தமிழ்நாடு தலைசிறந்த மாநிலம் – முதல்வர் ஸ்டாலின்

யார் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழ்நாடு தலை சிறந்த மாநிலமாக திகழ்வதாக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். அறிவும் திறமையும் இருந்தால் தமிழர்கள் எத்தகைய உயரத்தையும் அடையலாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஒரகடம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்று வரும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக தமிழாடு விளங்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.762.30 கோடி மதிப்பீட்டில், 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.ரோபோட்டிக்ஸ், இன்டஸ்ட்ரியல் ஆட்டோ மேஷன், மேனுபேக்சரிங் போன்ற நவீன திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. அட்வான்ஸ் மேனு பேக்சரிங், மின்சார வாகனங்களுக்கான மெக்கானிக் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இன்டஸ்ட்ரியல் பெயிண்டிங், அட்வான்ஸ் வெல்டிங் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை தொடக்கி வைத்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், டாடா டெக்னாலஜிஸ் நிறுவன தலைவர் சந்திரசேகர் பற்றி மாணவர்களுக்கு பெருமையுடன் விளக்கம் அளித்தார். தமிழ்நாட்டில் பிறந்து அரசு பள்ளியில் படித்து இன்றைய தினம் மிகப்பெரிய நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர் சந்திரசேகர் என்று கூறினார். தமிழ்நாட்டு மாணவர்கள் அவரை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், யார் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் யார் மறைத்தாலும் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் தலை சிறந்த மாநிலமாக திகழ்கிறது என்று கூறினார். தலைநிமிர்ந்து கம்பீரமாக தமிழ்நாடு நின்று கொண்டிருக்கிறது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் இங்கு தொடங்கப்பட்டு வருகின்றன. வங்கி, நிதி, காப்பீடு நிறுவனங்கள், ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், ஆடைகள் உற்பத்தி ஆகிய துறைகளில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளது. தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்தில் உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்கப்படாததால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையில் இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்கப்படாததால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். ஆளுநர் ஆர்.என். ரவி கூறிய கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *