளார். பிரதமர் மோடியும், அப்படியொரு அரசியலை உருவாக்குவதற்குத்தான் பாடுபடுகிறார் என சீமான் அண்ணனுக்கும் தெரியும்.

நாம் தமிழர் கட்சியும் பாஜகவும் கொள்கை ரீதியில் வேறுபட்டு இருக்கலாம். ஆனாலும் தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டுவர ஒரே கோட்டில் பயணிக்கிறது. தமிழ்நாடு பாஜகவில் இதுவரை எம்எல்ஏ-க்கள், எம்பி-கள் இருந்திருக்கிறார்கள். தற்போதும் எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள். இவர்களில் யார் மீதாவது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதா?” என்றார். அப்போது அண்ணாமலையிடம், விஜய் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “யார் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் ஊழலை ஒழிக்கக்கூடிய கட்சியை தொடங்கப்போகிறேன் எனக் கூறினாலும், அதை பாஜக வரவேற்கும். மக்கள் மன்றத்தில் எல்லோரும் போய் நிற்போம். மக்கள் யாரை ஏற்கிறார்களோ, அவர்கள் வரலாம்.இங்கு மக்கள் தான் எஜமானிகள். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்தால், கண்டிப்பாக வரட்டும். அதை தீயசக்திகள் தடுக்க நினைத்தால் தமிழக மக்கள் விடமாட்டார்கள். விஜய் வந்தபிறகு, அவருடைய கொள்கைகள் – கருத்துகளை தெரிவிக்கட்டும், என்ன செய்யப்போகிறார் எனச் சொல்லட்டும்… பின்னர் விரிவாக பேசுவோம். தமிழக அரசியலை சுத்தப்படுத்த யார் வேண்டுமானாலும் வரலாம், அதை பாஜக வரவேற்கிறது.” எனத் தெரிவித்தார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tiruppur/annamalai-welcomes-vijay-into-politics-and-supports-seeman-517417.html?story=3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *