தமிழ் மண்ணில் மரியாதை ! ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

கிண்டியில் கட்டப்பட்டு உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 15 ஆம் தேதி சென்னை வர உள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசிய அவர், சென்னை கிண்டியில் கட்டப்பட்டு இருக்கும் பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வருகை தர அழைப்பு விடுத்தார்.

திமுக முன்னாள் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி பெயரில் கட்டப்பட்டு இருக்கும் அந்த மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் முர்முவும் சம்மதம் தெரிவித்தார். முதலமைச்சர் முக ஸ்டாலினின் அழைப்பை ஏற்ற திரௌபதி முர்மு ஜூன் 5 ஆம் தேதி சென்னை வருவதாக செய்திகள் வெளியாகின.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வரும் நிலையில், அதன் முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வேறு சில காரணங்களால் குடியரசுத் தலைவரின் அந்த பயண திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே ஜூன் 15 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மருத்துவமனை திறப்பு விழாவுக்காக சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட விழா ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்விலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *