3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

தமிழகத்தில் சிறப்பாக இயங்கி வரும் மூன்று மருத்துவக் கல்லூரிகளை முடக்க மத்திய பாஜக அரசு முனைந்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பழமை வாய்ந்த சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, திருச்சி மற்றும் தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ய முடிவு செய்திருப்பது அதிர்ச்சி தருகிறது. மத்திய பாஜக அரசின் இந்நடவடிக்கையால் இந்த மூன்று கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மருத்துக்கல்விக்கான 500 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தடைபடும் நிலைமை உருவாகி இருக்கிறது.

சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும மாணவர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ- மெட்ரிக் வருகைப் பதிவு, சிசிடிவி கேமராக்கள் போன்றவை முறையாக இல்லாததும், பராமரிக்கப்படாததும் அங்கீகாரத்தை ரத்து செய்ததற்குக் காரணம் என தேசிய மருத்துவ ஆணையம் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது.

மேற்கண்ட மருத்துவக்கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அங்கீகாரத்தை ரத்து செய்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது. மிகச் சதாரணமான காரணங்களைக் கூறி தமிழகத்தில் சிறப்பாக இயங்கி வரும் மூன்று மருத்துவக் கல்லூரிகளை முடக்க மத்திய பாஜக அரசு முனைந்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும். இதனை நியாயப்படுத்தவே முடியாது. எனவே மத்திய அரசு, சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவை கைவிட வேணடும் என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *