சென்னையிலேயே இருங்க..முக்கிய அமைச்சர்களுக்கு போட்ட ஆர்டர் !

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

திருவாரூர் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர் மழை காரணமாக அமைச்சர்களை சென்னையிலேயே இருந்து பணிகளை கண்காணிக்குமாறும், திருவாரூருக்கு வர வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க உள்ளார். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலைஞர் நினைவு நூலகத்தை திறந்து வைக்க உள்ளார்.இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் இரவே திருவாரூர் சென்றார். அங்கு நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த நிலையில் இன்று கலைஞர் கோட்டம் திறப்பு விழாவையொட்டி அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் திருவாரூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை உட்பட தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேடை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சென்னை உட்பட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து இன்றும் சில இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடித்து வருவதால் அந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர். எதிர்பாராத இந்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

தொடர் மழை காரணமாக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையைச் சேர்ந்த அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரை சென்னையிலேயே இருந்து பணிகளை கண்காணிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்றே திருவாரூர் செல்ல அமைச்சர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினின் உத்தரவு காரணமாக அவர்கள் சென்னையில் முகாமிட்டு, பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *