நிதி நுட்ப நகரம் ! மதுரையில் அமைக்க திட்டம் !

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

படித்த திறன்மிகுந்த இளைஞர்களின் சக்தி இங்கு கொடி கட்டி பறக்கிறது. இதனை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று சென்னையில் நிதி நுட்ப நகரத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையைப் போல இரண்டாம் கட்டமாக கோவை, திருச்சி, மதுரையிலும் நிதி நுட்ப நகரம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.நிதி நுட்ப வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் நிதி நுட்பக் கொள்கை வெளியிடப்படும் என்றும், சென்னையில் இரண்டு கட்டங்களாக நந்தம்பாக்கம், காவனூரில், ரூ.165 கோடி மதிப்பில் நிதி நுட்ப நகரம் உருவாக்கப்படும் என்று கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதற்கு சென்னை அருகில் உள்ள காவனூரில் நிதி தொழில்நுட்ப நகரத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் தோராயமாக 260 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கி வருகிறது. புதிய நிதி தொழில்நுட்பக் கொள்கை இறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம், நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான உலக அளவில் ஒரு மையமாக சென்னை உருவாக வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல சென்னை நந்தம்பாக்கத்தில் 165 கோடியில் அமைய உள்ள நிதி நுட்ப நகரத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். வங்கிகள், வங்கி சாரா நிறுவனங்கள், நிதித்துறை சார்ந்த நிறுவனங்கள் அமைப்பதற்கும், பயிற்சி மையங்கள் அமைப்பதற்கும் உள் கட்டமைப்புடன் கூடிய நிதி நுட்ப நகரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நகரம் அமைப்பதற்கான முழுமையான திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 56.48 ஏக்கரில் நிதி நுட்ப நகரம் அமைப்பதற்காக ரூ.99 கோடியில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக தொழில்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.நிதி நுட்ப நகரங்களை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வந்த வண்ணம் இருப்பதாக கூறினார்.

ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள இளைஞர்களும் இளம்பெண்களும் வசிப்பிடத்திற்கு அருகிலேயே வேலை வாய்ப்பை பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிதி நுட்ப துறைக்கான மின்னணு மயமாக்கப்பட்ட அனைத்து ஏழை எளிய மக்களை எளிதில் சென்றடைய வேண்டும். ஆன்லைன் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் அதிகரிக்கத்தொடங்கிய வங்கிகளில் மின்னணு சேவை பயன்பாடு தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. ஏடிஎம் மையங்களில் சென்று பணம் எடுப்பது மாறி கை பேசி மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்வது அதிகரித்து வருகிறது. இந்த வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக்கொண்டு நாமும் வளர்ந்திட வேண்டியது அரசின் கடமை. வங்கிகள் முழு டிஜிட்டல் வங்கிகளாக மாறி விட்டன. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. எதிர்காலத்தை கருதி நாம் திட்டமிட வேண்டும். அதி வேகமாக தகவல் தொழில் நுட்ப சேவைகள் அதிகரித்து வருகின்றன. பாரம்பரிய வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவன சேவைகள், நிதி நுட்பத்துறை தமிழ்நாட்டில் வளர்ச்சி காணும் என நான் உறுதியாக நம்புகிறேன்.நிதி நுட்பம் தொழில் சூழல் சிறந்து விளங்குகிறது என்பதற்கு இங்கு அமைந்துள்ள நிறுவனங்களே சாட்சி. படித்த திறன்மிகுந்த இளைஞர்களின் சக்தி இங்கு கொடி கட்டி பறக்கிறது. இதனை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். சென்னையில் நிதி நுட்ப நகரம் அமைக்கப்பட்டுள்ளதை போல இரண்டாம் கட்டமாக கோவை, திருச்சி, மதுரையிலும் நிதி நுட்ப நகரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *