யாருடன் கூட்டணி ! அதிரவைத்த திருமாவளவன்..

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

விசிக தலைவர் திருமாவளவனின் பேச்சு, தமிழக அரசியல் களத்தில் மிகுந்த கவனத்தை பெற்றுவருகிறது.. இதை திமுக தரப்பும் உற்றுகவனித்து வருகிறது.சாதிய வன்முறை சம்பவங்களை கண்டித்தும், சாதிய ஆணவப்படுகொலைகளை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்… அப்போது, “விசிக சார்பாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தை சிலர், திமுகவுக்கு எதிராகவும், முதல்வருக்கு எதிராகவும் நடத்துவதாக கூறி திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுத்த பார்க்கிறார்கள்..தமிழகத்தில் விடுதலைசிறுத்தைகள் கொடி கம்பம் ஏற்ற விடாமல் போராட்டம் நடத்துங்கள் என்று பாமக தலைவர்கள் சொல்கிறார்கள்.. வன்னிய சமூக மக்கள் ஏதோ ஒரு தூண்டுதலுக்கு ஆளாகின்றனர். அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.. அரசியல் சூனியம் ஏற்படுத்தினாலும் சரி, பாஜகவோடும், பாமகவோடும், எந்த காலத்திலும் விசிக கூட்டணி வைக்காது” என்று திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார். திருமாவளவனின் இந்த பேச்சுதான், இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.

திடீரென கூட்டணி விஷயத்தை முன்வைத்து, திருமா பேச என்ன காரணம்? என்ற கேள்விகளும் வட்டமடிக்கின்றன.சில மாதங்கள் முன்புவரை, திமுகவுடன் பாமக நெருங்கி வருவதாக ஒரு பேச்சு எழுந்தது.. ஒருவேளை திமுகவுடன் கூட்டணிக்கு பாமக முயற்சிக்கிறதோ என்ற சந்தேகமும் நிலவியது.. ஆனால், அரசுக்கு எதிராக, நெய்வேலி விவகாரம் சூடுபிடிக்கவும், அப்படி ஒரு பேச்சே அடிபட்டுபோனது.. போதாக்குறைக்கு, வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தையும் பாமக கையில் எடுத்துவிட்டது.. இதனுடன், கள்ளச்சாராய பலி விவகாரம் வெடித்துவிடவும், திமுக அரசை வெளிப்படையாகவே விமர்சிக்க துவங்கிய பாமக. திமுகவை, பாமக வெளிப்படையாகவே விமர்சிக்கவும், ஒருவேளை அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியை புதுப்பிக்க பாமக அச்சாரம் போடுகிறதோ? என்கிற இன்னொரு வியூகம் சோஷியல் மீடியாவில் வட்டமடித்து வருகிறது.. ஆனால், பாமகவோ, இதுவரை கூட்டணி குறித்து எந்த பேச்சையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை..

ஒருமுறை பாமக தலைவர் அன்புமணியிடம், செய்தியாளர்கள் கூட்டணி குறித்து கேட்டபோது, “நீங்க என்னை எப்படி கேட்டாலும்சரி, கூட்டணி பற்றி எந்த முடிவையும் நாங்கள் இன்னமும் எடுக்கவில்லை” என்பதை திட்டவட்டமாகவும், கறாராகவும் கூறியிருந்தார். எனினும், பாமகவின் கூட்டணி என்பது மிகவும் கவனத்தை பெற்று வருகிறது..சமீபகாலமாகவே, திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி, வெளிப்படையாகவே, அரசை கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளது.. ஒவ்வொரு விஷயத்தையும் கேள்விகளால் துளைத்தெடுத்து வருகிறார் வேல்முருகன்.. வடமாவட்ட செல்வாக்கை ஓரளவு தக்க வைத்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்த முறை திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றும், அதிமுகவில் இணையவே வாய்ப்புள்ளதாகவும் சலசலக்கப்பட்டு வருகிறது.. அப்படியானால், திமுக கூட்டணியில், பாமக என்ட்ரி தருமோ என்ற துணைகேள்வியும் அரும்பி உள்ளது. தெளிவு: இப்படிப்பட்ட சூழலில்தான், திருமாவளவன் தன்னுடைய கூட்டணியை மறுபடியும் தெளிவுபடுத்தி உள்ளார்.. பாமக – திமுக கூட்டணி சாத்தியமா? என்ற பேச்சு அன்றே இணையத்தில் பரபரத்த நேரத்தில், கடலூரில் போராட்டத்தை பாமக அறிவிக்கவும் நிம்மதி பெருமூச்சுவிட்டது விசிக.. எனவேதான், திருமாவளவன் கடலூருக்கே சென்று அன்று பதிலளித்திருந்தார்.

அத்துடன், அன்று பாமக முன்னெடுத்த நெய்வேலி போராட்டத்துக்கும் பதிலடியை தந்திருந்தார்.குறிப்பாக, “என்.எல்.சி., விவகாரத்தில் விவசாயிகளுக்கு மன நிறைவு ஏற்படும் வகையில் திமுக தலைமையிலான கூட்டணிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. என்எல்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அகற்றப்பட வேண்டும் என்று பாமக சொல்வது நடைமுறைக்கு வராத செயல்திட்டம்.. போராட்டங்கள் வாயிலாக பாமக இருப்பதாக தன்னை காட்டிக்கொள்கிறது.. பாஜக, விசிக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது” என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.பாமகவின் என்எல்சி போராட்டத்தை விமர்சித்ததுடன், திமுகவின் கூட்டணியையும் இன்னொரு முறை உறுதிசெய்து திருமாவளவன் பேசியிருந்தது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.. அதுபோலவே இன்றைய தினமும் கூட்டணியை உறுதிசெய்துள்ளார் திருமாவளவன்.. இதை திமுகவும் கவனிக்காமல் இல்லை.. நிஜமாகவே பாமக யாருடன்தான் கூட்டணி வைக்க போகிறது? திமுக கூட்டணியில் இடம்பெற போவது யார்யார்? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *