மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் திடீர் வாபஸ் ஏன்?என்ன நடந்தது?
ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் விடாப்பிடியாக போராடி வந்த நிலையில் தற்போது போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அமைச்சர் அனுராக் தாகூருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்ட வாபசுக்கான பின்னணி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் பாஜக எம்பியாகவும் உள்ளார். இந்நிலையில் தான் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது வீராங்கனைகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.இந்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டு மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் போராட்டத்தை தொடங்கினர்.இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது டெல்லி போலீசார் போக்சோ உள்பட 2 வழக்குகள் பதிவு செய்தனர். ஆனாலும் கைது செய்யப்படவில்லை. இதனால் வீரர், வீராங்கனைகள் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது அங்கு பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் தரதரெவன இழுத்து கைது செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து அவர்கள் பதக்கங்களை ஹரித்வார் கங்கை நதியில் வீச முயன்றனர். விவசாய அமைப்பினர் அவர்களை தடுத்தனர்.
இதையடுத்து தங்களுக்கு நியாயம் கேட்டு டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். இதற்கிடையே தான் மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் பேச தயாராக இருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் ட்விட்டரில் கூறினார். இதையடுத்து மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் உள்ளிட்டவர்கள் அனுராக் தாகூரை சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை மொத்தம் 5 மணிநேரம் நடந்தது.இதையடுத்து 5 கோரிக்கைகளை வீரர், வீராங்கனைகள் முன்வைத்தனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
பிரிஜ் பூஷண் சரண் சிங் கைது செய்யப்பட வேண்டும். அவரது குடும்பத்தை சேர்ந்தவர் மல்யுத்த சம்மேளனத்தில் இடம்பெற கூடாது. மல்யுத்த சம்ளேனத்துக்கு நியாயமான தேர்தல் நடத்த வேண்டும். டெல்லியில் போராடியபோது போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு அனுராக் தாகூர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தை தற்காலிகமாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வாபஸ் பெற்றுள்ளனர். தங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஜூன் மாதம் 15ம் தேதி வரை மத்திய அரசுக்கு அவகாசம் வழங்கும் வகையில் இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜூன் மாதம் 15ம் தேதிக்கு பிறகும் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான விசாரணை முடிக்காமல் தங்களின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால் மீண்டும் போராட்டம் துவங்கும் வீரர், வீராங்கனைகள் எச்சரித்துள்ளனர்.