அடிக்கடி பழுதாகும் அரசு பேருந்துகள் – நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

-ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் அடிக்கடி பழுதாகி வருவதால், இது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மு.அ.பாரதி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ”கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட பணிமனைகளில் பெரும்பாலும் பழைய பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. நகரப்பேருந்துகளை, சிறப்பு பேருந்துகள் என குறிப்பிட்டு வேளாங்கன்னி, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மு.அ.பாரதி

இதனால் சாமான்ய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதே போல் பெண்களும், இலவச பேருந்து என கருதி அந்த பேருந்துகளில் ஏறி ஏமாற்றமடைகின்றனர். மேலும், கடந்த காலத்தை விட அண்மைக்காலமாக குறைந்தளவே பேருந்துகளை இயக்குவதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், வேலைக்கு செல்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் 5 பேருந்துகள் பழுதாகி, பிரதான உதிரிப் பாகங்கள் உடைந்து ஆங்காங்கே நின்று போனது. இப்பேருந்துகளுக்கு புதிய பாகங்கள் மாற்றப்படாததே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக ஓட்டுநர்கள், பேருந்தை நீண்ட தூரம் ஓய்வில்லாமல் இயக்குவதால், விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதனால், ஒட்டுநர்களுக்கு உரிய ஓய்வு அளிக்கப்பட வேண்டும். போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள நடத்துநர், ஒட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும், போக்குவரத்துத் துறை தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.” என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *