பாஜக உடன் திமுக கூட்டணியா? வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை-மு.க.ஸ்டாலின்

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

கருணாநிதி காலத்தில் இருந்ததைப் போன்று, பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். வாஜ்பாய் தலைமையிலான அப்போதைய பாஜகவுக்கும், தற்போதைய பாஜகவுக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. பிரதமர் வேட்பாளராக மூன்றாவது முறையாக முன்னிறுத்தப்படுகிறார். பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்கட்சியினர் வியூகம் வகுத்து செயல்படுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்க பல மாநில முதல்வர்களும் தலைவர்களும் தயாராக இல்லை. எதிர்கட்சியினர் பல அணிகளாக பிரிந்திருப்பது பாஜகவிற்குத்தான் சாதகம்.தமிழ்நாட்டில் திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் இணைந்துள்ளனர், கர்நாடகாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் இருந்து திமுக உள்ளிட்ட பல கக்டசி தலைவர்களும் கர்நாடகாவிற்கு சென்று பிரச்சாரம் செய்தனர். சித்தராமையா பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் பங்கேற்றனர். அங்கே தமிழக முதல்வருக்கு மேடையில் சரியான மதிப்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனிடையே நீண்ட நாட்களாக பாஜக உடன் திமுக கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அதிமுக உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் சூசகமாக கூறினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். “மத்திய பாஜக அரசு சொல்கின்ற பணிகளை வாயை மூடி தன் தலையில் தூக்கிவைத்து திமுக அரசு செய்து வருகிறது. 39 எம்.பிக்களும் டெல்லி சென்று பிச்சை எடுக்கிறார்கள். மத்திய அமைச்சர்களிடம் கெஞ்சுவது தான் திமுகவின் சமுகநீதி என்று குற்றம் சாட்டினார்.லோக்சபா தேர்தலின் போது திமுக – பாஜக கூட்டணி அமைய உள்ளது. திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் ஓடப் போகிறார்கள். ஒன்று எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள், இல்லையென்றால் காங்கிரஸை கழற்றி விடுங்கள். ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் பதவி கொடுத்துவிடுவோம் என பாஜக திமுகவிடம் சொல்லிவிட்டது என்றும் கூறினார். சி.வி. சண்முகம் பேசியது திமுக கூட்டணி கட்சிகளிடையே அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த சூழ்நிலையில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார். கூட்டணிக்கு தலைமை தாங்குவார் என்றும் திமுக கட்சி தலைவர்கள் பேசி காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனிடையே தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு தமிழ் நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின். அதில் அவர், அதிமுக நான்கு அணிகளாக பிரிந்து கிடப்பதாகவும், அதனைப் பற்றி தாங்கள் கவலைப்படவில்லை என்றும் தெரிவித்தார். அவர்களது பலவீனத்தை வைத்து தாங்கள் அரசியல் செய்வதில்லை என்றும், தங்களது கொள்கையையும், தொண்டர் பலத்தையும் நம்பியே எப்போதும் செயல்பட உள்ளதாகவும் கூறினார்.

கருணாநிதி காலத்தில் இருந்ததைப் போன்று, பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார். வாஜ்பாய் தலைமையிலான அப்போதைய பாஜகவுக்கும், தற்போதைய பாஜகவுக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசியல் திமுக அங்கம் வகித்தது அதே போல மீண்டும் திமுக பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் செய்திகள் வெளியாகி வருவதால் அதனை மறுக்கும் விதமாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு பெருமைப்படத்தக்க வகையில் இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியதுபோல, இந்த முறையும் அதற்கான திட்டம் உண்டு. அதற்கான சூழல் அமையும்போது உரிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார். வடமாநில தொழிலாளர்களின் வருகையால், தமிழ்நாட்டுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என்றும் அவர் விளக்கம் அளித்தார். உலகின் எந்தப் பகுதியில் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம் என்று முதலமைச்சர் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *