நடுநிலை என்பது… எதிரிக்கு மறைமுக ஆதரவே..! ‘ஸ்டேண்ட் வித் செந்தில் பாலாஜி’!

அரசியலில் நடுநிலை என்று ஒன்று இருப்பதில்லை. குறிப்பாக 2014இல் பாஜக இந்திய ஒன்றியத் தேர்தலில் வென்ற பின்னர், நடுநிலை என்ற நிலைப்பாடு பாஜகவிற்கு ஆதரவாகவே அமைந்தது. அதை பாஜகவும் காலமும் நிரூபித்துள்ளது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் India Against Coruption, ஆம் ஆத்மி. இவர்களின் செயல்பாடு 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வெல்ல காரணமாக அமைந்தது. அர்விந்த் கெஜ்ரிவால், யோகேந்திர யாதவ் ஆகியோர் ஆம் ஆத்மியின் முகமாக இருந்தனர். 

2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் இணைந்த வைகோவின் மதிமுகவும், தொல். திருமாவின் விசிகவும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஜி. கே. வாசன், விஜயகாந்த் உள்ளிட்டோரை சேர்த்துக் கொண்டனர். இது அதிமுகவுக்கு சாதகமாக அமைந்தது. அதன் மூலம் பாஜகவுக்கும் சாதகமாக அமைந்தது. 2 G வழக்கில் திமுகவின் கனிமொழி, ஆ. ராசா ஆகியோருக்கு தீவிரமாக களமாடியவர்கள் பிரசாந்த் பூஷன், அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர். 

இன்று ஆம் ஆத்மி ஆட்சிக்கு சிக்கல் வரும் போதெல்லாம் அதற்கு துணையாக திமுகவே நிற்கிறது. ஆம் ஆத்மியின் மூளையாகச் செயல்பட்ட யோகேந்திர யாதவ் பாஜகவை எதிர்ப்பில் தீவிரம் காட்டி வருகிறார். அதற்காக காங்கிரஸை தீவிரமாக ஆதரிக்கிறார். அர்விந்த் கெஜ்ரிவாலும் பாஜக எதிர்ப்பை கூர்மைப்படுத்த காங்கிரஸ் – திமுக கூட்டணியோடு இணைந்து செயல்பட ஒத்திசைந்துள்ளார்.

மக்கள் நலக் கூட்டணியில் இருந்த வைகோ, விசிக, கம்யூனிஸ்ட்கள் ஆகியோர் திமுக கூட்டணிக்கு வந்துவிட்டனர். ஜி. கே வாசன், தேமுதிக ஆகியோர் பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டனர். இதன் மூலம் தெரிவது என்னவென்றால், நடுநிலை ஒன்று இன்று இல்லை. அப்படிப்பட்ட போர்வையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாஜகவிற்கு சாதகமாகவே அமைகின்றன. 2014 க்கு முன்னர் நடுநிலை கோட்பாட்டை கையில் எடுத்தவர்களை கூட ஒருவகையில் ஏற்றுக்(பொறுத்திக்) கொள்ளலாம். 

ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக பாஜகவின் கொடூரமான இந்துத்துவ ஆட்சியை கண்ட பின்னரும் நடுநிலை என்ற பெயரில் திமுகவை விமர்சிப்பவர்கள் பாஜகவின் கைக்கூலிகள். எனக்கு மத நம்பிக்கை இல்லை. ஆனால் கிறித்துவ மதத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. பாவத்தின் பலனை அவன் அனுபவிக்கிறான் என்ற ஒரு சொல்லாடல் அது.

நேற்று அறிவுஜீவிகள், அரசியில் கட்சிகளால் எடுக்கப்பட்ட நடுநிலைக் கோட்பாடு எனும் பாவத்தின் பலனை இந்திய மக்கள் இன்று அனுபவித்து வருகிறார்கள். அதன் பின்னரும் நடுநிலை கோட்பாட்டை கையில் எடுப்பவர்கள் மக்கள் விரோதிகள். பாஜகவின் கைக்கூலிகள். பாஜக செய்வது எந்த வகையிலும் ஆட்சியல்ல. அவர்கள் தொடர்ந்து கிரிமினல் குற்றங்களை ஆட்சியின் பெயரால் செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் பாஜக எதிர்ப்பை கூர்மைப்படுத்துவதே அறிவுடமை. செந்தில் பாலாஜி கைதை கண்டிப்பதே அறம். மக்கள் மீது அன்பிருப்பவர்கள் செய்ய வேண்டிய ஒற்றைக் காரியம் பாஜக எதிர்ப்பை கூர்மைப்படுத்துவது.  அதைச் செய்யத் தவறுபவர்கள் குற்றவாளிகள்.

சு. விஜயபாஸ்கர், அரசியல் விமர்சகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *